Published:Updated:

`கழிவறையில் ஸ்பை கேமரா; ஹார்டுடிஸ்க்கில் ஆபாச வீடியோ!' - ஐ.டி.ரெய்டில் சிக்கிய சென்னை கணக்காளர்

சென்னையில் உள்ள பிரபலமான ஏற்றுமதி நிறுவனத்தில் நடந்த ஐ.டி. ரெய்டில் சிக்கிய கணக்காளர் செந்தில்குமாரின் ஹார்டு டிஸ்க்கில் ஊழியர்களின் 150-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

சென்னை அடையாறு கேனால் ரோடு பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் உதவி கணக்காளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 3 நாள்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதனால் வேலைக்குச் சென்ற செந்தில்குமார், வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். 30-ம் தேதி காலையில் வீட்டுக்குச் சென்ற செந்தில்குமார், ஆபீஸில் டென்ஷன் என்று மட்டும் மனைவி சித்ராவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு வீட்டிலிருந்து மீண்டும் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார்.

சடலமாக செந்தில்குமார்
சடலமாக செந்தில்குமார்

இந்த நிலையில் 1-ம் தேதி அதிகாலையில் சித்ராவுக்கு செந்தில்குமாரின் நிறுவனத்திலிருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், உடனே அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும்படி கூறியுள்ளார். அங்கு சென்ற சித்ராவிடம் செந்தில்குமார் அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக செந்தில்குமாரின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் உள்ளது. செந்தில்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ரா, அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் இன்று புகார் கொடுத்துள்ளார்.

செந்தில்குமார் மரணத்துக்கு என்ன காரணம் என்று அடையாறு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``செந்தில்குமார் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் செந்தில்குமாரிடமிருந்து லேப்டாப், கணக்கில் வராத 40,000 ரூபாய், 5 சவரன் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து செந்தில்குமாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்டு டிஸ்க்கை வருமானவரித்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கணக்காளர் செந்தில்குமார்,
கணக்காளர் செந்தில்குமார்,

இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு வருமான வரித்துறையினர் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் செந்தில்குமாரிடம் விசாரித்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப்பிறகுதான் செந்தில்குமார், அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால், செந்தில்குமாரின் உறவினர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிவருகின்றனர். வருமான வரித்துறையினரிடம் விசாரித்தபோது அவர்கள் பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்க், 2 ரகசிய கேமராக்கள் ஆகியவற்றை எங்களிடம் காண்பித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செந்தில்குமார், இந்த நிறுவனத்தில் உதவி கணக்காளராகப் பணியாற்றிவந்துள்ளார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் 2 ரகசிய கேமராக்களை செந்தில்குமார் பொருத்தி அதன்மூலம் பதிவான வீடியோக்களை ஹார்டு டிஸ்க்கில் சேமித்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களில் இருக்கும் பெண்களுக்கே தெரியாமல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

`அதிகாலை போன்; ஆபீஸில் டென்ஷன்'- ஐ.டி ரெய்டுக்குப்பிறகு இறந்த கணக்காளர்

இந்த வீடியோக்களை நிறுவனத்தின் உயரதிகாரிகளும் பார்த்து வெளியில் தெரிந்தால் அசிங்கம் என அமைதியாக இருந்துள்ளனர். ஆனால், செந்தில்குமாரின் குடும்பத்தினரின் செயல்பாடுகளால் இந்த வீடியோ விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டது. செந்தில்குமாரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய அவரின் உறவினர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் உள்ளனர்" என்றனர்.

இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவியின் சகோதரியின் கணவர் கண்ணனிடம் கேட்டதற்கு, ``செந்தில்குமாரும் என் மனைவியின் சகோதரி சித்ராவும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தபோதுதான் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு செந்தில்குமார், அடையாறில் உள்ள கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கு மாதம் 40,000 ரூபாய் சம்பளம். சமீபத்தில் அவரின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்கூட செந்தில்குமாரை செல்லப்பிள்ளை என்று அனைவரும் சொல்லி அழைத்துள்ளனர். அப்படியிருந்த செந்தில்குமார் மீது தன்னுடன் பணியாற்றும் பெண்களுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்ததாகப் பொய் சொல்கிறார்கள்.

உதவி கணக்காளர் செந்தில்குமார்
உதவி கணக்காளர் செந்தில்குமார்

செந்தில்குமார் மரணத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை திசைதிருப்ப இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. வீடியோ ஆதாரங்கள் இருந்தால் அதை எங்களிடம் காட்டச் சொல்லுங்கள். அந்த ஹார்டு டிஸ்க், செந்தில்குமாரிடமிருந்துதான் பறிமுதல் செய்யப்பட்டதா என்பதை முதலில் ஐ.டி. துறையினரும் போலீஸாரும் உறுதிப்படுத்த வேண்டும். செந்தில்குமாரை இழந்து தவித்துவரும் சூழலில் வீடியோ தகவல் எங்கள் குடும்பத்தினரை மேலும் வேதனைப்படுத்துகிறது. நிறுவனத்துக்கு ஆதரவாகத்தான் காவல்துறையினர் செயல்படுகின்றனர். அவசரம் அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்ய எங்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். அதுதான் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், செந்தில்குமார் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து எங்களுக்கு பிரஷர் வருகிறது. செந்தில்குமாரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.