Published:Updated:

`மிரட்டல் புகார்; திடீர் விபத்து!’ - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர்?

நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி
நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி

தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகப் புகார் அளித்த ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் திடீரென விபத்தில் சிக்கி காயமடைந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி (33) மீது குடியாத்தம் நேருஜி நகரைச் சேர்ந்த ரோஜா (23) என்ற இளம்பெண் இரண்டு நாள்களுக்கு முன் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், ``குடியாத்தம் நகராட்சியில் செல்வ பாலாஜி கமிஷனராக பணிபுரிந்தபோது, எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. நான் வற்புறுத்தியதன் பேரில், கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

புகார் கொடுத்த ரோஜா
புகார் கொடுத்த ரோஜா

பணி மாறுதலாகிச் சென்ற அவர் என்னைக் கைவிட்டு விட்டார். செல்வ பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். அதேபோல், ரோஜாவின் தந்தையான தேவராஜ் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துவருவதாக கமிஷனர் செல்வ பாலாஜி, ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ``தேவராஜ், தனக்கு போன் செய்து மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் அடியாட்களை வைத்து உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார், ஆபாசமாகப் பேசுகிறார். அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

புகார் குறித்து கமிஷனர் செல்வ பாலாஜியிடம் பேசியிருந்தோம். நம்மிடம் அவர், ``என்னைப் பற்றி, அந்தப் பெண் கூறுவது முற்றிலும் பொய். நான் அவரைத் திருமணம் செய்யவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்’’ என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

உண்மையிலேயே என் மகன் தவறு செய்திருந்தால், நானே முன்னின்று அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்திருப்பேன்.
கமிஷனரின் தாய் மீனா

இந்த நிலையில், நேற்றிரவு ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மேல்விஷாரம் பகுதியில் கமிஷனர் செல்வ பாலாஜியின் கார் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், அவர் காயமடைந்ததாகவும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் கமிஷனரின் தாய் கூறியிருக்கிறார்.

நம்மிடம் பேசிய கமிஷனரின் தாய் மீனா, ``செல்வ பாலாஜி விபத்தில் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமாக மூன்று நாள்கள் ஆகும். அதே சமயம், அவர் மீது ஒரு பெண் புகார் அளித்துள்ளார். எதையோ எதிர்பார்த்து அந்தப் பெண் பொய்யான புகார்களை மாதந்தோறும் கொடுத்துவருகிறார். நான், தலைமைச் செயலகத்தில், நிதித்துறை இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவள்.

நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி
நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி

25 ஆண்டுகளாகச் சென்னை முகப்பேரில் கௌரவமாக வசித்துவருகிறோம். எங்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் அந்தப் பெண் செயல்படுகிறார். உண்மையிலேயே என் மகன் தவறு செய்திருந்தால், நானே முன்னின்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துவைத்திருப்பேன். பெண் என்பதால், புகாரை தீர விசாரிக்காமல் உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்’’ என்றார் வருத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு