Published:Updated:

`பழிக்குப்பழி கொலைகள்; அரசியல் என்ட்ரி!’- புதுச்சேரி பெண் தாதா எழிலரசியின்`திடீர்’ கைது பின்னணி

எழிலரசி
எழிலரசி

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பேட்டி கொடுத்த புதுச்சேரியின் பிரபல பெண் தாதா எழிலரசியை அதிரடியாகக் கைது செய்திருகிறது காவல்துறை.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த சாராய வியாபாரியான ராமு, தன் முதல் மனைவியான வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எழிலரசியை இரண்டவதாக திருமணம் செய்துகொண்டார். அதில் ஆத்திரமடைந்த முதல் மனைவியான வினோதா, கணவர் ராமுவையும், எழிலரசியையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவினார். அந்த முயற்சியில் சாராய வியாபாரியான ராமு கொல்லப்பட்டுவிட, அவருடன் இருந்த எழிலரசி படுகாயங்களுடன் தப்பினார். உயிர்பிழைத்து வந்த எழிலரசி தன் கணவரின் கொலைக்குக் காரணமான வினோதா, அவருக்கு உதவி செய்த அய்யப்பன் மற்றும் முன்னாள் புதுச்சேரி சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார், ராமுவின் சகோதரர் மற்றும் ஒரு வழக்கறிஞர் உள்ளிட்டவர்களைப் பழி வாங்குவேன் என்று சபதமெடுத்திருப்பதாகக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

எழிலரசி
எழிலரசி

அதையடுத்த சில நாள்களில் ராமுவின் முதல் மனைவி வினோதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அய்யப்பன் இருவரும் கூலிப்படையினர் மூலம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரு கொலைகளுக்கும் பின்னணியாக இருந்து எழிலரசி தனது சபதத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்றது காவல்துறை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வரை காரைக்கால் நிரவியில் தனக்குச் சொந்தமான திருமண நிலையத்திலேயே, கூலிப்படை கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டார் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார்.

அவருக்குப் பாதுகாப்பாக இருந்த துப்பாக்கி ஏந்திய காவலரை மிரட்டி அவரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு கூலிப்படையினர் செய்த இந்தக் கொலை புதுச்சேரி மாநிலத்தையே பதற வைத்தது. ராமுவின் கொலைக்குப் பழிக்குப் பழியாகவே எழிலரசி கூலிப்படையினரை ஏவி இந்தக் கொலையை அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறிய காவல்துறை, எழிலரசியைத் தேட ஆரம்பித்தது. அதையடுத்த சில நாள்களில் தலைமறைவாக இருந்த எழிலரசி நீதிமன்றத்தில் சரணடந்தார்.

எழிலரசி
எழிலரசி

பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறைக்குள் இருக்கும் தாதா மர்டர் மணிகண்டனை சந்தித்து அடுத்த கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஜாமீனில் வெளிவந்த எழிலரசி மறைவிடங்களில் தங்கி காவல் நிலையங்களில் கையொப்பம் போட்டு வந்தார். பின்னர் புதுச்சேரி விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மற்றும் ரவுடி மர்டர் மணிகண்டனின் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த எழிலரசியை சுற்றி வளைத்தது காவல்துறை. அப்போது கைது செய்யப்பட்ட 14 ரவுடிகளில், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த விக்ரமனும் ஒருவர்.

மீண்டும் வெளியே வந்த எழிலரசி தனது பகுதியில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு காவல் துறையினர் தனக்குத் தொல்லை செய்து வருவதாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்த அவர், காரைக்கால் நிரவிதிருப்பட்டினம் தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்ததோடு, கட்சி சார்பாகவா அல்லது சுயேச்சையா என்பது அப்போது முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அவரின் அரசியல் அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், இன்று காலை எழிலரசி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது காரைக்கால் காவல்துறை.

தாதா எழிலரசி
தாதா எழிலரசி

தாதா எழிலரசி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனக் குறிப்பிட்டுச் சொன்ன தொகுதி காரைக்கால் மாவட்டம் நிரவிதிருப்பட்டினம். இந்தத் தொகுதியில் தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏவாக இருப்பவர் கீதா ஆனந்தன். இவர் இறந்துபோன சாராய வியாபாரி ராமுவின் அண்ணன் ஆனந்தனின் மனைவி. புதுச்சேரியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் நாராயணசாமியின் ஆட்சிக்கு தி.மு.க ஆதரவு கொடுத்து வருகிறது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் தி.மு.க ஆதரவில் அங்கு ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், எழிலரசி நிரவிதிருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு நெருக்கடி ஏற்படும் என நினைத்த கீதா தி.மு.க தலைமையின் மூலம் நாராயணசாமிக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இன்று காலை புதுச்சேரி காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் எழிலரசியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்கின்றனர் இரு தரப்புக்கும் நெருக்கமான சிலர்.

அடுத்த கட்டுரைக்கு