Published:Updated:

`புதையல்... சாமி சிலைகள்; லட்சக் கணக்கில் பண மோசடி!’ - ராமநாதபுரம் அருகே வி.ஏ.ஓ உட்பட 5 பேர் கைது

மீட்கப்பட்ட சாமி சிலைகளுடன் எஸ்.பி வருண்குமார்.
மீட்கப்பட்ட சாமி சிலைகளுடன் எஸ்.பி வருண்குமார். ( உ.பாண்டி )

முதுகுளத்தூரில் மாந்திரீகம் செய்து வரும் செந்தில் என்ற செல்வகுமாரை அணுகியுள்ளார். விஷயத்தை அறிந்த செந்தில், தூத்துக்குடி சாமியார் அருள்சாமியுடன் சேர்ந்துகொண்டு செல்லப்பாண்டியனை ஏமாற்றத் திட்டமிட்டுள்ளனர்.

மாந்திரீகத்தின் மூலம் புதையல் எடுத்து தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து சில சிலைகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதையல் மோசடி - சிக்கிய சிலைகள்
புதையல் மோசடி - சிக்கிய சிலைகள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள பேரையூர் அருகில் உள்ளது ஆனையூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் தலையாரி மகாதேவனுடன் ஏனாதியில் உள்ள முத்து என்ற பெண் சாமியாரிடம் குறிபார்க்கச் சென்றுள்ளனர். இவர்களது அறியாமையைப் பயன்படுத்திக்கொண்ட பெண் சாமியார் முத்து, ``உன் வீட்டருகே புதையல் உள்ளது. அதை நான் எடுத்து தருகிறேன். அதற்கு ரூ.30,000 செலவாகும்'' எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே வறுமையில் உள்ள தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறி குறி கேட்கச் சென்றவர்கள் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் மகாதேவன், தோப்படைபட்டியைச் சேர்ந்த வி.ஏ.ஓ செல்லப்பாண்டியனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். செல்லப்பாண்டியன், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் என்பவருன் சேர்ந்து தூத்துக்குடியில் மாந்திரீகம் செய்து வரும் அருள்சாமி என்பவரிடம் இந்தப் புதையலை எடுக்க உதவி கேட்டுள்ளனர். அருள்சாமியோ, புதையல் இருப்பது உண்மை. அதை எடுக்க ரூ.3 லட்சம் செலவாகும் எனக் கூறியதுடன் ரூ.2 லட்சம் வரை பணத்தைப் பெற்றுள்ளார். பணத்தை வாங்கியவுடன் ஆனையூர் வந்த அருள்சாமி, அப்பகுதியில் உள்ள நிலம் ஒன்றில் பூஜைகள் நடத்தியுள்ளார்.

சாமியார் செல்வகுமார்
சாமியார் செல்வகுமார்
உ.பாண்டி

இதனிடையே சாமியார் அருள்சாமி மீது செல்லப்பாண்டியனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து முதுகுளத்தூரில் மாந்திரீகம் செய்து வரும் செந்தில் என்ற செல்வகுமாரை அனுகியுள்ளார். விஷயத்தை அறிந்த செந்தில், தூத்துக்குடி சாமியார் அருள்சாமியுடன் சேர்ந்துகொண்டு செல்லப்பாண்டியனை ஏமாற்றத் திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே பூஜைகள் செய்த ஆனையூரில் மீண்டும் பூஜை நடத்தியதுடன், செல்லப்பாண்டியனுக்குத் தெரியாமல் அந்த நிலத்தில் விநாயகர், சிவலிங்கம், நந்தி, லெட்சுமி உள்ளிட்ட 6 ஐம்பொன்னாலான சிலைகளைப் புதைத்து வைத்துள்ளனர்.

சிலநாள்கள் கழித்து அங்கு வந்த சாமியார்கள் இருவரும் ஏற்கெனவே தாங்கள் புதைத்து வைத்திருந்த சிலைகளை வி.ஏ.ஓ செல்லப்பாண்டியனிடம் எடுத்துக் கொடுத்துள்ளனர். இதை வாங்கிய அவர், தோப்படைப்பட்டியில் சிலைகளைப் புதைத்துவிட்டு சிலைகளை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பெண் சாமியார் முத்து
பெண் சாமியார் முத்து
உ.பாண்டி

இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கமுதி ஏ.எஸ்.பி விவேக் ஜாரல், முதுகுளத்தூர் டி.எஸ்.பி ராஜேஷ், கமுதி டி.எஸ்.பி மகேந்திரன், தனிப்படை எஸ்.ஐ திவாகர் ஆகியோரைக் கொண்ட தனிப்படை இது குறித்து விசாரணை நடத்தினர்.

முருகராஜ்
முருகராஜ்
உ.பாண்டி

இந்த விசாரணையைத் தொடர்ந்து தோப்படை பட்டியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகள், தகடு, முத்துக்கள், சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை மீட்டனர். இது தொடர்பாக சாமியார் செந்தில், பெண் சாமியார் முத்து, சிலைகளைப் பதுக்கிய வி.ஏ.ஓ செல்லப்பாண்டியன், முருகராஜ், மகாதேவன் ஆகியோரை கைது செய்ததுடன் தலைமறைவான தூத்துக்குடி சாமியார் அருள்சாமியைத் தேடி வருகின்றனர். புதையல் ஆசை காட்டி பணம் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு