Published:Updated:

`தமிழகம் தாண்டியும் ஏராளமான புகார்கள்..!' - சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இன்ஜினீயர் சுஜி வழக்கு

காசி என்ற சுஜி
காசி என்ற சுஜி

சுஜி மீதான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என சி.பி.எம் குமரி மாவட்டக் குழு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கோழிக்கடை வியாபாரி தங்கபாண்டியன் என்பவரின் மகன் சுஜி என்ற காசி (26). இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கன்னியாகுமரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தன்னைக் காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் காசி என்ற இன்ஜினீயர் சுஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரது மொபைல்போனை சோதனையிட்டதில் பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆன பெண்கள் என சுமார் 90-க்கும் அதிகமான பெண்களை ஏமாற்றி சுஜி நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை ஒரு சிறுமி உட்பட ஐந்து பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ வழக்கு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து அதிக வட்டி வாங்கியதுடன் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கை அபகரித்ததாக வடசேரி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தார். அதன்படி கந்துவட்டி வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஜி மீது இதுவரை ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
சி.பி.எம் ஆர்ப்பாட்டம்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகத் தன்னை தொழில் அதிபர்போல் காட்டிக்கொள்வார் சுஜி. வலைதளங்களில் நண்பராக வரும் பெண்களிடம் பேசி காதலிப்பது போல் நடித்து அவர்களோடு நெருக்கமாக இருப்பார். பெண்களுடன் தனியாக இருக்கும் சமயத்தில் அதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வார். பின்னர், தனது உறவினருக்கு உடம்பு சரியில்லை என்பன போன்ற காரணங்களைச் சொல்லி பெண்களிடம் பணம் கேட்பார். பணம் கொடுக்காமல் இருந்தால் அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போடுவதாகத் தன் நண்பர்களைக் கொண்டு மிரட்டுவார். சில பெண்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றமும் செய்துள்ளார். யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில் சென்னை பெண் மருத்துவர் புகாரைத் தொடர்ந்து சிலர் புகார் அளித்துள்ளனர்.

`கைவிலங்குடன் `ஹார்ட்டின் போஸ்’; 3 நாள் போலீஸ் காவல்!’- வேகமெடுக்கும் இன்ஜினீயர் சுஜி வழக்கு

சுஜி மீது அடுத்தடுத்து வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதுவரை இரண்டு முறையாக ஒன்பது நாள்கள் சுஜியை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்த சுஜியின் நண்பர் டேசன் ஜினோ கைது செய்யப்பட்டார். மேலும், வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு நண்பரான கெளதம் என்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அவரது புகைப்படம் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு loc நோட்டீஸ் போலீஸாரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுஜி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி

சுஜி வழக்கில் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலருக்கும் தொடர்பிருப்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதைச் சரிக்கட்டும் வகையிலேயே சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என சி.பி.எம் குமரி மாவட்டக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "சுஜி என்ற காசி மீதான புகார்கள் தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பதால் குமரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்துவதில் சிரமம் உள்ளது. எனவே, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். அதற்கான கோப்புகள் அனுப்பப்பட்ட நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு