Published:Updated:

`தொழிலில் நஷ்டம்; நகைகளை அடமானம் வைத்துவிட்டு திருடுபோனதாகப் புகார்!'- வியாபாரி எடுத்த விபரீத முடிவு

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்

போலீஸார் அந்த நபரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபருக்கு திருட்டில் தொடர்பு இல்லை என்பதை போலீஸார் உறுதிசெய்த நிலையில், மீண்டும் குத்புதீன் வீட்டினரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிக்க, நகைகளை அடகு வைத்துவிட்டு, திருடு போய்விட்டதாக நாடகமாடிய வியாபாரி, போலீஸ் விசாரணையில் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

வருமானவரித்துறை அதிகாரிபோல் வேடமிட்டு கொள்ளை...சிக்கிய முன்னாள் தலைமைக் காவலர்! #TamilnaduCrimeDiary

ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் குத்புதீன். இவர், ராமநாதபுரம் சாலைத் தெருவில் சொந்தமாக துணிக்கடை நடத்திவருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி, இவரது வீட்டிலிருந்து 126 பவுன் நகைகள் திருடு போனதாக போலீஸில் புகார் அளித்தார். உச்சிப்புளி காவல் நிலையத்தில் அளித்த அந்தப் புகாரில், நான் கடைக்குச் சென்றிருந்தபோது, என் மனைவி நசீரா வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை எனக் கூறியதைத் தொடர்ந்து, வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறை பீரோவில் வைத்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டதாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து, போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், குத்புதீன் வீட்டில் ஆய்வு செய்ததுடன் அந்தப் பகுதியிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதிக் கட்டத்தின் போது அங்கு வந்த குத்புதீன், நகைகள் திருடு போனது குறித்து போலீஸார் முன் கதறி அழுதபடி இருந்துள்ளார். இந்நிலையில், தடயவியல் ஆய்வில் தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. மேலும், நகை திருடு போனதாகச் சொல்லப்படும் வீட்டின் கதவு, பீரோ, பீரோவின் லாக்கர் என எதுவும் உடைக்கப்படாமலே இருந்துள்ளது. இதனால் போலீஸாருக்கு குத்புதீன் வீட்டில் இருந்தவர்கள்மீது சந்தேகம் எழுந்தது.

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்

அப்போது குத்புதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது வீட்டின் அருகில் உள்ள ஒருவர், வீட்டை நோட்டம் பார்த்து வந்ததாகவும், அவர்மீது தனக்கு சந்தேகம் இருந்ததாகவும், இதனால் அவரைத் தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கேட்டும் அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, போலீஸார் அந்த நபரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இல்லை என்பதை போலீஸார் உறுதிசெய்த நிலையில், மீண்டும் குத்புதீன் வீட்டினரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நகை திருடுபோன இரு தினங்கள் கழித்து குத்புதீன் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. சில நாள்கள் கடந்த நிலையில், குத்புதீன் நடத்தி வந்த துணிக்கடையை அவரது உறவினர்கள் சுத்தம் செய்தனர். அங்கு இருந்த குத்புதீனின் வங்கிக் கணக்கு புத்தகங்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளனர். அந்த வங்கிக் கணக்கு புத்தகங்களை ஆய்வு செய்தபோது, குத்புதீன் வங்கிகளில் நகைகளை அடகுவைத்து கடன் பெற்றிருந்தது தெரியவந்தது. அதுகுறித்து நடந்த விசாரணையில், குத்புதீன் அடகு வைத்த நகைகள்தான், அவரது வீட்டில் இருந்து திருடுபோனதாகச் சொல்லப்பட்ட நகைகளே எனத் தெரியவந்தது.

Representational Image
Representational Image

துணிக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிக்க, குத்புதீன் தன் மனைவிக்குத் தெரியாமல் நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்ததும், ஒரு கட்டத்தில் மனைவியை சமாளிக்க அந்த நகைகள் திருடு போனதாகவும் குத்புதீன் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் தனது குட்டு அம்பலமாகிவிடுமோ எனப் பயந்து, அவர் தற்கொலை செய்துகொண்ட சோகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு