Published:Updated:

தாசில்தார் கொலையில் அடுத்த அதிர்ச்சி... காப்பாற்றச் சென்ற டிரைவரும் இன்று மரணம்

விஜயாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. விஜயா தன் அறையின் வாசலிலேயே கரிக்கட்டையாகச் சரிந்தார். விஜயா மீது தீ வைத்த சுரேஷ் தீக்காயங்களுடன் ரோட்டில் எதுவும் நடக்காதுபோல சர்வசாதாரணமாக நடந்து சென்றுள்ளார்.

கொல்லப்பட்ட தாசில்தார் விஜயா
கொல்லப்பட்ட தாசில்தார் விஜயா

தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபர்மட் தாலுகா அலுவலகம் நேற்று வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தது. திங்கள்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீதிமன்றத்துக்கு ஏதோ வேலையாகச் சென்ற தாசில்தார் விஜயா மதியம் 1.30 மணியளவில், மீண்டும் அலுவலகம் திரும்பினார். இருக்கையில் அமர்ந்தவுடன், 'மனுவுடன் இருப்பவர்களை ஒவ்வொருவராக உள்ளே வரச் சொல்லுங்கள் 'என்று பியூனிடம் கூறியுள்ளார். சுரேஷ் என்பவரை தாசில்தார் விஜயாவின் அறைக்குள் முதலில் அனுமதித்துள்ளனர். தாசில்தாருக்கும் சுரேஷூக்கும் உள்ளே ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது. திடீரென்று விஜயா உடலில் தீப்பற்றியபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

காயமடைந்த நிலையில் டிரைவர் குருநாத்
காயமடைந்த நிலையில் டிரைவர் குருநாத்

சுற்றியிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. 'நான்தான் விஜயா என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்'' என்று கூக்குரலிட்டுள்ளார். விஜயாவின் பியூன் சந்திரையன், டிரைவர் குருநாத் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. விஜயாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. விஜயா தன் அறையின் வாசலிலேயே கரிக்கட்டையாகச் சரிந்தார். விஜயா மீது தீ வைத்த சுரேஷ் தீக்காயங்களுடன் ரோட்டில் எதுவும் நடக்காதுபோல சர்வசாதாரணமாக நடந்து சென்றுள்ளார். போலீஸார் அவரைப் பிடித்து ,மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவருக்கும் 60 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சுரேஷின் வயிற்றுப் பகுதியில் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுரேஷூக்கு 7 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலம் தொடர்பாகவே விஜயாவுக்கும் சுரேஷுக்குமிடையே வாக்குவாதம் முற்றி, கொலையில் முடிந்துள்ளது. ஆனால், தாசில்தார் உடலில் எதைக்கொண்டு, சுரேஷ் தீ வைத்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. தற்போது, சுரேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில், இருப்பதால் விசாரணை தொடங்கவில்லை. எனினும், தாசில்தாரின் அறையில் இருந்து வெடிச்சத்தம் கேட்டதாக சம்பவத்தின்போது அருகிலிருந்தவர்கள் கூறுகின்றனர்.

விஜயாவின் உதவியாளர் சுனிதா, ''நேற்று குறைதீர்ப்பு நாள் என்பதால் தாசில்தார் வந்தவுடனே, மனுதாரர்களை சந்திக்கத் தொடங்கிவிட்டார். சாப்பிடக்கூட அவருக்கு நேரமில்லை. அவரோட அறையில் இருந்து என்னோட அறைக்குச் சென்று இருக்கையில் அமர்ந்து சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். ஏதோ பெரிய வெடிச்சத்தம் கேட்டது.

டிரைவர் குருநாத்
டிரைவர் குருநாத்

தாசில்தாரின் அறையில் இருந்து புகை மூண்டது. ஓடிச் சென்று பார்த்தால், இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. என் கண் முன்னாடியே தாசில்தார் இறந்து விழுந்ததைப் பார்த்து துடித்துப் போனேன்'' என்று கதறுகிறார். விஜயாவைக் காப்பாற்ற முயன்ற அவரின் டிரைவர் குருநாத்தும் இன்று இறந்துபோனார். இவர், 80 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருந்தார். 27 வயதான குருநாத்துக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இவரின், மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

வருவாய்த்துறை அலுவலகத்திலேயே தாசில்தார் எரித்துக் கொல்லப்பட்டது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தையடுத்து, திரண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஹைதராபாத்- விஜயவாடா நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரங்காரெட்டி மாவட்ட போலீஸார் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட விஜயா, ஆசிரியையாகப் பணியாற்றியவர். கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திர மாநில தேர்வாணய தேர்வு எழுதி வருவாய்த்துறையில் பணிக்குச் சேர்ந்தார். விஜயாவின் கணவர் பெயர் சுபாஷ் ரெட்டி. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தாசில்தார் விஜயாவின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான மக்கள், அரசு அதிகாரிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நிலம் தொடர்பாக வாக்குவாதம்! - தெலங்கானா பெண் தாசில்தாரை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞர்

விஜயா ரெட்டி பணியில் நேர்மையாக இருப்பவர் என்று உடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு தெலங்கானாவில் சிறந்த வருவாய்த்துறை அதிகாரி விருதையும் விஜயா பெற்றிருந்தார். அப்துல்லாபர்மட் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள்தான் ஆகின்றன. இங்கே, முதல் தாசில்தாராகப் பொறுப்பேற்றது விஜயாதான். அவரின் சொந்த ஊர் நலகொண்டா. அவர் கொல்லப்பட்டதையடுத்து, நலகொண்டா மக்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

விஜயாவின் தந்தை லிங்கார ரெட்டி ஆசிரியர். முதலில் ஆசிரியராகி, பின்னர் வருவாய்துறையில் விஜயா பணிக்குச் சேர்ந்தார். தற்போது, 37 வயதான விஜயா, நலகொண்டாவில் உள்ள ஏ.வி.எம் பள்ளியில் படித்தவர். தான் தாசில்தார் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து, படித்த பள்ளிக்கு வந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்ததாக அவருடைய ஆசிரியர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தாசில்தாருக்கு அஞ்சலி.
கொலை செய்யப்பட்ட தாசில்தாருக்கு அஞ்சலி.

இதற்கிடையே, லஞ்சம் கேட்டதால், கோபமடைந்த சுரேஷ், தாசில்தார் விஜயாவை எரித்துக் கொன்றதாகவும் தகவல் பரவுகிறது. தெலங்கானா மாநில அமைச்சர் சபிதா சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சபிதா, ''மக்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை என்றால், அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டுமே தவிர, இப்படிக் கொலை செய்வது மனிதத்தன்மையற்ற செயல்'' என்றார்.

அரசுஅலுவலகத்திலேயே தாசில்தார் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.