Published:Updated:

`நீ ஜெயிச்சு என்ன பண்ணிட்டே, குடிக்கத் தண்ணிகூட கிடைக்கல..!’ - நாகை எம்.பி மீது கத்திவீச்சு?

மு.இராகவன்
PrasannaVenkatesh AB

கல்வீச்சுடன் சிறிய கத்தி ஒன்றும் எம்.பியின் ஜீப் பக்கத்தில் வந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வேதாரண்யம் சி.பி.ஐ ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Selvarasu M.p
Selvarasu M.p

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்ற செல்வராசு எம்.பி. மீது மர்ம நபர்கள் கத்தி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Selvarasu
Selvarasu

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாகைசூட வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று செல்வராசு எம்.பி. திறந்த ஜீப்பில் வேதாரண்யம் பகுதிக்குச் சென்றார். நேற்றிரவு 9 மணி அளவில் அகஸ்தியம்பள்ளி காளியம்மன் கோயில் தெரு பகுதியில் ஜீப்பில் நின்றபடி ஒலிபெருக்கி மூலமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார் செல்வராசு எம்.பி. அப்போது அவருடைய பேச்சைக் கேட்க ஜீப்பின் முன் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

இந்தநிலையில் கூட்டத்தில் குடிபோதையிலிருந்த அப்பு, லோகு, சரவணன் ஆகியோர், ``நீ ஜெயித்து என்ன பண்ணிட்டே. குடிக்க தண்ணீர் கிடைக்கலை. என்னமோ சாதிச்சி கிழிச்சாமாதிரி நன்றி தெரிவிக்க வந்துட்டே" என்றுகூறி தகராறு செய்துள்ளனர். இதில் கல்வீச்சுடன் சிறிய கத்தி ஒன்றும் எம்.பியின் ஜீப் பக்கத்தில் வந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வேதாரண்யம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் வீசிய கல் ஒன்று ஜீப்பின் பின்பக்கம் விழுந்தது. அவ்வளவுதான். அது கல்லா..கத்தியா.. என்று கூட தெரியலை.
செல்வராசு எம்.பி

`என்ன நடந்தது?' என்று நாகை எம்.பி. செல்வராசுவிடம் கேட்டோம். ``அகஸ்தியம்பள்ளியில் யாரோ ஒருவர் இறந்திருக்கிறார். துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீசிய கல் ஒன்று ஜீப்பின் பின்பக்கம் விழுந்தது. அவ்வளவுதான். அது கல்லா..கத்தியா.. என்று கூட தெரியலை. இச்சம்பவம் குறித்து எங்க கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். விசாரணைக்குப் பின்புதான் உண்மை தெரியவரும்" என்றார் இயல்பாக.