Election bannerElection banner
Published:Updated:

கோவைக்கு வேலைக்குச் சென்ற இராமநாதபுரம் வாலிபர்... பரமக்குடியில் சடலமாக மீட்பு! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

வேலூர் மாவட்டத்தைக் கலக்கும் ஆபாச ஆடியோ, பரமக்குடியில் மர்மமான முறையில் இறந்த வாலிபர் என அதிரச் செய்யும் க்ரைம் செய்திகள்...

மணல் கடத்தல், நில அபகரிப்பு, குட்கா என அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் மீதான புகார்கள் நீண்டுகொண்டே போகின்றன. அதுபோன்ற ஒரு புகாரில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ லோகநாதனும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ லோகநாதனும் கட்சியில் அவரின் கீழுள்ள காவனூர் ஊராட்சி அ.தி.மு.க செயலாளர் சேகரும் மணல் கடத்தல் விவகாரத்தில் ஆபாசமாகத் திட்டிக்கொள்ளும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

லோகநாதன் எம்.எல்.ஏ, சேகர்
லோகநாதன் எம்.எல்.ஏ, சேகர்

ஆடியோவில் சேகரிடம் பேசும் எம்.எல்.ஏ லோகநாதன், ``மணல் விவகாரத்தில் எம்.எல்.ஏ-வுக்கும் கமிஷன் போகுதுனு நீதான் டீக்கடை, டீக்கடையா சொல்கிட்டு சுத்துறியாமே? அ.தி.மு.க-காரங்க ஒற்றுமையில்லாமல் இருக்கறீங்க. இப்படியிருந்தா உள்ளாட்சித் தேர்தல்'ல தலைவர், கவுன்சிலர் பதவிக்கு எப்படி வருவீங்க” என்று கொந்தளிக்கும் லோகநாதன் நடுநடுவே ஆபாச வார்த்தைகளால் வறுத்து எடுக்கிறார். ``தி.மு.க-காரனுங்க மணல் ஓட்டுறானுங்க. அதை போட்டுக் கொடுய்யா. விசுவாசமா இருக்க கத்துக்க. இல்லைனா டெண்டர் வேலை எதுவுமே உனக்குக் கிடைக்காது” என்று மிரட்டவும் செய்கிறார்.

`சூரிய கிரகணத்தைப் பார்க்க விலையுயர்ந்த ஜெர்மன் கண்ணாடி!'- மோடி பகிர்வால் புதிய சர்ச்சை #CoolestPM

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய காவனூர் ஊராட்சி அ.தி.மு.க செயலாளர் சேகர், ``என்ன பத்தி, மத்தவங்ககிட்ட கிண்டலா சொல்லி நீதான் கைதட்டி சிரிக்கிறதா சொல்றாங்க. நீயெல்லாம் ஒரு எம்.எல்.ஏ-வாய்யா. கெட்ட வார்த்தையிலேயே பேசிகிட்டு சுத்துற. என்ன மாதிரி கட்சிக்காரன் இல்லைன்னா. நீ எம்.எல்.ஏ ஆகியிருப்பியா, மணல் ஓட்டுற எம்.எல்.ஏ-னு டீக்கடை டீக்கடையா எல்லோரும்தான் பேசுறாங்க” என்று கொந்தளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து, இருவரும் 15 நிமிடங்களுக்கு உதிர்த்த வார்த்தைகள் எல்லாம் காதுகொடுத்து கேட்க முடியாத ரகம். இந்த ஆபாச அர்ச்சனை ஆடியோ வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் செல்போன்களில் ஒலித்து, இப்போது மாவட்டம் முழுவதும் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

பக்தர்கள் வேடத்தில் கஞ்சா கடத்தல்... விழித்துக்கொள்ளுமா தூத்துக்குடி போலீஸ்?#TamilnaduCrimeDiary

இந்த ஆடியோ குறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ லோகநாதனின் செல்போன் எண்ணுக்கு இரண்டு முறை தொடர்புகொண்டோம். அழைப்பைத் துண்டித்த அவர் ``நான், பிஸியாக இருக்கிறேன்” என்று மெசேஜ் மட்டும் அனுப்பினார். அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

வாலிபர் மர்ம மரணம்
கோயம்புத்தூருக்கு வேலைக்காகச் சென்ற வாலிபர் மர்மமான முறையில் பரமக்குடியில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தட்டாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜின் மகன் வினோத் (30). இவர் பரமக்குடி அருகே உள்ள பொதுவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனத்தில் போதிய பணி இல்லாததால் வினோத் வேலைக்குச் செல்லவில்லை. இந்நிலையில் வினோத்துடன் வேலைபார்த்த டேவிட் என்பவர், கடந்த டிசம்பர் 7-ம் தேதி வினோத்தின் தந்தைக்குப் போன் செய்து கோயம்புத்தூரில் வேலை உள்ளதாகவும் அதற்கு வினோத்தை அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து மறுநாள் வினோத் கோயம்புத்தூருக்குக் கிளம்பியுள்ளார்.

கோவைக்குக் கிளம்பிய வினோத்திடமிருந்து அதன் பிறகு எந்தத் தொடர்பும் குடும்பத்தாருடன் இல்லை. வினோத்தின் போனுக்கு அவர் தந்தை ஜெயராஜ் அழைத்தபோது, போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது. இதையடுத்து வேலைக்கு அழைத்த டேவிட்டை தொடர்பு கொண்டபோது, பயணக் களைப்பில் வினோத் தூங்குவதாகவும் காலையில் பேசச் சொல்வதாகவும் கூறியுள்ளார். அடுத்த நாள் டிசம்பர்10-ம் தேதி காலை வினோத்தின் தந்தை ஜெயராஜை தொடர்புகொண்ட டேவிட், பரமக்குடி பொதுவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி ரூமில் வினோத் இறந்துகிடப்பதாகக் கூறவும், வினோத்தின் பெற்றோர் அலறித்துடித்து பரமக்குடி சென்றுள்ளனர். அங்கு சிறு காயங்களுடன் வினோத் இறந்து கிடந்துள்ளார்.

சடலமாக வினோத்
சடலமாக வினோத்

கோவைக்குச் செல்வதாக சொல்லிச் சென்றவர் பரமக்குடியில் எப்படி இறந்தார், எதற்காக அங்கு சென்றார், இதுகுறித்து முதல்நாள் போனில் பேசிய டேவிட் சொல்ல மறுத்தது ஏன் என வினோத்தின் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் எழுப்புகின்றனர். வினோத் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் வேலைக்கு அழைத்த டேவிட் மீது சந்தேகம் இருப்பதாகவும் எமனேஸ்வரம் போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர். வினோத்தின் மரணத்தை சந்தேக மரணமாகப் புகார் பதிவு செய்த போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. வினோத்தின் மரணம் தட்டாந்தோப்பு கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு