Published:Updated:

`இலங்கை தங்கக்கட்டி; நகைகளாக மாற்றிய கும்பல்! - வாகன சோதனையில் சிக்கிய ராமநாதபுரம் கும்பல்

தங்கத்தைப் பதுக்கியவர்களைப் பிடிக்க எஸ்.பி வருண்குமார் 3 தனிப்படைகளை நியமித்தார். இதில் சுந்தரமுடையான் பகுதியில் வந்த வேன் ஒன்றை தனிப்படையினர் சோதனையிட்டனர்.

போலீஸ் கைப்பற்றிய நகை மற்றும் பணம்
போலீஸ் கைப்பற்றிய நகை மற்றும் பணம்

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை, உரியவரிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றி அபகரித்துக்கொண்ட கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் போலீஸ் சோதனையின்போது சிக்கினர். அவர்களிடமிருந்து 185 பவுன் நகைகளும் ரூ.10 லட்சமும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தங்க நகைகளுடன் போலீஸ்
தங்க நகைகளுடன் போலீஸ்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால், குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி தலைமன்னார் கடற்பகுதிக்குச் சென்று 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளனர்.

ஆனால், கரைக்கு வந்த தங்கம், அதை வாங்கிவரச் சொன்ன நபரின் கைகளுக்குப் போகவில்லை. மாறாக உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த முனியய்யா என்பவரிடம் அந்தத் தங்கத்தை விற்பனை செய்ய கொடுத்துவிட்டு, தங்கத்தைக் கடத்தி வரும் வழியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள் என நாடகமாடி கடத்தி வந்த தங்கத்தை அபகரித்துள்ளனர். இது தொடர்பான செய்தியை கடந்த நவம்பர் 29 அன்று விகடன் இணையதளத்தில் '`திருடனுக்கு தேள் கொட்டிய கதை!'- கரைக்கு வந்தும் கைக்கு வராத ரூ.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம்'' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

போலீஸ் எஸ்.பி வருண்குமார்
போலீஸ் எஸ்.பி வருண்குமார்

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் மன்னார் வளைகுடாவில் உள்ள மனோலி தீவில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது அந்தத் தீவை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் கடந்த மாதம் 11-ம் தேதி தலைமன்னார் கடற்பகுதிக்குச் சென்று 2 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, தங்கத்தைப் பதுக்கியவர்களைப் பிடிக்க எஸ்.பி வருண்குமார் 3 தனிப்படைகளை நியமித்தார். இதில் சுந்தரமுடையான் பகுதியில் வந்த வேன் ஒன்றை தனிப்படையினர் சோதனையிட்டனர். அந்த வேனில் 53 பவுன் தங்க நகைகள் மற்றும் 4.73 லட்சம் ரொக்கமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், வேனில் இருந்த பெருங்குளம் ரஞ்சித், விஜய், காளிராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை நகைகளாக மாற்றியது தெரியவந்தது.

போலீஸ் கைபற்றிய பணம்
போலீஸ் கைபற்றிய பணம்

இதையடுத்து ரஞ்சித் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் அங்கிருந்த 132 பவுன் நகை மற்றும் 5.36 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீஸார் ஒட்டுமொத்தமாக 189 பவுன் நகைகள், 209 கிராம் வெள்ளி நகைகள், ரொக்கமாக 10,15,500 ரூபாயையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தெரிவித்தார்.

இக்கடத்தலில் தொடர்புடைய பாபு, பிரவீன், மாசி, மகேந்திரன், உதயபிரசாத், கோபி, புலிப்படை கணேசன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், தங்கக் கடத்தலின் முக்கிய நபரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்படையை அமைத்துள்ளார்.