Published:Updated:

`வாக்கி டாக்கி சத்தம்; தலைக்கேறிய போதை!' -போலீஸை மிரளவைத்த ஜோதிடர் கடத்தல்

ஜோதிடர் கோபிநாதன்
ஜோதிடர் கோபிநாதன்

`உங்கள் வங்கிக் கணக்கில் 8 லட்சம் ரூபாய் உள்ளது' என்று கடத்தல் கும்பல் கூறியதும், சென்னை ஜோதிடர் அதிர்ச்சியில் உறைந்தார்.

ஜோதிடர் கடத்தல்

சென்னை அம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்த ஜோதிடர், கோபிநாதன். இவரை போரூரில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என 2 பேர் அழைத்துச்சென்றனர். பின்னர், வானகரத்தில் கோபிநாதனை அடைத்துவைத்த அந்தக் கும்பல், 7 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது.

அப்போது கோபிநாதன், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது, குறிப்பிட்ட வங்கியின் பெயரைக் கூறிய கடத்தல் கும்பல், அதில் உன் மகளின் பெயரில் 8 லட்சம் ரூபாய் சேமிப்புக் கணக்கில் உள்ளதாகக் கூறியுள்ளது. அதைக் கேட்டதும் கோபிநாதன் அதிர்ச்சியில் உறைந்தார். கோபிநாதனிடம் 8 லட்சம் ரூபாய் இருப்பது எப்படி கடத்தல் கும்பலுக்குத் தெரிந்தது என்ற கேள்வி போலீஸாருக்கு எழுந்துள்ளது.

ஜோதிடர் கோபிநாதன்
ஜோதிடர் கோபிநாதன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``ஜோதிடர் கோபிநாதன் கேரளாவைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று மகள்கள். இருவருக்கு திருமணமாகிவிட்டது. திருமணமாகாத மகளுக்காக கோபிநாதன், வங்கியில் 8 லட்சம் ரூபாயை சேமித்துவைத்துள்ளார். இந்தத் தகவலைத் தெரிந்த கும்பல்தான் கோபிநாதனை கடத்திச் சென்று பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளது. கோபிநாதனைக் கடத்திய கும்பல், தங்களை போலீஸ் என்றே அவரின் குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மது வாங்கிக் கொடுத்த கடத்தல் கும்பல்

கோபிநாதனை மீட்க தனிப்படை போலீஸார் முயற்சிசெய்ய, கடத்தல் கும்பலிடம் ஜோதிடரின் மகள் செல்போனில் பேசியபோது வாக்கிடாக்கியின் சத்தம் கேட்டது. அந்தக் கும்பலுடன் பேசிய அனைத்து உரையாடல்களையும் ரெக்கார்டு செய்து வைத்துள்ளோம். கோபிநாதன் அடைத்துவைக்கப்பட்ட இடத்தை தனிப்படை போலீஸார் நெருங்கியதும் உஷாரானவர்கள், அவரை விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கடத்தல்
கடத்தல்
 `பூஜையில் நடந்த தவறால்  இறந்துவிட்டார்’ -ரூ.7 லட்சம் கேட்டு சென்னை ஜோதிடரைக் கடத்திய கும்பல்

கோபிநாதனுக்கு டீ, சாப்பாடு ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த கடத்தல் கும்பல், ஒரு அறையில் அடைத்துவைத்துள்ளனர். கோபிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அதனால், ஊரடங்கு நேரத்திலும் மதுவை வாங்கி வைத்திருந்த கும்பல், கோபிநாதனுக்கும் அதைக் கொடுத்துள்ளனர். கோபிநாதனுக்கு மதுபோதை தலைக்கேறிய பிறகுதான் அவரை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். போதையில் இருந்ததால் கோபிநாதனால் தெளிவாகப் பேச முடியவில்லை. போதை தெளிந்த பிறகு, அவர் கடத்தல் கும்பல்குறித்த தகவல்களை தனிப்படை போலீஸாரிடம் விளக்கமாகக் கூறியுள்ளார்.

8 லட்சம் ரூபாய்!

கோபிநாதனிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட கும்பல், 8 லட்சம் ரூபாயில் 7 லட்ச ரூபாயைக் கேட்டு மிரட்டியுள்ளது. நல்லவேளை, கோபிநாதனின் குடும்பத்தினர் சரியான நேரத்தில் காவல்துறையில் புகாரளித்ததால் கடத்தல் கும்பலின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. கோபிநாதனைக் கடத்தியவர்களின் சிசிடிவி பதிவுகள், செல்போன் உரையாடல்கள் உள்ளதால் விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோம். மேலும், கோபிநாதனின் செல்போனும் அந்தக் கும்பலிடம்தான் உள்ளது" என்றார்.

அம்பத்தூர் காவல் நிலையம்
அம்பத்தூர் காவல் நிலையம்

தனிப்படை போலீஸார் கூறுகையில், ``ஜோதிடர் கோபிநாதன் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில், தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கோபிநாதன், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூரில் தங்கியிருந்து ஜோதிடம், பரிகார பூஜை எனச் செய்துவருகிறார்.

அதன்மூலம் கிடைத்த பணத்தில்தான் குடும்பத்தை நடத்திவந்துள்ளார். எனவே, ஜோதிடர் கோபிநாதன் குறித்து முழு விவரங்களைத் தெரிந்தவர்களே இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். பரிகார பூஜையில் ஒருவர் இறந்ததாகக் கூறி கோபிநாதனைக் கடத்திய கும்பல், காவல்துறை நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவைக்கத்தான் பணம் கேட்டுள்ளனர். அவர்களின் அணுகுமுறை அனைத்தும் காவல்துறையினர் போலவே இருந்துள்ளது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு