Published:Updated:

`அவர் படத்தில் நான்தான் ஹீரோயின் என்றார்!' - துணை நடிகர் கொலையின் அதிர்ச்சிப் பின்னணி

`படவாய்ப்புக்காக நான் காத்திருந்த சமயத்தில் என்னுடன் துணை நடிகர் ரவி பழகினார். அவர் படத்தில் என்னை ஹீரோயினாக நடிக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்'.

துணை நடிகை தேவி
துணை நடிகை தேவி

சென்னை வடக்கு கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மனைவி தேவி (42). இவர் ஜே.கே.ரித்தீஷ் நடித்த நாயகன் படத்தில் துணை நடிகையாக நடித்தார். இது தவிர சினிமா, சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். தேவியுடன் துணை நடிகராக நடித்தவர் மதுரையைச் சேர்ந்த ரவி. சினிமா இயக்குநர் கனவிலிருந்த ரவியைக் கொலை செய்த குற்றத்துக்காக தேவி, அவரின் சகோதரி லட்சுமி மற்றும் இருவரின் கணவர்கள் சங்கர், சவுரியார் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகை தேவி , அவரின் சகோதரி
கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகை தேவி , அவரின் சகோதரி

துணை நடிகை தேவி போலீஸிடம் கூறுகையில், ``நான், கொளத்தூர் பகுதியில் குடும்பத்தோடு தங்கியிருந்தேன். டெய்லராகவும் பணியாற்றி வந்தேன். நடிப்பு மீது எனக்கு சிறுவயது முதல் ஆர்வம் அதிகம். அதனால் சினிமா, சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறேன். படப்பிடிப்பின்போது வடபழனியில் தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த துணை நடிகர் ரவியுடன் எனக்கு 8 ஆண்டுகளுக்குமுன் பழக்கம் ஏற்பட்டது.

ஒரே துறையில் இருந்ததால் நாங்கள் இருவரும் நண்பர்களாகினோம். என்னைச் சந்திக்க ரவி வீட்டுக்கும் வருவார். இந்தச் சமயத்தில் சினிமா இயக்குநராக ரவி, முயற்சி செய்துவந்தார். அப்போது அவர், தான் இயக்கும் படத்தில் என்னை ஹீரோயினாக்குவதாக வாக்குறுதியளித்தார். அதை முழுமையாக நம்பி அவருடன் பழகி வந்தேன். எங்கள் இருவரின் நட்பும் குடும்பத்தில் தெரியவந்தது. அதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது.

கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகை குடும்பம்
கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகை குடும்பம்

ஆனாலும், எங்கள் நட்பில் விரிசல் ஏற்படவில்லை. இந்தச் சமயத்தில் படவாய்ப்புகள் இல்லாததால் ரவி, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் ரவியின் நடிவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. அவரை விட்டு விலகத் தொடங்கினேன். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி அவருடன் பேசுவதைத் தவிர்த்தேன். நான் மனம் மாறினாலும் ரவி, எனக்குத் தொடர்ந்து போனில் தொல்லை கொடுத்து வந்தார். அதனால் போன் நம்பரை மாற்றினேன்.

நள்ளிரவில் கதவைத் தட்டிய துணை நடிகர்!- சென்னையில் கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகையின் குடும்பம்

இதையடுத்து அடிக்கடி என் வீட்டுக்கு வரத் தொடங்கினார். அவரிடம் பலதடவை கூறியும் கேட்கவில்லை. இதனால் ரவிக்குத் தெரியாமல் கொளத்தூரிலிருந்த வீட்டை வடக்கு கொரட்டூர் பகுதிக்கு 10 நாள்களுக்கு முன்பு மாற்றினேன். அந்த வீட்டின் முகவரி ரவிக்குத் தெரியாது. என்னைத் தேடி பழைய வீட்டின் முகவரிக்கு வந்துள்ளார். அங்கு நான் இல்லை என்றதும் என் தங்கை லட்சுமியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி தொல்லை கொடுத்துள்ளார்.

லட்சுமி
லட்சுமி

இந்தத் தகவலை லட்சுமி எனக்குப் போனில் தெரிவித்ததும் கொளத்தூருக்கு நானும் என் கணவர் சங்கரும் சென்றோம். அங்கு, என் தங்கை மகளின் கழுத்தை ரவி நெரித்துக் கொண்டிருந்தார். உடனே நாங்கள் வீட்டிலிருந்த கட்டையால் ரவியைத் தாக்கி மகளை மீட்டோம். பின்னர் ரவியை அங்கிருந்து வெளியில் செல்லும்படி கூறினோம். ஆனால் ரவி, என்னையும் என் சகோதரியையும் அவதூறாகப் பேசினார். அதோடு எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ள முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் மீண்டும் ரவியைத் தாக்கினோம். அவரும் எங்களைத் தாக்கினார். குடிபோதையில் இருந்த அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனால் பயந்த நாங்கள் 4 பேரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரண் அடைந்தோம்.

ராஜமங்கலம் காவல் நிலையம்
ராஜமங்கலம் காவல் நிலையம்

என்னைப்போல ரவியும் மனம் மாறியிருந்தால் எந்த வித பிரச்னையும் வந்திருக்காது. ரவியுடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தால் என் குடும்பமும் என்னுடைய சகோதரியின் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் 2-ம் கட்டமாக இன்று நடந்துவருகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் ராஜமங்கலம் போலீஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் தேர்தல் பணியோடு கொலை வழக்கையும் போலீஸார் விசாரித்தனர். விடிய விடிய கொலை வழக்கை விசாரித்த போலீஸார், இன்று காலை முதல் தேர்தல் பணியிலும் ஈடுபட்டனர்.