Published:Updated:

நாமக்கல்: ஆன்லைன் வகுப்பில் ஆபாசப் படம்?! ; இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்! - நடந்தது என்ன?

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

இயற்பியல் ஆசிரியர் எடின்பரோ கோமகனை, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலுமுத்து வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருகிறார். அதன்படி ஆசிரியர் கோமகன், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ராசிபுரம் அருகே 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தியபோது, பள்ளி ஆசிரியர் ஆபாசப் படம் ஒளிப்பரப்பியதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், அந்த உதவி தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கின்றனர்.

நாமக்கல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியில், இயற்பியல் ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும், பச்சுடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எடின்பரோ கோமகன் (54) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர், சில தினங்களுக்கு முன்பு, மாலை 3 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினார். இதில், கணித அறிவியல், கணித உயிரியல் பாடப்பிரிவைச் சேர்ந்த பதினோறாம் வகுப்பு மாணவிகள் 21 பேர் பங்கேற்றனர். அப்போது, திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாசப் படம் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகள், தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து, நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு, ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டது. மேலும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி, நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீஸார், அந்தப் பள்ளிக்கு நேரில் சென்றனர். பின்னர், ஆபாசப் படம் வெளியானது குறித்து, அவர்கள் உதவித் தலைமை ஆசிரியர் எடின்பரோவிடமும் மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு
மாதிரிப் படம்

தொடர்ந்து அதிகாரிகள், 'விசாரணை முடிவில்தான் ஆன்லைன் வகுப்பில் ஆபாசப் படம் வெளியானது எப்படி என்பது தெரியவரும். விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும்' என்று தெரிவித்தனர். 'அதன் பின்னரே, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆன்லைன் மூலம் வகுப்புகள்... கற்பதில் ஈடுபாடு இல்லை, என்ன செய்வது? | Doubt of Common Man

இந்தநிலையில், இயற்பியல் ஆசிரியர் எடின்பரோ கோமகனை, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலுமுத்து வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி ஆசிரியர் கோமகன், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், ``ஆன்லைன் கிளாஸ் நடத்தியபோது, இயற்பியல் ஆசிரியர் ஆபாசப் படம் ஒளிபரப்பவில்லை. அவர் ஆன்லைன் மூலம் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு லிங்க் மாறி, அரைகுறை ஆடையுடன் ஒரு கார்ட்டூன் படம் மட்டும் ஸ்கிரீனில் வந்திருக்கிறது. அதை எடின்பரோ வேண்டுமென்றே செய்யவில்லை. இதைத் தேவையில்லாமல் பெரிதாக்கி, அவரது பெயரைக் கெடுத்துவிட்டார்கள்" என்று அவர் தரப்பு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!
அடுத்த கட்டுரைக்கு