Published:Updated:

`கோலம்போட்ட காயத்ரி; அறப்போர் இயக்கத்தை ஏன் சுட்டிக்காட்டினார் கமிஷனர்?' -அதிர்ச்சிப் பின்னணி

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

சென்னை பெசன்ட் நகரில் சி.ஏ.ஏ எதிர்ப்புக் கோலம் போட்ட காயத்ரிக்கு அறப்போர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரஸ்மீட்டில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சுட்டிக்காட்டினார்.

சென்னை பெசன்ட் நகரில் வீட்டின்முன் கோலம் போட்ட பெண்களைக் காவல்துறை கைது செய்தது. இதையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகக் கோலங்கள் போடப்பட்டன. இந்தநிலையில் புத்தாண்டையொட்டி நிருபர்களைச் சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு குற்றங்கள் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

மேலும், அவர் புத்தாண்டையொட்டி விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகள், செயின் பறிப்புச் சம்பவ வழக்குகள், காவலன் செயலி குறித்த புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். பின்னர் அவர், சென்னை பெசன்ட் நகரில் சி.ஏ.ஏ எதிர்ப்புக் கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட தகவலை சி.சி.டி.வி ஆதாரங்களுடன் விளக்கினார்.

அப்போது அவர், சி.ஏ.ஏ எதிர்ப்புக் கோலம் போட்டதாக வழக்கறிஞர் காயத்ரி உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் காயத்ரி என்பவருக்குப் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். மேலும், கோலம் போடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

அடுத்தவர் வீட்டின்முன் அனுமதியின்றிக் கோலம் போட்டதால்தான் காயத்ரி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' எனக் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். மேலும் அவர், காயத்ரி உட்பட 8 பேருக்கு அறப்போர் இயக்கம் உட்பட சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

`அறப்போர் இயக்கத்தின் பெயரை எதற்காக கமிஷனர் குறிப்பிட்டார்?' என அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் கேட்டோம்.

ஜெயராமன்
ஜெயராமன்

கடந்த ஜூன் மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அனுமதி கேட்பது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்தோம். அப்போது, அமைச்சர் ஒருவரைச் சந்திக்குமாறு கமிஷனர் கூறினார். அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில் அவரை எப்படி நாங்கள் சந்திக்க முடியும். அதனால் அமைச்சரை நாங்கள் சந்திக்கவில்லை.

Vikatan

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டுவருவதோடு கடந்த சில வாரங்களுக்கு முன் எம்-சாண்ட் ஊழலையும் வெளியிட்டோம். இதனால் அறப்போர் இயக்கத்தின் மீது சென்னை போலீஸ் கமிஷனருக்குக் காழ்ப்புணர்ச்சி இருந்துள்ளது. இதனால்தான் சி.ஏ.ஏ எதிர்ப்புக் கோலம் போட்ட சம்பவத்தில் கைதான காயத்ரிக்கு அறப்போர் இயக்கம் ஆதரவு தெரிவித்த தகவலை பிரஸ்மீட்டில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கோலம் போடும் காயத்ரி
கோலம் போடும் காயத்ரி

சி.ஏ.ஏ எதிர்ப்புக் கோலம் போட்டதற்கு அறப்போர் இயக்கம் மட்டுமா ஆதரவு தெரிவித்தது. தி.மு.க-வும் ஆதரவு தெரிவித்தது. ஏன் தி.மு.க-வின் பெயரை கமிஷனர் குறிப்பிடவில்லை. மேலும் காயத்ரிக்கும் எங்கள் இயக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏற்கெனவே கமிஷனர் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது. அந்தப் புகாரும் கிடப்பில் உள்ளது" என்றார் கொதிப்புடன்.

காயத்ரியிடம் பேசினோம். ``கமிஷனரின் குற்றச்சாட்டுக்கு இன்று பிற்பகலில் விளக்கம் அளிக்க உள்ளேன்" என்றவரிடம், பாகிஸ்தான் அமைப்புடனான தொடர்பு குறித்து கேட்டபோது, ``தற்போது எந்தப் பதிலும் கூறவிரும்பவில்லை" என்றார்.

சென்னை கமிஷனர் மீது அறப்போர் இயக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், ``கமிஷனருக்கும் அறப்போர் இயக்கத்துக்கும் இடையே எந்தவிதப் பிரச்னையும் இல்லை. சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம். அறப்போர் இயக்கத்தின் மீது சில வழக்குகள் உள்ளன. சி.ஏ.ஏ எதிர்ப்புக் கோலம் போட்ட காயத்ரிக்கு அறப்போர் இயக்கம் ஆதரவு அளித்ததால்தான் அதைக் கமிஷனர் குறிப்பிட்டார்" என்றார்.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் நம்மிடம் பேசுகையில், ``ஜனநாயக முறையில் நாங்கள் மக்கள் போராட்டத்தை நடத்திவருகிறோம். சமீபகாலமாக அறப்போர் இயக்கம், சில ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. சி.சி.ஏ எதிர்ப்புக் கோலம் போட்ட காயத்ரிக்குப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் பெயரை மட்டும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். இதை அச்சுறுத்தும் முயற்சியாகவே பார்க்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு