Published:Updated:

சிறுமிகளைச் சீரழித்த கொடூரர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறுமிகளைச் சீரழித்த கொடூரர்கள்
சிறுமிகளைச் சீரழித்த கொடூரர்கள்

‘‘சத்தம் போடாதே... வெளியில் சொல்லாதே... போலீஸுக்குப் போகாதே!’’

பிரீமியம் ஸ்டோரி
“குடிகாரக் கெழவனுக, சின்னப் பயலுகன்னு தெனம் தெனம் இந்தக் குடிசைக்குள்ள திடீர்னு வந்து அம்மணமா நிக்கிறானுக. மிருகத்தனமா என் பேத்திகளைக் கட்டிப் பிடிச்சுக் கொடுமை செய்யுறானுக. முறிஞ்சுபோன இடுப்போட ஊர்ந்துக்கிட்டே போய் நான் தடுக்க முயற்சி பண்ணுனா, கோபத்துல என்னை கன்னாபின்னானு அடிக்கிறானுக...” - அந்த மூதாட்டி சொல்லச் சொல்ல நம் நெஞ்சம் பதறுகிறது!

நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது அந்தக் கிராமம். ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தி லிருக்கும் புதர்மண்டிய பள்ளத்தில், பாதுகாப்பற்ற நிலையில் ஓர் ஓலைக்குடிசை. வறுமைக்கு வாய் முளைத்ததுபோல அந்தக் குடிசைக்கு ஒரு வாசல். உள்ளே இருள் மண்டிக் கிடக்கிறது. வறுமை சூறையாடிக் கொண்டிருக்கும் அந்தக் குடிசைக்குள் வைத்துத்தான் பல வெறி பிடித்த வக்கிர மிருகங்கள், இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்திருக் கின்றன. 75 வயது கிழவன் முதல் 16 வயது சின்னப்பயல்கள் வரை இந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ‘வெளியே சொல்லக் கூடாது’ என்று சிறுமிகளை மிரட்டி மிரட்டியே கடந்த ஏழு மாதங்களாக இந்தக் கொடூரத்தைத் நடத்தியிருக்கிறது நாசகார கும்பல்.

சிறுமிகளின் தந்தை புற்றுநோய் பாதிப்பால் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட, பாட்டி, அம்மா, இரண்டு தம்பிகள் என ஆறு பேரும் அந்தச் சின்னக் குடிசைக்குள் ஒன்றாக வாழ்ந்துவருகிறார்கள். பாட்டிக்கு இடுப்பு எலும்பு முறிந்ததால், நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். குடும்பத்தின் மொத்தச் சுமையையும் ஒற்றை ஆளாகச் சுமப்பவர் சிறுமிகளின் தாய். பக்கத்து ஊரிலுள்ள அப்பள கம்பெனிக்கு வேலைக்குச் சென்று அவர் ஈட்டிவரும் வருமானத்தில்தான் அத்தனைபேருக்கும் சாப்பாடு. அதிகாலையில் வேலைக்குச் செல்பவர் இரவுதான் வீடு திரும்புவார். பாதுகாப்புக்கு ஆளில்லாத பகல் நேரத்தில் வீட்டிலிருக்கும் சிறுமிகளை மிரட்டி, குடிசைக்குள்வைத்தும், அங்கிருந்து தூக்கிச் சென்றும் சீரழித்திருக்கிறார்கள் கயவர்கள். தன் இரண்டு மகள்களுக்கும் நேர்ந்த கொடுமை குறித்து ஒருகட்டத்தில் அறிந்துகொண்ட தாய் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார். கண்ணீரும் ஓலமுமாய் ஓடிச் சென்று ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டிருக்கிறார். ஊர்ப் பெரியவர்களோ, “எல்லாரையும் கண்டிச்சுவெக்கிறோம். இனி இது மாதிரி நடக்காது” என்று சொன்னதுடன், “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகக் கூடாது” என பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

சூர்யா - வரதராஜ் - சிவா - மணிகண்டன்
சூர்யா - வரதராஜ் - சிவா - மணிகண்டன்

அடுத்த வேளை உணவுக்கே உத்தரவாதமில்லாத வறுமைநிலையில், ஊர்க்காரர்களைப் பகைத்துக்கொள்ள முடியாத சூழலில், தன் மகள்களைக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு, தொடர்ந்து வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார் அந்தத் தாய். வக்கிர மிருகங்களின் அட்டூழியமோ ஓயவில்லை. பொறுக்க முடியாத சிறுமிகள் கதறியிருக்கிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், இந்தக் கொடூரங்களை ரகசியமாக வீடியோ எடுத்து ‘குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு’ அனுப்பிய பிறகே, இந்த விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், அந்தக் கிராமத்தின் ஆண்களில் பலரும் தலைமறைவாகிவிட்டார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க அந்தக் குடிசையைத் தேடிச் சென்றோம். நாம் கூப்பிடும் சத்தம் கேட்டதும், மிகவும் அச்சத்தோடு படுக்கையிலிருந்து நகர்ந்து நகர்ந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தார் மூதாட்டி. நம்மை அடையாளப்படுத்திக்கொண்டதும் கதறினார். “எங்களுக்கு யார் ஆதரவும் இல்லை சாமி... ஆம்பளைத் துணை இல்லாம கெடக்கோம். எங்களால எதுவும் செய்ய முடியாதுனு இந்த ஊர்க்காரங்க இப்படி ஒரு கொடுமையைப் பண்ணுறாங்க சாமி...” என்று விம்மியவரை ஆறுதல்படுத்தி, பேசச் சொன்னோம்.

