ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதிக்குக் கடந்த சில நாள்களுக்கு முன் சுற்றிப்பார்க்கச் சென்ற அருப்புக்கோட்டை பாளையம்பட்டியைச் சேர்ந்த காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்த கும்பல் ஒன்று, காதலன் கண்முன்னே இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மேஸ்வரன், விருதுநகர் மாவட்டம், நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னதாக இவர்களைக் கைதுசெய்ய போலீஸார் விரட்டிச் செல்கையில் வேப்பம்குளம் அருகே போலீஸாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதன், தலைமை காவலர் கருப்பசாமி ஆகியோரை, குற்றவாளிகள் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது தற்காப்புக்காக போலீஸாரும் அருகே கிடந்த கட்டை மற்றும் கம்புகளால் திருப்பி தாக்கியதில் குற்றவாளிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காயம்பட்ட போலீஸாரும், குற்றவாளிகளும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட தினேஷ்குமார், பத்மேஸ்வரனிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தாங்க முடியாத காதலன், கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சையின் பலனாகக் காப்பாற்றப்பட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண்ணும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் காப்பற்றப்பட்டு, இளம்பெண்ணும் வீடு திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காதலனும் காதலியும் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.