Published:Updated:

`பணம் கொடுக்காவிட்டால் புகைப்படங்களைப் பதிவிடுவேன்!' - சென்னைப் பெண்ணின் புகாரால் சிக்கிய பட்டதாரி

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம் ( மாதிரி படம் )

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.

பெண்களின் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்ட வாலிபரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டல்
பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டல்
விகடன்

கொரானோ வைரஸ் தாக்குதலின் பிடியில் இருந்து எப்படி விடுபடுவது எனத் தெரியாமல் உலகமே ஊரடங்கினுள் முடங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாகப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், பாலியல் சீண்டல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் விஞ்ஞான வளர்ச்சியைத் துணையாக வைத்துக்கொண்டு அப்பாவி பெண்களை மிரட்டி பணம் பறிப்பதும், பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படுத்தும் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயலில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் ஒருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (23). பொறியியல் பட்டதாரியான இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் பெண்கள் சிலரை தொடர்புகொண்ட சிவக்குமார் அப்பெண்களிடம், `உங்களின் ஆபாச படங்கள் என்னிடம் உள்ளன. அதைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றாமல் இருக்க நான் கேட்கும் தொகையைத் தர வேண்டும்’ எனக் கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக மொபைல் எண்ணில் (94899 19722) தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண் கொடுத்த தகவல்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் பட்டதாரி வாலிபரான சிவக்குமார் சிக்கினார்.

சிவக்குமார்
சிவக்குமார்
உ.பாண்டி

இதையடுத்து அவரைச் சுற்றி வளைத்த உச்சிப்புளி போலீஸார், அவரிடமிருந்து மடிக்கணிணி, மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரது சமூகவலைதள கணக்குகளையும் முடக்கினர். பெண்களை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்ட சிவக்குமாரிடம் தற்போது சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இதே போன்று ஒரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரி இளைஞர்கள் தங்களின் திறமைகளை நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தாமல் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டு சிக்கிக்கொள்வது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு