Published:Updated:

`சனிக்கிழமை மட்டும்தான் டார்கெட்!' - ராமநாதபுரத்தில் இப்படியும் சில திருடர்கள்

இரா.மோகன்
உ.பாண்டி

ராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து வார இறுதி சனிக்கிழமையில் திருடி வந்த கொள்ளையர்கள மூன்று பேரை காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் பிடித்தனர்.

திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினிகள்.
திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினிகள்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவில் செல்போன், கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் அதிகளவில் திருடு போவதாகத் திருப்புலாணி போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து சனிக்கிழமை திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், கிராமங்களின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து திருடர்களைப் போலீஸார் தேடி வந்தனர்.

போலீஸாரிடம் பிடிபட்ட சனிக்கிழமை திருடர்கள்.
போலீஸாரிடம் பிடிபட்ட சனிக்கிழமை திருடர்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு திருப்புலாணியை அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டி ஒன்றில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு லேப்டாப், 10,000 பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளார். அந்த நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து திருப்புலாணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது சிசிடிவி-யில் பதிவான நபர், இதேபோல் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் திணைகுளம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடியபோது சிசிடிவி-யில் பதிவான காட்சியில் உள்ளே வரும் அதே நபர் எனத் தெரியவந்தது. இதையடுத்து திருடனின் புகைப்படங்களை வைத்து அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிற்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் அங்கு சென்றனர். கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது,

கைது
கைது

போலீஸாரைக் கண்டதும் திருடர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைத் துரத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரனையில் சின்னசேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அழகன்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன், முசிறியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூவருக்கும் திருச்சி சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருட்டின்போது செல்போன், லேப்டாப், கேமரா ஆகியவை மட்டும் குறி வைத்து திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சனிக்கிழமை திருடர்கள் மூவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.