ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்குத் தோப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் மனைவி அனிதா (31) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நரேஷ் ஹைதராபாத்தில் பணியாற்றிவருகிறார்.
அனிதாவுக்கு எதிர்வீட்டில் வசித்துவரும் மனோஜ்குமார் (26) என்ற இளைஞருடன் திருமணம் மீறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையறிந்த அனிதாவின் தந்தை முத்து, கணவர் நரேஷ் ஆகியோர் அவரைக் கண்டித்திருக்கின்றனர். ஆனால், அனிதா அந்த இளைஞருடன் தொடர்ந்து பழகிவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் அனிதா மனோஜ்குமாரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, தங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக அனிதா இருவரையும் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அனிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

இந்த நிலையில், அனிதா தற்போது திருமணம் செய்துகொண்ட மனோஜ்குமாருக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே செய்யப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை நீக்க முடிவுசெய்திருக்கிறார். அதன்படி, அனிதா ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மனோஜ்குமாருடன், தன் இரண்டு குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅறுவை சிகிச்சைக்குத் தயாரான அனிதா, தன் இரு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரத்தடியில் விட்டுச் சென்றிருக்கிறார். காலையிலிருந்து சாப்பிடாமல் பசியிலிருந்த இரு குழந்தைகளும், இரவு அங்கிருந்த மனோஜ்குமாரிடம் சாப்பாடு வாங்கித் தரும்படி கேட்டு அழுதுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமார், இரு குழந்தைகளையும் மருத்துவமனையின் மொட்டைமாடிக்குக் கூட்டிச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ஒரு குழந்தை அழுதுகொண்டே கீழே ஓடி வந்து அங்கிருந்த பொதுமக்களிடம் தங்களை ஒருவர் அடிப்பதாகக் கூறியிருக்கிறது.

அதைக் கேட்டு சிலர் மொட்டைமாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கு மனோஜ்குமார் குழந்தையை அடிப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளனர். அப்போது இருவரும் தன்னுடைய குழந்தைகள் என மனோஜ்குமார் கூறியுள்ளார். ஆனால், குழந்தைகள் இருவரும், `இவர் எங்கள் அப்பா கிடையாது... வேறு ஒருவர்' என அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மனோஜ்குமாரைச் சரமாரியாகத் தாக்கி, மொட்டைமாடியிலிருந்து கீழே இழுத்து வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் நடத்திய விசாரணையில், அனிதா மனோஜ்குமாருடன் அறுவை சிகிச்சை செய்ய வந்திருப்பது தெரியவந்தது. மேலும், அனிதாவின் முதல் கணவர் நரேஷுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளைத் துரத்தியடிக்க, மனோஜ்குமார் அவர்களை அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து அனிதாவின் தந்தை முத்துவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அரசு மருத்துவமனைக்கு வந்த முத்து, ``அனிதாவை மனோஜ்குமாருடன் அனுப்பிவிடுங்கள். இரண்டு குழந்தைகளை மட்டும் என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். நான் அவர்களைப் பார்த்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்தியநாராயணனுக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சத்தியநாராயணனிடம், ``குழந்தைகள் என்னுடனேயே இருக்கட்டும். நான் மனோஜ்குமாருடன் சேர்ந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன்" என அனிதா தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அனிதாவின் தந்தை முத்து, ``ஏற்கெனவே மனோஜ்குமார் குழந்தைகள் இருவரையும் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ய இரண்டு முறை முயன்றுள்ளார். அதற்கு என் மகள் அனிதாவும் உடந்தையாக இருந்தார்" என்று தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், குழந்தைகளை முத்துவிடம் ஒப்படைத்துவிட்டு, வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனிதா, மனோஜ்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது.
குழந்தைகள் நல வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனோஜ்குமார், அனிதா மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குழந்தைகள் நல அமைப்பு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.