Published:Updated:

`அப்பாவின் அன்புக் கட்டளையை மீற முடியவில்லை!' - விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட மகளின் வாக்குமூலம்

`எங்கள் வீட்டில் அப்பா எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். அதனால்தான் விஷம் கலந்த உணவைக் குழந்தைகளுக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டேன்'.

விஷம் குடித்த கோவிந்தசாமி குடும்பம்
விஷம் குடித்த கோவிந்தசாமி குடும்பம்

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில், சிவசக்தி நகர் 24-வது தெருவில் குடியிருந்தவர் கோவிந்தசாமி (65). கட்டட கான்டிராக்டர். இவரின் மனைவி சுப்பம்மாள் (60). இவர்களுக்கு நாகராஜ் (35), ரவி (30) என்ற இரண்டு மகன்களும் முனியம்மாள், ஜோதி, கல்யாணி (25) என மூன்று மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்களும் கோவிந்தசாமியுடன் ஒரே வீட்டில் குடியிருந்தனர். கோவிந்தசாமியுடன் சேர்ந்து நாகராஜும் ரவியும் கட்டடப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். மூத்த மகள் முனியம்மாள், சென்னை மாதவரத்திலும் ஜோதி ஆந்திராவிலும், கல்யாணி அயப்பாக்கத்திலும் குடியிருந்தனர்.

விஷம்
விஷம்

மகள்கள், மகன்களின் திருமணத்துக்காக கோவிந்தசாமி, வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதற்கு மாதத் தவணையாக ரூ.51,000 செலுத்த வேண்டும். கடந்த சில மாதங்களாக வேலை இல்லாததால் கோவிந்தசாமியால் தவணையைச் சரிவர செலுத்த முடியவில்லை. மேலும், குடும்பச் செலவுக்காக கடனுக்கு மேல் கடன் வாங்கினார். தன்னுடைய கடைசி மகள் கல்யாணியிடமும் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாயை கோவிந்தசாமி கடனாக வாங்கியிருந்தார். மேலும், அவருக்கு தனிப்பட்ட முறையில் சில லட்சங்கள் கடன் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கோவிந்தசாமி வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரின் இரண்டு மருமகள்களும் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் கடன் சுமையோடு மன நிம்மதியில்லாமல் கோவிந்தசாமி தவித்தார்.

இதனையடுத்து, கடந்த 12-ம் தேதி கோவிந்தசாமி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்கு அவரின் குடும்பத்தினர் அனைவரும் சம்மதித்தனர். விடுமுறையையொட்டி மகள் கல்யாணியும் அவரின் மகள்கள் சர்வேஸ்வரி (8), யோகலெட்சுமி (6) ஆகியோரும் வீட்டுக்கு வந்திருந்தனர். இதனால் 7 பேரும் விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டனர். அதில் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கல்யாணி மற்றும் அவரின் மகள்கள் என மூன்று பேரும் உயிருக்குப் போராடினர். இந்தச் சமயத்தில் கல்யாணியைத் தேடி அங்கு வந்த அவரின் கணவர் ஆறுமுகம், அனைவரும் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கோவிந்தசாமி, சுப்பம்மாள்
கோவிந்தசாமி, சுப்பம்மாள்

இதுகுறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸார் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்குப் போராடிய கல்யாணி மற்றும் 2 குழந்தைகளையும் தனியார் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மூன்று பேரும் நலமாக இருக்கின்றனர். அப்பா, அம்மா, சகோதரர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கல்யாணி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, போலீஸாரிடம் கல்யாணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, `எங்களின் திருமணச் செலவுகளுக்காகத்தான் வீட்டை அடமானம் வைத்து அப்பா கடன் வாங்கியிருந்தார். அவருக்குச் சில ஆண்டுகளாக வேலை இல்லை. இதனால் அப்பாவும் அண்ணன்களும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி வந்ததால் கடன் தொகை அதிகமானது. இதனால் அதற்காகவும் அப்பா கடன் வாங்கினார். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை, அப்பா எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். கடன் தொகையைச் செலுத்த முடியாமல் தவித்த அப்பாவுக்கு குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகள் கடும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 12-ம் தேதி அம்மா உணவு சமைத்து அதில் விஷம் கலந்திருந்தார்.

கோவிந்தசாமியின் மகன்
கோவிந்தசாமியின் மகன்

அதை அனைவரும் சேர்ந்து சாப்பிட வீட்டில் அமர்ந்தோம். அப்போதுதான் அப்பா அந்த முடிவைச் சொன்னார். `இதற்கு மேல் கடனோடு வாழ விரும்ப எனக்கு மனம் இல்லை. மரியாதையாக இந்த இடத்தில் வாழ்ந்தேன். கடன்காரர்களால் அந்த மரியாதையை இழக்க நான் விரும்பவில்லை. அதனால்தான் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளேன். என் முடிவுக்கு சம்மதிப்பவர்கள் இந்த விஷம் கலந்த உணவைச் சாப்பிடலாம்' என்று கூறியபடி அப்பா முதலில் சாப்பிட்டார்.

அப்பாவின் அன்புக்கட்டளையால் அம்மா, அண்ணன்கள் என அனைவரும் அந்த விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டனர். அவர்கள் அனைவரும் சாப்பிட்டபிறகு நானும் குழந்தைகளும் சாப்பிட்டோம். சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக மயங்கிவிழுந்தனர். நானும் மயங்கிவிட்டேன். கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன். நானும் என் குழந்தைகளும் எப்படி உயிர் பிழைத்தோம் என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.