“எனக்கு ஒரே ஒரு மகன். கூலி வேலைக்குப் போயிட்டு நல்லாத்தான் இருந்தான். திடீர்னு புற்றுநோய் வந்திருச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் ஆயிரக்கணக்குல செலவு செஞ்சும் காப்பாத்த முடியலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டான். ஆனாலும், எம் மருமக வேலைக்குப் போயி இந்தக் குடும்பத்தைச் சுமக்குறா. வீட்டுல பன்னிரண்டு பதிமூணு வயசுல ரெண்டு பேத்திக, ஏழெட்டு வயசுல ரெண்டு பேரனுக இருக்காங்க. என் மருமக அப்பள கம்பெனிக்கு வேலைக்குப் போய் அதுல கிடைக்கிற கூலியிலதான் எல்லாரும் கஞ்சி குடிக்கிறோம்.

முத்துசாமி - செந்தமிழ்செல்வன் - சண்முகம் - பெரியசாமி
முத்துசாமி - செந்தமிழ்செல்வன் - சண்முகம் - பெரியசாமி

இன்னிக்கு வரைக்கும் இந்த நாலு பிள்ளைகளும் நல்ல சோறு தின்னதில்லை... நல்ல துணி உடுத்தினதில்லை.

என் மருமக காலையில 6 மணிக்கு வேலைக்குப் போனா, ராத்திரி 11 மணிக்குத்தான் வருவா. அதுவரைக்கும் குஞ்சுகளைக் கோழி அடைகாக்குற மாதிரி இந்தப் பிள்ளைகளைக் காப்பாத்திட்டு இருந்தேன் சாமி. ஒரு வருசத்துக்கு முன்னாடி நான் கீழே விழுந்ததுல இடுப்பு எலும்பு ஒடைஞ்சிருச்சு. என்னால எந்திரிச்சு நிக்கவோ, நடக்கவோ முடியாது சாமி... இந்தக் குடிசையில கரன்ட்டும் கிடையாது. குடிகாரக் கெழவனுக, சின்னப் பயலுகனு தெனம் தெனம் இந்தக் குடிசைக்குள்ள திடீர்னு வந்து அம்மணா நிக்கிறானுக. மிருகத்தனமா என் பேத்திகளைக் கட்டிப் பிடிச்சுக் கொடுமை செய்யுறானுக. முறிஞ்சுபோன இடுப்போட ஊர்ந்துக்கிட்டே போய் நான் தடுக்க முயற்சி பண்ணுனா, கோபத்துல என்னைக் கன்னாபின்னானு அடிக்கிறானுக... `நம்மளால எதுவும் செய்ய முடியலயே’னு கதறி அழுவேன். அப்படி அழுதா ‘சத்தம் போடாதே’னு கல்லெடுத்து அடிக்கிறானுக. `எதையும் வெளியில சொல்லக் கூடாது’னு குழந்தைகளையும் அடிச்சு சித்ரவதை செய்யுறாங்க பாவிங்க… என் மருமகள்கிட்ட சொல்லி அழுதேன், அவளும் அழுதா. ஏழைங்க எங்களால அழுறதைத் தவிர வேற என்ன சாமி செய்ய முடியும்..?

சிறுமிகளைச் சீரழித்த கொடூரர்கள்

பள்ளிக்கூடம் இருந்துச்சுன்னா பேத்திக ரெண்டும் இந்தக் கொடுமையிலருந்து தப்பிச்சிருக்கும்... ஒரு வேளை நல்ல சோறும் தின்னுருக்கும்க... அதுக்கும் வழியில்லாம போச்சே... என்ன நடந்துச்சோ தெரியலை சாமி... திடீர்னு போலீஸ் வந்து என் மருமகளையும், ரெண்டு பேத்திகளையும் கூட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் குடிக்கத் தண்ணிகூட இல்லை. கொடுத்து உதவ எந்த நாதியும் இல்லை. இந்தப் பச்சப் பிள்ளைகளோட ரெண்டு நாளா சாப்பாடு இல்லாம பட்டினி கெடக்குறேன். ஊருக்காரங்க சண்டைக்கு வர்றாங்க. அடிச்சுக் கொன்னுருவாங்களோனு பயமா இருக்கு” பதற்றமும் ஆதங்கமுமாக மூதாட்டியின் உடல் நடுங்குகிறது.

