Published:Updated:

வரதட்சணைக் கொடுமை; குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்!- கணவர் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

தற்கொலை
தற்கொலை ( விகடன் )

மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ரேகா, தன் இரு குழந்தைகளுடன் தனது வீட்டின் பின்புறம் இருந்த ரயில் பாதையில் காத்திருந்துள்ளார். அந்நேரத்தில் அவ்வழியே வந்த ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

வரதட்சணைக் கொடுமையால் இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் வழக்கில், அவரின் கணவர் மற்றும் மாமனார், மாமியாருக்கு நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தற்கொலை வழக்கில் தண்டனை பெற்ற பழனி
தற்கொலை வழக்கில் தண்டனை பெற்ற பழனி
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது எஸ்.கே. ஊரணி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜாக்கிளி மகள் ரேகாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் பழனிக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வைஷ்ணவி, வைசாலி என இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், வரதட்சணைக் கேட்டு ரேகாவை அவரின் கணவர் மற்றும் மாமனார் மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் ரேகா தன் இரு குழந்தைகளுடன் தன் தந்தை வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ரேகா, தன் இரு குழந்தைகளுடன் தனது வீட்டின் பின்புறம் இருந்த ரயில் பாதையில் காத்திருந்துள்ளார். அந்நேரத்தில் அவ்வழியே வந்த ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார், மூவரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சந்திரன் - ஆறுமுகம் அம்மாள்
சந்திரன் - ஆறுமுகம் அம்மாள்
உ.பாண்டி

விசாரணையில் ரேகாவை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாகக் கணவர் பழனி, மாமனார் சந்திரன், மாமியார் ஆறுமுகம் அம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், ரேகாவின் கணவர் பழனி மற்றும் சந்திரன், ஆறுமுகம் அம்மாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு