Published:Updated:

`குக்கர் ஃபார்முலா; 25 லிட்டர் சாராய ஊறல்!' -ராமநாதபுரத்தில் சிக்கிய இளைஞர்; தப்பியோடிய தாய், மகன்

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

போலீஸார் வருவதைக் கண்டதும் விமலாவும் அவரின் மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 25 லிட்டர் சாராய ஊறலைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

உணவு சமைக்கப் பயன்படுத்தும் குக்கர்களைப் பயன்படுத்தி சாராயம் தயாரித்த தாய் மற்றும் மகன்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல் குக்கரில் சுயமாக மதுபானம் தயாரித்த வாலிபர் ஒருவரும் போலீஸாரிடம் சிக்கினார்.

மதுபானம் காய்ச்சிய  கருணாகரன்
மதுபானம் காய்ச்சிய கருணாகரன்

கொரானோ நோய் தடுப்பு நடவடிக்கைகளினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைகூட குறிப்பிட்ட நேரம் வரையே அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டது. இதனால் மதுப் பிரியர்கள் மது குடிக்க வழியின்றி அல்லாடி வருகின்றனர். மது கிடைக்காத நிலையில் சிலர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயன கலவைகளை மதுவாகப் பயன்படுத்தி உயிர்களைப் பறிகொடுத்துள்ளனர். மேலும், பல்வேறு கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் தலைதூக்கியுள்ளன.

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குக்கரில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்ச முயன்று சிலர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது வீரம்பல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விமலா மற்றும் அவரின் மகன்கள் கிளிண்டன், பால்ராஜ், நேசக்குமார் ஆகியோர் குக்கர் மூலம் சாராயம் தயாரிப்பதற்காக ஊறல் வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இளஞ்செம்பூர் போலீஸார் விமலாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

போலீஸார் வருவதைக் கண்டதும் விமலாவும், அவரின் மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 25 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்ததுடன் தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். மேலும், சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

குக்கரில் கள்ளச்சாராயம்
குக்கரில் கள்ளச்சாராயம்

இந்த நிலையில், உச்சிப்புளி அருகே சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தில், இணையதளத்தின் வாயிலாக சாராயம் தயாரிக்கும் முறைகளைக் கண்டறிந்து குக்கர் மூலம் சாராயம் தயாரித்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற வாலிபர் ஊரடங்கு உத்தரவினால் மது அருந்த முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து, அவர் தான் அருந்துவதற்காக இணையதளத்தின் துணையுடன் வீட்டில் சமைக்க உதவும் குக்கரில் சாராயம் காய்ச்சியுள்ளார். இதையறிந்த தனிப்பிரிவு போலீஸார் கருணாகரனைக் கைது செய்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு