Published:Updated:

`முதலீட்டுக்கு ஏற்ப பணம்; வசூலான ரூ.100 கோடி!' -ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆசிரியரின் `சதுரங்க வேட்டை’

Representational Image
Representational Image

ஆசிரியர் ஆனந்த் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்திய நீதிமணியிடம் பணம் முதலீடு செய்த துளசி மணிகண்டன் உள்ளிட்டோர் தங்கள் பணம் குறித்துக் கேட்டுள்ளனர்.

அதிகப் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட இருவரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்தனர். சினிமா படப் பாணியில் நடந்த இந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமணி
நீதிமணி

ராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளம் பகுதியில் வசிப்பவர் துளசி மணிகண்டன். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், சிக்கல் அருகே உள்ள தத்தங்குடியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஆனந்த் என்பவருடன் நண்பராகி உள்ளார். நாளடைவில் இருவரும் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய நிலையில் ஆசிரியர் ஆனந்த், தனது நண்பர் நீதிமணியுடன் இணைந்து சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிகப் பணம் கிடைக்கும் என துளசி மணிகண்டனிடம் கூறியுள்ளார்.

பஜார் காவல் நிலையம்
பஜார் காவல் நிலையம்

இந்தத் தூண்டிலில் சிக்கிய துளசி மணிகண்டன் தனது மனைவி ஐஸ்வர்யா பெயரில் ரூ.12 லட்சத்தைக் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆனந்தின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதுதவிர தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இங்கு முதலீடு செய்ய வைத்துள்ளார். துளசி மணிகண்டனை நம்பி அவரது உறவினர்கள் சுமார் 3 கோடி ரூபாய் வரையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் சில மாதங்கள் அந்த முதலீட்டிற்கான வட்டித் தொகையினை ஆசிரியர் ஆனந்த் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பணம் முதலீடு செய்தவர்களுக்கான லாபத் தொகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர் ஆனந்த் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்திய நீதிமணியிடம் துளசி மணிகண்டன் உள்ளிட்டோர் தங்கள் பணம் குறித்துக் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு முறையான பதில் சொல்லாத நீதிமணியும் ஆனந்தும் முதலீட்டாளர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகாரளித்தனர்.

ஆசிரியர் ஆனந்த்
ஆசிரியர் ஆனந்த்

இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார், நிதி நிறுவனம் நடத்தி வந்த நீதிமணி, அவரது மனைவி மேனகா, ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமணியையும் ஆசிரியர் ஆனந்தையும் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரிடம் பணத்தாசையைத் தூண்டி சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரால் கூறப்படும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு