Published:Updated:

`சில்லறை இருக்கா..?’ - ராமநாதபுரம் வங்கியில் நூதன மோசடி... சிக்கிய விழுப்புரம் பெண்கள்

பணம் திருட்டு
பணம் திருட்டு ( Representational Image )

உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து, வங்கியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் பதிவான காட்சிகளைக்கொண்டு நூதன முறையில் பணம் திருடிய கும்பலைத் தேடிவந்த நிலையில், போலீஸாரிடம் நான்கு பெண்களும் சிக்கினர்.

ராமநாதபுரம் அருகே வங்கிக் காசாளரிடமிருந்து நூதன முறையில் ஏமாற்றிப் பணத்தை அபகரித்துச் சென்ற நான்கு பெண்கள் சிக்கினர். திருட்டுப் பணத்தை மீட்ட போலீஸார், அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்
நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளை இயங்கிவருகிறது. இந்த வங்கிக்கு இரு தினங்களுக்கு முன்னர் நான்கு பெண்கள் ஒன்றாக வந்திருக்கிறார்கள். அவர்கள் நேராக வங்கிக் காசாளரிடம் சென்று, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிலவற்றைக் கொடுத்து சில்லறை தருமாறு கேட்டிருக்கிறார்கள். அவற்றை வாங்கிய வங்கி காசாளர் 500 ரூபாய் நோட்டுகளாக அந்தப் பெண்களிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அப்போது வங்கிக் காசாளரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அந்தப் பெண்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார்கள். காசாளர் அந்தப் பெண்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சில்லறை மாற்றிய தொகையிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயை மறைத்து வைத்துக்கொண்டு பணம் குறைவதாகக் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து காசாளரிடமிருந்து கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். வங்கியில் வாடிக்கையாளர் பணி நேரம் முடிந்த பிறகு காசாளர் பணத்தைச் சரிபார்த்தபோது ஐந்தாயிரம் ரூபாய் குறைவாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் அன்றைய தினம் பாம்பனிலுள்ள முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்குச் சென்ற அந்தப் பெண்கள், அங்கிருந்த காசாளரையும் இதேபோல் நூதன முறையில் ஏமாற்றி அவரிடமிருந்தும் பணத்தை அபகரித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் போலீஸாரிடம் புகாரளித்தனர். இதையடுத்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து, வங்கியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் பதிவான காட்சிகளைக்கொண்டு நூதன முறையில் பணம் திருடிய கும்பலைத் தேடிவந்த நிலையில் போலீஸாரிடம் நான்கு பெண்களும் சிக்கினர்.

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்
உ.பாண்டி

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த மாலினி, பார்வதி, மீனா, மல்லிகா ஆகியோர் என்பது தெரியவந்தது. நான்கு பெண்களும் வங்கிகள், வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று சில்லறை கேட்பதுபோல் நடித்து காசாளர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து அவர்களிடமிருந்து 12,000 ரூபாயைப் பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்
காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்
உ.பாண்டி

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இது போன்று கவனத்தை திசைதிருப்பி நூதன திருட்டில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், இது போன்ற நபர்களைக் கண்டறிய ஏதுவாக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு