Published:Updated:

காருக்குள் எரிக்கப்பட்ட தொழிலதிபர்... `சென்னை டு திருச்சி’ பிளான்! அதிர்ச்சி வாக்குமூலம்

`நண்பர்கள் உதவியுடன் உடலை, காரில் எடுத்து வந்து, தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டோம்.’

வனப்பகுதி
வனப்பகுதி

கடந்த 2007-ம் ஆண்டு, திருச்சி வையம்பட்டி பகுதியில் தொழிலதிபர் துரைராஜ் மற்றும் அவரது ஓட்டுநர் சக்திவேல் காரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். அப்போது, இச்சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. கொலை செய்யப்பட்டு, ஐந்தாண்டுகள் ஆன பின்னும், யார் கொலையைச் செய்தது என்பதுபற்றி எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது.

இந்தநிலையில் 2013-ம் ஆண்டு திருவானைக்காவலைச் சேர்ந்த வைர வியாபாரியான தங்கவேல், தன் மகள், மகன் ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் போலீஸாரிடம் சிக்கிய சாமியார் கண்ணன் என்பவன், துரைராஜ் கொலையையும் நான்தான் செய்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அது அப்போது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

தொடரும் ரியல் எஸ்டேட் மரணங்கள்

அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அடுத்துள்ள தச்சங்குறிச்சி காட்டுப்பகுதி பாதுகாப்பற்றநிலையில் உள்ளதால், குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன.

கடந்த ஜனவரி மாதம், காதலியுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் தமிழ்வாணனை ஐந்துபேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு காதலியை கற்பழிக்க முயன்றனர். அடுத்து அதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

காருக்குள் எரிக்கப்பட்ட தொழிலதிபர்... `சென்னை டு திருச்சி’ பிளான்! அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த நிலையில்தான், நேற்று காலை தச்சங்குறிச்சி காட்டுப் பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதைக் கண்ட அப்பகுதியினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சிறுகனூர் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில், காருக்குள் மனித உடல் எரிந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

அதையடுத்து திருச்சி எஸ்.பி., ஜியா உல் ஹக் மற்றும் டி.எஸ்.பி ராஜசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சமயபுரம் மதன், மண்ணச்சநல்லூர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

போலீஸாரை திசை திருப்ப ஹைஹீல் செருப்பு

உடல் முழுமையாக எரிந்த நிலையில் இருந்ததால் கொல்லப்பட்டது ஆணா, பெண்ணா என்பதை ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. அடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு நடத்திய விசாரணையில், அது ஆண் உடல் என உறுதி செய்தனர். மேலும், குற்றவாளிகள் தடயத்தை மறைப்பதற்காக காரின் பதிவு எண் தகட்டை கழட்டிச் சென்றதும், போலீஸாரின் கவனத்தைத் திசைதிருப்பும் எண்ணத்தில் காருக்குள் பெண்கள் அணியும் செருப்பை வைத்ததும் தெரியவந்தது.

காருக்குள் எரிக்கப்பட்ட தொழிலதிபர்... `சென்னை டு திருச்சி’ பிளான்! அதிர்ச்சி வாக்குமூலம்

இதுபோன்ற குழப்பங்களால் பத்திரிகையாளர்களை போலீஸார் சம்பவ இடத்துக்கு அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

துப்புக்கொடுத்த செல்போன் எண்

இறுதியாக காரின் இன்ஜின் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அந்த கார் திருச்சி அரியமங்கலம் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேனுக்குச் சொந்தமானது என்பதும், அவர் சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது.

அடுத்து ஜாகிர் உசேனின் மகன் அக்ரம் உசேனை அழைத்துவந்த போலீஸார், உடலை அடையாளம் காட்டினார். அதையடுத்து, ஜாகிர் உசேன் செல்போன் அழைப்புகளைக் கொண்டு போலீஸார் விசாரணையைத் துவக்கினர்.

தொடர் விசாரணையில், ஜாகிர் உசேன் பெரம்பலூர் மாவட்டத்தில், நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தது தெரிந்தது. அடுத்து, அவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், கடைசியாக அவரிடம் பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள குன்னுமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் பேசியது தெரியவந்தது.

வனப்பகுதி
வனப்பகுதி

அடுத்த சில மணி நேரத்தில் சரவணன் போலீஸார் வசம் வந்தார்.

போலீஸாரிடம் சரவணன், ``நானும் கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனும் இணைந்து கார் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்தோம். தொழிலுக்காக என்னிடம் அதிகமாகப் பணம் வாங்கிய ஜாகிர் உசேன் திருப்பித்தரவில்லை. இந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டியதாக என்மீது ஜாகிர் உசேன் போலீஸில் புகார் கொடுத்தார். பணத்தை இழந்த என் மீதே புகார் கொடுத்த அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம்.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன்

நடந்த அனைத்தையும் என் நண்பர்களான மணிகண்டன், சக்திவேல், விஜயகோபாலபுரத்தைச் சேர்ந்த மோகன் உள்ளிட்டோரிடம் கூறவே அவர்களும் எனக்கு உதவி செய்ய சம்மதித்தனர்.

சென்னை டு திருச்சி கொலை திட்டம்

அடுத்து, சென்னையிலிருந்த ஜாகிர் உசேனுக்கு போன் செய்து, பிரச்னைகளை பேசி முடிப்போம் எனக் கூறினேன். அதற்கு அவர், 12-ம் தேதி ஊருக்கு வருவதாகக் கூறினார். அதையடுத்து, ஜாகிர் உசேனை, கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதிக்கு வரவழைத்தோம். அங்குள்ள தனியார் விடுதியில் வைத்து அவரைத் தீர்த்துக்கட்டினோம். அடுத்து நண்பர்கள் உதவியுடன் உடலை, காரில் எடுத்து வந்து, தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டோம்.

தடயங்களை அழிக்க, காரின் நம்பர் பிளேட்டை கழட்டிச் சென்றோம். ஆனால், செல்போன் எண் மூலம் எங்களை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர்” என்றார்.

இந்த நிலையில் குற்றவாளிகளான சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்களைக் கைதுசெய்த போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தக் கொலை சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`கொடூரமாகக் கொல்லப்பட்ட நண்பன், லாரியில் வீசப்பட்ட செல்போன்!'- `திரிஷ்யம்' பட பாணியில் நடந்த கொலை