Published:Updated:

சென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி

ரௌடி சங்கர்
ரௌடி சங்கர்

சென்னையில் மூன்று கொலைகள் உட்பட 51 வழக்குகள் உள்ள ரௌடி சங்கரைப் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில், அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சென்னை, அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்திவருபவர் சரவணன் என்கிற சதீஷ். காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. சரவணனை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது. இது தொடர்பாக அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல ரௌடி சங்கர் என்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் தேடிவந்தனர்.

சங்கர்
சங்கர்

ரௌடி சங்கர், நீலாங்கரைப் பகுதியில் தலைமறைவாக இருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சங்கரைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆவடி நியூ ரோடு பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக சங்கர் போலீஸாரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்ய சங்கரை போலீஸார் அழைத்துச் சென்றனர். அந்தச் சமயத்தில் முட்புதரில் மறைத்துவைத்திருந்த கஞ்சாவை எடுக்கும்போது, அங்கு மறைத்துவைத்திருந்த அரிவாளால், காவலர் முபராக்கை சங்கர் வெட்டியிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், ரௌடி சங்கரைப் பிடிக்க முயன்றனர்.

ஆனால், சங்கர், போலீஸார் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றார். எனவே, இன்ஸ்பெக்டர் நடராஜ் துப்பாக்கிமுனையில் அவரைப் பிடிக்க முயன்றார். அப்போது சங்கர், போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிக்க முயன்றிருக்கிறார். அதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் நடராஜ், சங்கரை நோக்கிச் சுட்டிருக்கிறார். இதில் இரண்டு குண்டுகள் அவரின் வயிற்றின் மேல்பகுதியில் பாய்ந்தன. அதில் சுருண்டு விழுந்த ரௌடி சங்கர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். உடனடியாக அவரையும், வெட்டு காயமடைந்த முபராக்கையும் மீட்ட போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

என்கவுன்ட்டர் நடந்த இடம்
என்கவுன்ட்டர் நடந்த இடம்

மருத்துவமனையில் சங்கர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவலர் முபராக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த என்கவுன்ட்டர் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். என்கவுன்ட்டர் நடந்த இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று உயரதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நடராஜிடம் விசாரித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் ரௌடி துரைமுத்துவைப் பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து, காவலர் சுப்பிரமணி உயிரிழந்தார். அடுத்த வெடிகுண்டு வெடித்ததில் சிகிச்சை பலனின்றி ரௌடி துரைமுத்துவும் உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி திரிபாதி கலந்துகொண்டார். ரௌடியால் காவலர் சுப்பிரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது. ரௌடிகளைப் பிடிக்கச் சென்றபோது காவலர் சுப்பிரமணி தற்காப்புக்காக எந்தவித ஆயுதத்தையும் எடுத்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

காவலர் சுப்பிரமணி
காவலர் சுப்பிரமணி

இந்தச் சூழலில்தான் தலைநகர் சென்னையில் ரௌடி சங்கரைப் பிடிக்க போலீஸார் துப்பாக்கியோடு சென்றனர். போலீஸாரை சங்கர் அரிவாளால் வெட்டியதும், இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியிலிருந்து சென்ற குண்டுகள் துளைத்து, சங்கர் பலியாகியிருக்கிறார். ரௌடி சங்கர்மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் சென்னையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

சங்கரின் குற்றப் பின்னணி குறித்து நம்மிடம் விரிவாக விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னை அயனாவரம், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (48).

இவருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் இருந்துவந்தது. அந்த மோதல்தான் சங்கரை ரௌடியாக்கியது. கஞ்சா விற்பனையிலும் சங்கர் கோலோச்சினார். மாமூல், அடிதடி, கொலை முயற்சி, கொலை என அடுத்தடுத்து சங்கர்மீது வழக்குகள் பதிவாகின. 1996-ம் ஆண்டு சங்கர்மீது அயனாவரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவானது. 2010-ம் ஆண்டு ஒரு கொலை, 2013-ம் ஆண்டு அடுத்த கொலை, 2017-ம் ஆண்டு 3-வது கொலை என மூன்று கொலை வழக்குகள் சங்கர் மீது பதிவாகியுள்ளன.

ரௌடி சங்கர்
ரௌடி சங்கர்
சென்னை : மருமகனுக்கு பதிலாக மாமனார் கொலை! - சிறைக்குச் சென்றதால் உயிர் தப்பிய ரௌடி

2007-ம் ஆண்டு, சங்கரை அவரின் எதிர்த்தரப்பு கொலை செய்ய முயன்றது. அதிலிருந்து அவர் தப்பினார். ஆனால், 2009-ம் ஆண்டு சங்கரின் தம்பி கொலை செய்யப்பட்டார். பின்னர் அயனாவரத்திலிருந்து அவர் தலைமறைவாகினார். எதிர்த்தரப்பைச் சேர்ந்தவரின் தம்பியை சங்கர் தரப்பு கொலை செய்தது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், எதிர்தரப்பைச் சேர்ந்த விஜி என்பவரை 2010-ம் ஆண்டு கொலை செய்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவிக நகர் போலீஸார் சங்கரைக் கைது செய்தனர். சங்கரின் வழக்குகளில் ஆஜராகி வந்த வழக்கறிஞரும் கொலை செய்யப்பட்டார். தம்பியைக் கொலை செய்த திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பிரபல ரௌடி யமஹா பாலாஜியை சங்கர் தரப்பு கொடூரமாகக் கொலை செய்தது. அந்தச் சம்பவத்துக்குப்பிறகுதான் சங்கரின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்தது. திருமண மண்டபத்திலிருந்த யமஹா பாலாஜியின் தலையிலேயே வெட்டிக் கொலை செய்த பிறகு, அரிவாள் அவரின் தலையிலேயே வைக்கப்பட்டிருந்தது" என்றார்.

சங்கரை `இளநீர் சங்கர்’ என ரௌடிகள் வட்டாரத்தில் அழைப்பதுண்டு. சங்கரின் அம்மா இளநீர் விற்றதால், அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது. ஆனால், போலீஸாரைப் பொறுத்தவரை `அயனாவரம் சங்கர்’ என்று அழைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு