Published:Updated:

`இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்!'- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி

மோசடிப் புகாரில் கைதான ரமேஷ்குமார்
மோசடிப் புகாரில் கைதான ரமேஷ்குமார்

ஆன்லைன் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பெயரில் 4.63 கோடி ரூபாயை மோசடி செய்த புகாரில் வி.சி.க மாநில நிர்வாகி சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பட்டாசு தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரிடம் திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த அழகர்சாமி என்ற ராஜா, மற்றும் அவரின் தம்பி எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் ஆகியோர் நடத்திவந்த, `இன்பி கேலக்ஸி மார்க்கெட்டிங்' நிறுவனம் மூலம் 4.63 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்துப் புகார் அளித்தார்.

Vikatan

ஆன்லைன் மோசடி!

அந்தப் புகாரில், `கடந்த 2014-ம் ஆண்டு தன்னை சந்தித்த ரமேஷ்குமார், தங்களின் இன்பி கேலக்ஸி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் பட்டாசு வழங்குவதாகக் கூறி ஒப்பந்தம் போட்டார். அதிலிருந்து தொடர்ச்சியாக எங்கள் நிறுவனத்திலிருந்து பட்டாசுகளை அனுப்பி வைத்தோம். சமீபத்தில் 13,085 பட்டாசுப் பெட்டிகளை அந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தோம். அதற்கான தொகை ரூ.4 கோடியே 63 லட்சம் பாக்கி உள்ளது.

தொடர்ச்சியாக பணத்தைக் கேட்டு வருகிறேன், அவர் தரவில்லை. இந்தநிலையில், திடீரென ரமேஷ் குமார் மற்றும் அவரின் அண்ணன் அழகர்சாமி என்கிற ராஜா ஆகியோர் தாங்கள் நடத்திவந்த நிறுவனத்தை மூடிவிட்டு, திருச்சி மன்னார்புரம் பகுதியில் `எல்ஃபின் இ மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்' எனும் பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார்கள்.

எல்ஃபின் பிஸ்னஸ் நிறுவனம்
எல்ஃபின் பிஸ்னஸ் நிறுவனம்

இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன், என்னிடம் ஒப்பந்தம் போட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் பணத்தைக் கேட்டேன். இதனால் கோபமடைந்த, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ரமேஷ் குமாரின் மனைவியுமான ஐஸ்வர்யா, இயக்குநர்கள் சீனிவாசன், அருண், மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஊழியர்களான வசந்தா, அறிவுமணி, இளங்கோ ஆகியோர் சேர்ந்து எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மதுரை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஐன்ஸ்டீன் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

மோசடி புகாரில் கைதான ரமேஷ்குமார்
மோசடி புகாரில் கைதான ரமேஷ்குமார்

போலீஸாரின் விசாரணையில், ரமேஷ் குமார் மற்றும் அவரின் அண்ணன் ராஜா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. இதுதொடர்பாக, ராஜா, அவரின் தம்பி எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார், ஐஸ்வர்யா, மேலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாண்டியன், உதவி ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் ரமேஷ் குமார் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்ததுடன், வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள குற்றவாளிகளையும் தீவிரமாக தேடிவருகிறார்கள். அழகர்சாமி என்கிற ராஜா வெளிநாடு சென்றிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தற்போது, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் எல்ஃபின் இ.காம் நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் ஆன்லைன் விற்பனை எனும் பெயரில் ஆன்-லைன் மளிகைப் பொருள் விற்பனை, வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், ரியல் எஸ்டேட் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் ரூ.15 லட்சத்துக்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாகக் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி, 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர்.

அழகர் சாமி என்கிற ராஜா மற்றும்  ரமேஷ்குமார்
அழகர் சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ்குமார்

அந்தப் புகாரின் அடிப்படையில் ராஜா, பாதுஷா, பஷீர், சாகுல்ஹமீது மற்றும் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இவர்கள், விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில், நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அந்த நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மதுரையில் பிரபல ரவுடிகள் சிலர், தன்னைக் கடத்தி வைத்துக்கொண்டு, 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக ராஜாவே புகார் கொடுத்தார். தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரித்ததால், ராஜாவும் அவரின் தம்பியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஐக்கியமாகி, மாநில அளவிலான பொறுப்பையும் கேட்டுப் பெற்றனர்.

இதன்பின்னர், திருச்சி வி.சி.க நிர்வாகிகளை உடன் வைத்துக்கொண்டு சொகுசுக் கார்களில் வலம்வந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரம்பலூர் அருகே தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர்களது காரில் இருந்து 1 கோடியே 99 லட்சத்து 71,500 ரூபாய் சிக்கியது.

இதுதொடர்பாகப் பேசிய ரமேஷ், `எதிரிகளுக்குப் பயந்து காரில் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக'க் கூறியிருந்தார். பண விவகாரம் தொடர்பாக, எல்பின் இ.காம் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.

ஆன்லைன் மோசடி விவகாரம் குறித்துப் பேசிய திருச்சி வி.சி.க நிர்வாகிகள், `` இதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக தலைமையின் கவனத்துக்கு இதைப் பற்றிக் கொண்டு செல்ல உள்ளோம்" என்கின்றனர்.

மோசடிகளில் இறங்குபவர்களுக்கு அரசியல் என்பது ஒரு முகமூடியாகவே மாறிப் போய்விட்டது. திருச்சியில் நடைபெற்ற இந்த மோசடியைப் பற்றி, உங்கள் கருத்துகளைக் கமென்ட்டில் சொல்லலாம்!

அடுத்த கட்டுரைக்கு