Published:Updated:

8-வது மாடியில் ஒரு ஷூ; சடலத்துடன் இன்னொரு ஷூ! -வேலையில் சேர்ந்த முதல்நாளில் ஹெச்.ஆர் இறந்தது எப்படி?

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி. அலுவலகத்தின் 8-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஹெச்.ஆர். தனிதா ஜூலியஸ் எப்படி இறந்தார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Danita
Danita

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஜூலியஸ். இவர், பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். இவரின் மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பெங்களூரில் திருமணமாகிக் குடியிருந்துவருகிறார். இரண்டாவது மகள் தனிதா ஜூலியஸ் (24). இவர் எம்.ஏ ஆங்கிலம் படித்துவிட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஐ.டி. நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவ் ஹெச்.ஆர் ஆகப் பணியாற்றிவந்தார். வேலைக்குச் சேர்ந்த முதல்நாளில் தனிதா ஜூலியஸ், அலுவலகத்தின் 8-வது மாடியிலிருந்து விழுந்து இறந்தார். இதுகுறித்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹெச்.ஆர். தனிதா இறந்தது எப்படி என்பது தெரியவந்துள்ளது.

Danita
Danita

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், ``திருச்சியைச் சேர்ந்த தனிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்காகச் சென்னை வந்தார். சென்னை தி.நகரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த அவர், வடபழனியில் வேலைபார்த்துவந்துள்ளார். அதன்பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று அவர், வேலைபார்க்கும் 2-வது தளத்திலிருந்து 9-வது தளத்தில் உள்ள உணவகத்துக்குப் படி வழியாக ஏறிச் சென்றுள்ளார்.

8-வது மாடியிலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார். தனிதாவின் சடலம் கிடந்த இடத்தில் அவர் காலில் அணிந்திருந்த ஒரு ஷூ கிடந்தது. இன்னொரு ஷூ, 8-வது மாடியில் இருந்தது. ஷூவின் அருகில் செல்போன் கிடந்தது. மேலும், 8-வது மாடியிலிருந்து அவர் விழுந்ததால் அவரின் கை, கால்கள் மற்றும் உடலில் உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளன. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

Danita
Danita

மேலும், தனிதா இறப்பதற்கு முன் அவரின் அப்பாவுடன் வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்துள்ளார். அதில், குடும்பம், வேலை தொடர்பான தகவல்களை தனிதா பகிர்ந்துள்ளார். முதல்நாள் வேலை குறித்த தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து குடும்பம் தொடர்பான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். அதில், வரும் நவம்பர் மாதம் உறவினர் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் நான் எப்படி கலந்துகொள்ள முடியும் என்று தனிதா அப்பாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜூலியஸ் பதிலளித்துள்ளார். அந்த சேட்டிங் மெசேஜ், ஜூலியஸ் போனில் உள்ளது. அதை அவர் எங்களிடம் காண்பித்தார்.

தனிதாவின் செல்போன் லாக் செய்யப்பட்டுள்ளதால் அவர் இறுதியாக யாருடன் பேசினார் என்ற விவரத்தைச் சேகரிக்க முடியவில்லை. இதற்காக தனிதாவின் செல்போன் அழைப்புகள் குறித்த தகவல்களைச் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து கேட்டுள்ளோம். அந்தத் தகவல் கிடைத்தபிறகே இறப்பதற்கு முன் அவர் யார், யாருடன் பேசினார் என்ற தகவல் தெரியவரும். தனிதா, தன்னுடைய உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்திவந்துள்ளார். குறிப்பாக உடல் பருமனைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். உணவிலும் கடும் கட்டுப்பாடாகவே இருந்துள்ளார்.

Danita
Danita

மாரத்தான் ஓட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அதோடு மாடிகளில் ஏறுவதற்கு லிப்ட்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளிலேயே பயன்படுத்திவந்துள்ளார். அதுதான் அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துள்ளது. தனிதாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் திருச்சிக்கு தனிதாவின் சடலத்தைக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி நடத்தப்பட்டுள்ளது" என்றார்

தனிதாவின் அப்பா ஜூலியஸ் போலீஸாரிடம் ,`என் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையல்ல. அவளை அப்படி நான் வளர்க்கவும் இல்லை. தைரியமானவர். இதனால் அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்கமாட்டார்' என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் தனிதாவின் ஒரு ஷூ 8-வது மாடியிலும் இன்னொரு ஷூ அவரின் சடலத்தின் அருகில் இருந்தும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். முதல் தளத்தில் அவரின் தலை மோதியதற்கான தடயங்கள் உள்ளன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தனிதா, தவறி விழுந்துதான் இறந்திருக்கிறார் என்பதை போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வேலைக்குச் சேர்ந்த முதல்நாள்! - திருச்சி பெண் ஐ.டி ஊழியருக்கு சென்னையில் நேர்ந்த சோகம்

தனிதாவின் சடலத்தைப் பார்த்த அவரின் அம்மா சாந்தி, `உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்' என்று கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். தனிதா மாடியிலிருந்து தவறி விழுந்தபோது பணியிலிருந்த காவலாளி, ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தனர். மேலும், தனிதா பணியாற்றும் 2-வது அறையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், 8, 9-வது மாடிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது தன்னுடைய இருக்கையிலிருந்து தனிதா எழுந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால், மாடிப்படி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அங்கு தனிதா சென்ற காட்சிகள் பதிவாகவில்லை. இதனால் ஐ.டி. நிறுவன அலுவலகத்தைத் தவிர அருகில் உள்ள இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.