Published:Updated:

`25 வெட்டுகள்; துரத்திய 4 பேர்'- திருத்தணி ஹோட்டலுக்குள் கைப்பந்து வீரரைக் கொலை செய்தது ஏன்?

எஸ்.மகேஷ்

திருத்தணியில் சினிமா காட்சி போல நிஜத்தில் வாலிபரை விரட்டிச் சென்ற கஞ்சா கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது. சிசிடிவியில் பதிவான சம்பவக் காட்சிகள் பதற வைக்கின்றன.

mahesh
mahesh

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஹோட்டலுக்குள் நேற்று மதியம், `காப்பாற்றுங்கள்' என்று சத்தம் போட்டப்படி வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களின் கையில் 3 அடி நீளமுள்ள அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹோட்டலுக்குள் நுழைந்த வாலிபர் அங்கேயே சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அப்போது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் ஹோட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

hotel murder
hotel murder

விரட்டி வந்த வாலிபரை வெட்டிச் சாய்த்துவிட்டு அந்தக் கும்பல் சர்வசாதாரணமாக வெளியில் சென்றது. பிறகு ரத்தக்கறைப் படிந்த அரிவாள், கத்திகளோடு இரண்டு பைக்குகளில் 4 பேர் தப்பிச் செல்கின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. சினிமா காட்சிகளைப் போல நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் மகேஷ் (25). திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அருகில் உள்ள பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் எனத் தெரியவந்தது. இவர் கைப்பந்து விளையாட்டு வீரர். `எதற்காக மகேஷ், கொடூரமாக கொலை செய்யப்பட்டார்?' என்று விசாரித்தபோது போலீஸாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

Murder scene
Murder scene

போலீஸார் கூறுகையில், ``திருத்தணிக்கு மகேஷ் நேற்று வந்துள்ளார். அங்கு அவரின் நண்பர்களைச் சந்தித்துள்ளார். அப்போதுதான் அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், மகேஷை விரட்டிச் சென்று கொலை செய்துள்ளது. நீதிமன்ற பகுதியிலிருந்து ஹோட்டல் வரை சுமார் 500 மீட்டர் தூரம் வரை அவரைக் கஞ்சா கும்பலைச் சேர்ந்தவர்கள் விரட்டியுள்ளனர். அரிவாளுடன் கொலைக் கும்பல் ஒன்று, மகேஷை விரட்டிச் செல்வதைப் பார்த்தவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். இறுதியாக அவர் ஹோட்டலுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கு வைத்து 25 இடங்களில் வெட்டி மகேஷைக் கொலை செய்துள்ளது அந்தக் கும்பல். இந்தக் கொலை சம்பவத்தின் பின்னணியில் கஞ்சா விற்பனை, கைப்பந்து விளையாட்டில் நடந்த பிரச்னை ஆகியவை உள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மகேஷின் வீடு அமைந்துள்ள பெருமாள்பட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளோம்" என விவரித்தவர்கள்,

``மகேஷின் நண்பர் இலியாஸ். இவரை சில மாதங்களுக்கு முன் ஒரு கும்பல் வெட்டியது. ஆனால், இலியாஸ் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த வழக்கில் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த கஞ்சா கும்பல் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நேரத்தில்தான் மகேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

murder scene
murder scene

மகேஷ் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் கஞ்சா விற்கும் கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக மகேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்தவர்களைத் தேடிவருகிறோம். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை செய்த கும்பல் வேலூர் அல்லது ஆந்திராவுக்குத் தப்பிச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம்" என்கின்றனர் உறுதியாக.

கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அனைவரையும் பதற வைக்கிறது. மதிய நேரம் என்பதால் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஹோட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போதுதான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹோட்டலுக்குள் நுழைகிறார் மகேஷ். அவர் ஓடாமல் இருப்பதற்காக அவரின் காலில் வெட்டியுள்ளனர். இதனால் உணவு மேஜைகளுக்கு நடுவில் மகேஷ் கீழே விழுகிறார். அதைப்பார்த்தவர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். ஆனால், மகேஷை வெட்டிய கும்பல், எதையும் கண்டுகொள்ளாமல் அவரின் தலையிலேயே வெட்டியுள்ளனர்.

மகேஷ்
மகேஷ்

சுமார் 20 நிமிடங்கள் இந்தக் கொடூரக் காட்சி பதிவாகியுள்ளது. விளையாட்டு வீரர் மகேஷ், உயிரைக் காப்பாற்ற ஓடிச் சென்றபோது அவ்வழியாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அவரும் ஒதுங்கிக்கொண்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், ஹோட்டலுக்குள் இருந்தவர்களும் மகேஷின் உயிரைக் காப்பாற்ற எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை. மகேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யுமாறு எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கொலை நடந்த நேரத்தில் வந்த போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

Murder scene
Murder scene

`பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஷின் நண்பர் இலியாஸை கஞ்சா விற்கும் கும்பல் கொலை செய்ய முயன்றது. இந்த வழக்கை செவ்வாய்பேட்டை போலீஸார் விசாரித்தனர். அந்தக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக முருகன் பணியாற்றினார். இதனால் அவருக்கு இலியாஸைக் கொலை செய்ய முயன்றவர்கள் குறித்த விவரங்கள் தெரியும். தற்போது செவ்வாய்பேட்டையிலிருந்து இடமாறுதலாகி திருத்தணியில் உள்ளார். திருத்தணியில் நேற்று மதியம் மகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் இன்ஸ்பெக்டர் முருகன்தான் விசாரணை நடத்திவருகிறார். இதனால் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்' என்கின்றனர் போலீஸார்.