ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் வருகை தந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், தங்கம், வைரம் ஆகியவை கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டுச் சென்றார்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராமநாதபுரம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பசும்பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் நிற்காமல் சென்றுள்ளார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
அவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்து அவர் வைத்திருந்த பாலிதீன் கவரைப் பிரித்து சோதனை செய்தனர். அதில் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கீழக்கரையைச் சேர்ந்த யூசுப் சுலைமான் என்பதும், ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வைரக் கற்கள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த வைர கற்களை கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் கொடுத்து அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். மேலும் வைர வியாபாரிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் பழைய பேருந்து நிலையம் அருகே நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடிக்க முயன்றபோது ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து மற்றொரு நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கேரளா மாநிலம் நெடுமங்கலம் பண்ணவயல்வீடு பகுதியைச் சேர்ந்த செபீக் என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா ஆயிலைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஜாவீத் ரகுமானை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக்கிடம் கேட்டபோது, ``டிஜிபி அறிவுறுத்தலின் பெயரில் ராமநாதபுரம் முழுவதும் கடத்தல் சம்பவங்களை தடுக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாம் ரக வைர கற்களும், மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக `ஆஷிஷ்' எனப்படும் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயுலும் கடத்திச் செல்ல முயன்றதை தடுத்து பறிமுதல் செய்துள்ளோம்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.