கடத்தப்பட்ட பள்ளி மாணவன்; குடும்பப் பிரச்னையில் அக்கா கணவரே ஆள்வைத்துக் கடத்தியது அம்பலம்!

செங்குன்றம் அருகே மனைவியுடனான பிரச்னையில், மனைவியின் தம்பியை அவர் கணவரே ஆள்வைத்துக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த புதுநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். காய்கறி வியாபாரம் செய்துவரும் மாரியப்பனுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். அவருடைய மகன் கணேஷ் (17) செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ நகரிலுள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்தநிலையில், மாரியப்பனின் மகன் கணேசன், நேற்று வழக்கம்போல் காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலை பள்ளியிலிருந்து நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது 4:30 மணி அளவில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரிலிருந்து இறங்கிய ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்த கணேசனை அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அந்தக் கும்பலிடமிருந்து கணேசனைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு அந்தக் கும்பல் கணேசனை காருக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறது. அப்போது கணேசனின் நண்பர்கள் காரிலிருந்த ஒருவரை மட்டும் கீழே இழுத்துத் தள்ளி, பிடித்துவைத்தனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு பறந்திருக்கிறது.
விசாரணையில், பிடிபட்ட நபர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (25) என்று தெரியவந்தது. மேற்கொண்டு போலீஸார் விசாரித்ததில் சந்தோஷ், தனது நண்பர் பூபதி என்பவருக்காக மாரியப்பனின் மகன் கணேசனைக் கடத்தியது தெரியவந்தது. குடும்பப் பிரச்னையில் நண்பனின் மனைவி குடும்பத்தைப் பழிவாங்கத் திட்டமிட்டு கடத்தியது விசாரணையில் அம்பலமானது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மனைவி சண்டை போட்டுப் பிரிந்த சென்ற கோபத்தில், நண்பர்களுடன் சேர்ந்து பூபதி, அவர் மனைவி குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, மனைவியின் தம்பி கணேசனைக் கடத்தி அவர் குடும்பத்தினரை மிரட்ட பூபதி இப்படிச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
மாணவர் கணேஷ் பத்திரமாக இருக்கிறார். பிடிபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

மனைவியுடனான குடும்பப் பிரச்னையில், ஆள்வைத்து மனைவியின் தம்பி கடத்தப்பட்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.