அப்போது, போலீஸ் விசாரணை முடிந்து சிறுமிகளின் தாய் வீட்டுக்கு வந்தார். நம்பிக்கையற்று உடைந்துபோன குரலில் பேசத் தொடங்கினார், “இனி என்னத்தைச் சொல்றது... என் குழந்தைகளை அநியாயமா சீரழிச்சிட்டாங்க... என் பெரிய மகளுக்கு 13 வயசு; ஒன்பதாவது படிக்கிறா. சின்ன மகளுக்கு 12 வயசு; எட்டாவது படிக்கிறா. எம் பிள்ளைகளை... ஒண்ணுமறியாத பச்ச மண்ணுகள... இப்படிப் பண்ணுவாங்கனு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலை. அக்டோபர் 10-ம் தேதி சனிக்கிழமை, நைட் ஷிஃப்ட் வேலைக்குப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு ஊமையன்கிற முத்துசாமி தாத்தா, வீட்டுக்குள்ள வந்து நிர்வாணமா நின்னுக்கிட்டு என் மகள்களைப் பிடிச்சு இழுத்திருக்கார். அடுத்த நாள் ஊர்ப் பெரியவங்ககிட்ட சொன்னேன். என் குழந்தைகளைக் கூப்பிட்டு விசாரிக்கும்போது, இப்படி செஞ்ச பலரோட பேர்களைச் சொல்லி, ‘அவங்களும் இது மாதிரி அசிங்கமா நடந்துக்கிட்டாங்க’னு சொன்னாங்க. ஒவ்வொருத்தர் பேரா சொல்லச் சொல்ல எல்லாருக்கும் தூக்கிவாரிப் போட்டுருச்சு. இப்போ போலீஸ் வரைக்கும் விஷயம் போயிட்டதால என் பொண்ணுகளைச் சீரழிச்சவங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு நம்புறேன்” வழிந்துகொண்டேயிருக்கும் கண்ணீரைத் துடைத்துத் துடைத்து ஓய்கிறார் அந்தத் தாய்.

போலீஸ் விசாரணைக்குப் பின், 12 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் இரண்டு பேர் தலைமறைவான நிலையில் முத்துசாமி, செந்தமிழ்செல்வன், மணிகண்டன், சூர்யா, சண்முகம், சிவா, வரதராஜ், பெரியசாமி, சதீஷ், வைதீஷ் ஆகிய 10 பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் மேலும் சில ஊர்ப் பெரிய மனிதர்கள் சிக்குவார்கள் என்கிறார்கள் போலீஸார்.

சம்பவம் நடந்த கிராமத்து மக்களிடம் பேச முயன்றோம். யாருமே முன்வரவில்லை. சில இளைஞர்கள் மட்டும் பேசினார்கள், “வறுமையான குடும்பம்... ஆம்பளத் துணை இல்லை... அவங்க குடிசையும் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குறதால, அங்கே என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது. இந்தப் பாலியல் வன்கொடுமை பலமுறை நடந்திருக்கு. ஊர்ல விசாரிச்சு உருப்படியா நடவடிக்கை எடுக்கலை. அதனால கோபப்பட்ட இளைஞர்கள், அட்டூழியம் நடக்குறப்ப வீடியோ எடுத்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டாங்க. பாவம்... அந்த சின்னப் பிள்ளைங்க. இந்தப் பிரச்னையால அந்தக் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருக்கு. அந்தக் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கணும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு உதவ அரசு முன்வரணும்” என்றார்கள் அக்கறையுடன்.

சிறுமிகளைச் சீரழித்த கொடூரர்கள்

இது பற்றிப் பேசிய நாமக்கல் எஸ்.பி சக்தி கணேஷ், “விசாரணையின் அடிப்படையில், 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு தொடர்ந்து 10 பேரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. யார் தப்பு செய்திருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இந்த விவகாரம் பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியாவிடம் கேட்டதற்கு, “எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் விசாரணை மேற்கொண்டோம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. சிறுமிகள் எங்களின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். ரொம்பவே பயந்து போயிருப்பதால் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்க முடியவில்லை. குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

அந்தச் சிறுமிகளின் முகத்தில் வெளிப்படும் அச்சத்தையும், பரிதவிப்பையும், வறுமையையும் பார்க்கும் எவர் ஒருவரும் கலங்கிவிடுவார்கள். அந்தப் பிஞ்சுகளையே வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அந்தக் கொடூரர்கள் மனிதர்களுடன் வாழத் தகுதியானவர்கள் அல்ல!

‘பாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதாக’ அறிவித்திருக்கிறது தமிழக அரசு, நியாயமான விஷயம்தான். ஆனால், அதுவே இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு ஆகிவிடாது. இது போன்ற கொடூர பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டியதுதான் காவல்துறையின், அரசின் முதன்மையான முக்கியமான பணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு