Published:Updated:

புதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள்! -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்

உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனை
உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனை செய்த 58 மளிகைக் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 1000க்கும் மேற்பட்ட எலிபேஸ்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எலி பேஸ்ட் என்று சொல்லப்படும் எலி மருந்து மூலம் ஏற்படும் தற்கொலைகள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனில் கட்டுரை எழுதியிருந்தோம். கட்டுரை எதிரொலியாக உடனே மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் உரிமமின்றி விற்பனை செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்பு, பெயரளவில் மட்டும் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து, எலிபேஸ்ட் மரணங்கள் குறித்து இணையதளத்தில் குறிப்பிட்டு வந்தோம்.

Vikatan
உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனை
உரிமமின்றி எலிபேஸ்ட் விற்பனை

இந்த நிலையில்தான், தற்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் விதிமுறைக்குப் புறம்பாக எலிபேஸ்ட் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு பிறப்பித்தார். எஸ்பியின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர்.

சோதனையில் பெட்டிக்கடைகளில் கூட அதிகளவில் எலிபேஸ்ட் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, உரிமமின்றி விதிமுறைகளுக்கு மாறான விற்பனையில் ஈடுபட்ட 58 மளிகைக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட எலி மருந்து பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள்! -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்

இதுபற்றி போலீஸார் கூறும்போது, "உரிமம் பெற்ற வேளாண் விற்பனை நிலையங்கள், உரக்கடைகள் தவிர்த்து பெட்டிக்கடைகளில் கூட தாராளமாக எலிபேஸ்ட் கிடைப்பதால் நாளுக்கு நாள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மாவட்டத்தில் நடக்கும் தற்கொலைகளில் பெரும்பாலும் எலி மருந்து சாப்பிட்டு இறக்கும் தற்கொலைகள்தான் அதிகமாக இருக்கின்றன. விதிமுறைகளை மீறி உரிமமின்றி எலி பேஸ்ட் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்பனை செய்பவர்கள் பற்றித் தெரிந்தால், போலீஸாரிடம் தகவல் கொடுக்கலாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு