Published:Updated:

`கடத்தல் தங்கத்தில் மோசடி.. கடத்தி வந்தவர்கள் மீது தாக்குதல்!’ - ராமநாதபுரத்தில் சிக்கிய கும்பல்

கடத்தல் தங்கக் கட்டிகள்
கடத்தல் தங்கக் கட்டிகள் ( Representational Image )

கடத்தல் தங்கத்தை விற்பனை செய்யச் சென்றபோது, அதில் மூன்று கிலோ தங்கக்கட்டிகளுடன் இரண்டு கிலோ செம்பு கலந்த போலி தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரிஜினல் தங்கத்துக்கு பதிலாக அதிக செம்பு கலந்த போலி தங்கக்கட்டிகளைக் கொடுத்து மோசடி செய்த மூன்று பேரை காரில் கடத்தி, தாக்குதல் நடத்தியதாகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தல் தங்கத்தில் மோசடி.
கடத்தல் தங்கத்தில் மோசடி.
Representational Image

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் ரகுமான்கான். இவர், மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். இவரின் நண்பர் நாகப்பட்டினம் மாவட்டம், வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார். இவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக தங்கம் கடத்திவரும் கடத்தல் தொழிலில் அவ்வப்போது ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.

கைதான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்
கைதான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்
உ.பாண்டி

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி சிவக்குமார் கூறிய இலங்கையை சேர்ந்த தினேஷ் என்பவரிடமிருந்து ஐந்து கிலோ தங்கக்கட்டிகளை ரகுமான்கான் கடத்திவந்திருக்கிறார். அந்தக் கடத்தல் தங்கக்கட்டிகளை தொண்டி அருகேயுள்ள சோழியக்குடி கடற்கரைப் பகுதியில் காத்திருந்த, ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது அசாருதீன் என்பவரிடம் கொடுத்திருக்கிறார். இந்தக் கடத்தல் தங்கத்தை விற்பனை செய்யச் சென்றபோது, அதில் மூன்று கிலோ தங்கக்கட்டிகளுடன் இரண்டு கிலோ செம்பு கலந்த போலி தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.இதனால், ஒரிஜனல் தங்கத்துக்கு பதிலாக அதிக செம்பு கலந்த போலி தங்கத்தைக் கொடுத்து மோசடி செய்த ரகுமான்கான் மீது சிவகுமார் ஆத்திரமடைந்தார்.

ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவர் கைது

இதையடுத்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரகுமான்கானை தேவிபட்டினம் வரும்படி கூறியிருக்கிறார் சிவகுமார். தேவிபட்டினம் வந்த ரகுமான்கானையும் அவருடைய நண்பர்களையும், தனது நண்பர்கள் ராவுத்தர் கனி, அயூப் கான் ஆகியோருடன் காரில் கடத்தி சென்ற சிவகுமார், அவர்களை எலந்தைக் கூட்டம் கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் அடைத்துவைத்து தாக்கியதுடன், ஒரிஜினல் தங்கக்கட்டிகளை தரக் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

கைதான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்
கைதான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்
உ.பாண்டி

இந்தநிலையில் அங்கிருந்து தப்பிய ரகுமான் கான் இது தொடர்பாக தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நாகப்பட்டினம் சிவகுமார், ராமநாதபுரம் முகமது அசாருதீன், வேதாளை இஸ்மாயில் சபீர், பாரதி நகர் யாசின், ஆவுடையார் கோவில் மருதுபாண்டி ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு