Published:Updated:

தஞ்சை: நடிகைக்குக் கொடுத்த கடன்; பறிபோன சொத்து! - கணவன் கொலையில் மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

அசிலா
அசிலா

யூசுப்பின் சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினேன். சிலமுறை அவரைக் கொலை செய்வதற்கு முயன்றும் அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எல்லோரிடமும் கூறி வந்தார்.

தஞ்சாவூரில் நிதி அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அசிலா என்பவர், போலீஸிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட யூசுப்
கொலை செய்யப்பட்ட யூசுப்

தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் மேம்பாலத்தில் திருச்சியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ஃபைனான்ஸ் அதிபர் யூசுப் என்பவரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. முக்கிய சாலையின் நடுவே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக யூசுப்பின் மனைவி அசிலாவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையினரை ஏவி அசிலாவே, யூசுப்பை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அசிலா, கூலிப்படையைச் சேர்ந்த சகாதேவன், பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சகாதேவன்
கைது செய்யப்பட்டுள்ள சகாதேவன்

போலீஸ் விசாரணையில் அசிலா கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த நானும் யூசுப்பும் குவைத்தில் வேலை செய்தபோது உயிருக்கு உயிராகக் காதலித்தோம் அதன்பிறகு, தஞ்சாவூருக்கு வந்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. குவைத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து பல்வேறு சொத்துகளை வாங்கினோம். மேலும் ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வந்தோம். யூசுப் குவைத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது தஞ்சாவூருக்கு வருவார். இதற்கிடையே ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன.

சொத்துகளை வாங்குவதற்கு தஞ்சை பர்மா பஜாரில் அமைந்துள்ள பெரிய செல்போன் ஷாப்பிங் கடையில் இருக்கும் ஒருவர் எங்களுக்கு பல உதவிகளைச் செய்தார். அவர் மூலமாகத்தான் வெளிநாட்டுப் பணத்தை இந்திய பணமாக மாற்றினோம். இதனால் பலரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஊருக்கு வரும்போதெல்லாம் யூசுப் என் மீது சந்தேகப்பட தொடங்கினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டையும் ஏற்படத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து யூசுப் குவைத்துக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

யூசுப் மனைவி அசிலா
யூசுப் மனைவி அசிலா

இந்நிலையில், ஃபைனான்ஸ் தொழிலும் பெரிய அளவில் வளர்ந்தது. அபார்ட்மென்ட் வீடுகள், விவசாயப் பண்ணை என 20 கோடி ரூபாய்க்கான சொத்துகள் உள்ளன. வெளியில் கடனாகப் பெரும் தொகையைக் கொடுத்திருந்தோம். திருச்சியில் சிறைக் காவலராக இருந்த செந்தில்குமார் என்பவருடன் பழகினேன். இதுவும் யூசுப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்தது.

அத்துடன் யூசுப்பும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். அந்தப் பெண்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கத் தொடங்கினார். இந்நிலையில், தனியார் வங்கியிலிருந்த லாக்கரை அதன் மேனேஜர் உதவியுடன் உடைத்து 300 பவுன் நகை, சொத்துப் பத்திரம் உள்ளிட்டவற்றை எடுத்துவிட்டேன். இதில் கோபமடைந்த யூசுப் என் மீது புகார் கொடுத்ததால், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்

பின்னர் வெளியே வந்த பிறகு ஒரே அடியாக என்னையும் பிள்ளைகளையும் அடித்துத் துரத்தினார். அதன்பிறகு நான் திருச்சிக்குச் சென்றுவிட்டேன். அவர் எங்களுக்கு எதையும் செய்யவில்லை. பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், யூசுப்பின் சொந்த அத்தை மகள். அவருக்கும் பெரிய தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளார். இதே போல் பலர் யூசுப்பிடம் பணம் வாங்கி பயன் அடைந்தனர்.

இடையில் என்னிடம் சமாதானம் பேசியதுடன் அவ்வப்போது திருச்சிக்கும் வந்து சென்றார். ஆனால், நான் வேறு பெண்களுடன் இருக்கும் தொடர்பை நிறுத்திக்கொள்ளுங்கள் எனக் கண்டித்தேன். அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரைக் கொலை செய்துவிட்டு சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினேன். சில முறை கொலை செய்வதற்கு முயன்றும் அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். அதன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எல்லோரிடமும் கூறி வந்தார்.

Vikatan

அதனால் யூசுப்பை தீர்த்துக்கட்ட சிலரின் உதவியுடன் கூலிப்படையைச் சேர்ந்த சகாயம் என்கிற சகாதேவனை அனுகினேன். அவர் மூலமாக யூசுப்பை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினேன். சகாதேவன் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் தஞ்சை வந்து நோட்டமிட்டார். என் கணவரிடம், வீடு பிடிச்சிருக்கு எனக் கூறி அட்வான்ஸ் தருவதற்காக வல்லத்துக்கு அழைத்தார்.

இதையடுத்து, யூசுப்பும் வந்துள்ளார். அங்கு சகாதேவன் பணத்தை எடுத்து எண்ணுவது போல் நடித்துள்ளார். உண்மையென நம்பிய யூசுப்பும் காரை நிறுத்தி பணத்தை வாங்க கதவை திறந்துள்ளார். இதற்கிடையில் கொலை செய்வதற்காகக் கொஞ்ச தூரத்தில் நின்றவர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்ததுடன் காருக்குள் இருந்த யூசுப்பை வெட்டினர் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு