Published:Updated:

` தொழிலதிபர் ரீட்டா மரணத்துக்கு என்ன காரணம்?' - கணவர் லங்கா லிங்கம் கூறிய அதிர்ச்சித் தகவல்

எஸ்.மகேஷ்

என் மனைவி ரீட்டாவின் அம்மா, சமீபத்தில் இறந்துவிட்டார். இதனால் தனிமையில் இருந்த அவர், மன வருத்தத்தில் இருந்ததாக ரீட்டாவின் கணவர் லங்கா லிங்கம் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

Reeta and Lanka lingam
Reeta and Lanka lingam

சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் குடியிருந்த பெண் தொழிலதிபர் ரீட்டா, நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரீட்டாவின் கணவர் லங்கா லிங்கம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் ரீட்டாவின் மரணம்குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

reeta
reeta

``நான் (லங்கா லிங்கம்), மேற்கண்ட முகவரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்துவருகிறேன். கடந்த 4.9.1991-ல் ரீட்டாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திவந்தோம். எங்களுக்கு சிவலிங்கா என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், என் மகனுக்குத் திருமணம் நடந்தது. அவர், நீலாங்கரையில் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறார். என் மகள் மாளவிகா சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார்.

என் மனைவியின் அம்மா, சமீபத்தில் இறந்துவிட்டார். அந்த வருத்தத்தில் ரீட்டா இருந்துவந்தார். வெளிநாட்டில் உள்ள மகளை சென்னைக்கு வரும்படி ரீட்டா கூறியிருந்தார். ஆனால், அவர் வரவில்லை. இதனால் ரீட்டா மேலும் மனவருத்தத்துக்கு உள்ளானார். கடந்த 11-ம் தேதி, நாங்கள் இருவரும் கோயம்பேடு அலுவலகத்துக்குச் சென்றோம். அதன்பிறகு, ரீட்டா அலுவலகத்திலிருந்து சென்றுவிட்டார். நான், பேட்மின்டன் கிளப்புக்கு விளையாடச் சென்றுவிட்டேன். அதன்பிறகு, ரீட்டாவைச் சந்திக்கவில்லை. ரீட்டாவுக்கு போன் செய்தேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. 12-ம் தேதி, ரீட்டாவின் தோழி மேகலா போன் செய்துள்ளார். அப்போதும் ரீட்டா போனை எடுக்கவில்லை.

`மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார்!' - சென்னையில் பிரபல கார் விற்பனை நிறுவனப் பெண் நிர்வாகி தற்கொலை
fir copy
fir copy

இதனால் மேகலா, ரீட்டாவைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் காவலாளிக்கு தகவல் தெரிவித்துள்ளார், மேகலா. அதன்பிறகுதான் ரீட்டா தற்கொலை செய்துகொண்ட தகவல் எனக்குக் கிடைத்தது" எனப் புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், 174 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஃப்ஐஆரை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு போலீஸார் அனுப்பிவைத்துள்ளனர்.