Published:Updated:

`அரிவாளால் கேக் வெட்டி, எஸ்.ஐ-யைக் கொல்லப் பார்த்தார்!’- ராணிப்பேட்டை `007' நரேஷின் திகில் பின்னணி

ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இளம்பகவத் வந்த பிறகுதான் மணல் கடத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களையும் வருவாய் துறையினரையும் முடுக்கிவிட்டு மணல் கடத்தலை தடுத்துவருகிறார் சப் கலெக்டர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்தவர் `007’ என்கிற நரேஷ் (35). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் மீது ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம், ரத்தினகிரி ஆகிய காவல் நிலையங்களில் மணல் கடத்தல் உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளியில் இருந்த நரேஷ் கடந்த ஜூன் மாதம் ராணிப்பேட்டை சந்தைமேடு அருகில் உள்ள ஆடு அறுக்கும் கிடங்கில் அரிவாளால் கேக் வெட்டி தன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அரிவாளால் கேக் வெட்டிய கும்பல்
அரிவாளால் கேக் வெட்டிய கும்பல்

இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்தபோது, நரேஷ் தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில், நரேஷின் நெருங்கிய நண்பரான இளம்பரிதி என்பவரும் தன் பிறந்தநாளை, அதே ஆட்டுத் தொட்டியில் கடந்த 7-ம் தேதி அரிவாள் கத்தியுடன் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸாரால் தேடப்பட்டுவந்த நரேஷும் கலந்துகொண்டார். அரிவாளால் கேக் வெட்டி இருவரும் மாறிமாறி ஊட்டிக்கொள்வதைப் போல செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதை ரகசியமாகக் கண்காணித்த ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனும் ஏட்டு ஒருவரும் நரேஷைப் பிடிக்க முயன்றனர். 

அப்போது, தப்பிக்க முயன்ற நரேஷ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. நிலைமை மோசமானதால், பின்வாங்கிய அந்தக் காவலர்கள் விரைந்து சென்று ராணிப்பேட்டை டி.எஸ்.பி-யிடம் நடந்ததை விவரித்தனர். இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் நரேஷை கைதுசெய்ய இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுக்கு டி.எஸ்.பி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் நரேஷை தேடிப்பிடித்து கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நரேஷின் கூட்டாளிகள் 5 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

நரேஷ்
நரேஷ்

கைதான நரேஷின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவரின் சிறைக் காவலைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீட்டித்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான நகலை சிறையில் உள்ள நரேஷிடம் வழங்கப்பட்டது.

இதுபற்றி ராணிப்பேட்டை காவல்துறையினர் கூறுகையில், ‘‘காவல்துறையில் உள்ள உயரதிகாரிகள் சிலரின் அணுகுமுறை சரியில்லாததால்தான் மணல் கடத்தலைத் தடுக்க நாங்கள் தயக்கம் காட்டுகிறோம். ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இளம்பகவத் வந்த பிறகுதான் மணல் கடத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராம நிர்வாக அலுவலர்களையும் வருவாய் துறையினரையும் முடுக்கிவிட்டு மணல் கடத்தலை தடுத்துவருகிறார் சப் கலெக்டர். தற்போது கைதுசெய்யப்பட்ட நரேஷ் மீது குண்டர் சட்டம் பாயக்கூடாது என்று சில பிரமுகர்கள் அதிகாரிகளை அணுகினர். அரசியல் அழுத்தங்களும் வந்தன. நரேஷைக் காப்பாற்ற இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மீது பொய்ப் புகார் கொடுக்கப்பட்டது. மணல் கடத்தலுக்கு இன்ஸ்பெக்டர் உடந்தையாக இருப்பதாகவும் அவரை ராணிப்பேட்டையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றக்கோரியும் மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரியிடம் சிலர் புகார் கொடுத்தனர்.

குண்டாஸில் அடைக்கப்பட்ட நரேஷ்
குண்டாஸில் அடைக்கப்பட்ட நரேஷ்

அரசியல் அழுத்தத்தால் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசையும் தலைமைக் காவலர் இளம்செழியனையும் ஆயுத படைக்குத் தற்காலிகமாக மாற்றுவதற்கான முயற்சியும் நடைபெற்றது. எஸ்.பி பிரவேஷ்குமாரிடம் சரியான விளக்கம் கொடுத்த பிறகு ஆயுதப் படைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

இதுபோன்ற அவதூறுகளாலும் இடையூறுகளாலும்தான் எங்களின் பணியை நேர்மையாகச் செய்ய முடியவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நபரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தால், நான் அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்று மிரட்டுகிறார்கள்’’ என்கிறனர் குமுறலாக.

நரேஷ் கைது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் குண்டா சார்லஸிடம் பேசினோம். ‘‘ராணிப்பேட்டையில் உள்ள காவல் அதிகாரி சாதிப் பாகுபாட்டுடன் செயல்படுகிறார். தலித் என்றால் அவருக்குப் பிடிப்பதில்லை. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றால் பொய் வழக்குபோடுவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். எங்கள் கட்சியின் தொண்டர் அணி துணை அமைப்பாளர் நரேஷ் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

நரேஷ் இப்போது மணல் ஓட்டுவதில்லை. ஜே.சி.பி வைத்து நியாயமாகத் தொழில் செய்கிறார். அவரை மீண்டும் மணல் ஓட்டுமாறு கூறி அந்த போலீஸ் அதிகாரி மாமூல் கேட்டு மிரட்டினார். அவருக்கு வளைந்து போகாததால்தான் பொய் வழக்குப் போட்டு குண்டர் சட்டத்தில் நரேஷைச் சிறையில் அடைத்திருக்கிறார். மணல் கடத்தலை ஊக்குவிப்பதே ராணிப்பேட்டை காவல் அதிகாரிதான்’’ என்றார் கொதிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு