Published:Updated:

காதல் மனைவியின் கட்டளை; மிரட்டிய கொலை, கொள்ளை வழக்குகள்! - ரவுடி மணிகண்டன் `என்கவுன்டர்' பின்னணி

Rowdy Manikandan
Rowdy Manikandan

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டனை சென்னை கொரட்டூரில் என்கவுன்டர் செய்திருக்கிறது, தமிழகக் காவல்துறை.

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில்லை ஒட்டிய குயிலாப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், தாதா மணிகண்டன். 39 வயதான இவர்மீது ஆரோவில், கோட்டக்குப்பம், திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசுதல், கொலை மிரட்டல், கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி, ராஜ்குமார். தொழில் போட்டி காரணமாக இரு தரப்பினருக்குமிடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறில், இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாகக் கூறுகிறது காவல்துறை.

Rowdy Manikandan
Rowdy Manikandan
T.Silambarasan

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களைத் திருடி விற்பது என ஆரம்பித்த இவரது வாழ்க்கை, வழிப்பறி, கொலை, கொள்ளை, கூலிப்படை சப்ளை என விஸ்வரூபம் எடுத்தது. இந்தத் தொழில் போட்டி காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன், ராஜ்குமார் என்ற இரண்டு ரவுடிகள், மணிகண்டனுக்கு எதிரணியாகச் செயல்பட்டுவந்தனர். ஆரோவில் தொழிலதிபர் ஆந்திரேவைப் படுகொலை செய்தது, பொம்மையார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருள் ராஜை வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலைசெய்தது, குயிலாப்பாளையம் பாபு மற்றும் வெங்கட் இருவரையும் வெட்டிக் கொலைசெய்தது, ஆரோவில்லில் வசித்துவந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஷீடோ படுகொலை, குயிலாப்பாளையம் கருணா, மணி என்ற இருவரை ஒரே நாளில் கொலை செய்தது உள்ளிட்ட 8 வழக்குகளும், திருக்கோவிலூரில் ஆசிரியரைக் கடத்தி பணம் பறிந்தது, கோவையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை என 27 வழக்குகளும் இவர்மீது நிலுவையில் இருக்கின்றன. ஆனால், எந்த வழக்குகளிலும் ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்தார்.

`சரணடைந்துவிடுகிறேன்; வீட்டுக்கு வாருங்கள் - எஸ்.ஐயை தாக்கிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

ஒருகட்டத்தில், இவரின் தொழில் எதிரியான ரவுடி பூபாலன் போலீஸிடம் மனு கொடுத்து, திருந்தி வாழத் தொடங்கிய அதே நேரத்தில், மற்றொரு எதிரியான ரவுடி ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். மணிகண்டனின் தம்பிகளான ஏழுமலை மற்றும் ஆறுமுகம் இருவரும் அண்ணனின் தொழிலுக்கு வலதுகரமாக நின்றதால், எதிரிகளே இல்லாமல் தனது தொழிலில் வலம்வரத் தொடங்கினார் மணிகண்டன். இந்தக் காலகட்டத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட மணிகண்டன், விழுப்புரம் காவல்துறையினரின் நெருக்கடிகளால் குயிலாப்பாளையத்துக்கு வருவதைத் தவிர்த்து திருவண்ணாமலையில் புதியதாக வீடு கட்டி மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.

SP Jayakumar
SP Jayakumar

தன் காதல் மனைவியின் அறிவுரையின்படி திருந்தி வாழப் போவதாக காவல்துறையில் மனு கொடுத்தார். அதிலிருந்து சரியாக ஒரே வாரத்தில் இவரின் தம்பி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக, மயிலத்தில் ஓடஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்தது ராஜ்குமார் தரப்பு. அதன்பிறகு, `புலி வாலைப் பிடித்துவிட்டோம் இனி விட முடியாது' என்று உணர்ந்த மணிகண்டன், மீண்டும் ரவுடியிசத்தைக் கையில் எடுத்தார். தனது பரம எதிரியான ராஜ்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ரிலையன்ஸ் பாபு என்பவரைத் தனது நண்பன் சங்கர் கணேஷ் மூலம் படுகொலை செய்தார்.

ஆனால், இந்தக் கொலையை மணிகண்டனே நேரில் நின்று நிகழ்த்தினார் என்று அடித்துக் கூறிய காவல்துறை, அதே காரணத்துக்காகத்தான் அடுத்த 10 நாள்களில் காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை செய்யப்பட்டார் என்றது. கொலை, கொள்ளை எனத் தனது பழைய தொழிலை மீண்டும் கையிலெடுத்தார் மணிகண்டன். இதற்கிடையில், இவரது இரண்டாவது தம்பியான ஏழுமலை ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு, கடலூர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Representational image
Representational image

தொழிலதிபர் ரிலையன்ஸ் பாபு கொலை தொடர்பாக மணிகண்டனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியது காவல்துறை. இந்நிலையில்தான் சென்னை கொரட்டூரில் என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கிறார் ரவுடி மணிகண்டன். தங்களைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயற்சி செய்ததால், என்கவுன்டர் செய்ய நேரிட்டது என விளக்கமளித்திருக்கிறது காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு