Published:Updated:

சிவப்புச் சந்தை: எல்லாம் விற்பனைக்கு… திகிலூட்டும் வணிகம்! - மர்மங்களின் கதை | பகுதி-2

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

மனித உடல் உறுப்புகள் சிவப்புச் சந்தையில் கூவி விற்கப்படும். சிறுநீரகம், இதயம், கணையம் தொடங்கி ரத்தம், கருமுட்டை, மனிதத் தோல் வரை சிவப்புச் சந்தையில் மனித உடலின் எல்லாமும் வியாபாரம் செய்யப்படுகின்றன.

-ஆர்.எஸ்.ஜெ

கொசோவோ நாடு. 2008, நவம்பர் மாதம்.

பிரிஸ்டினா நகரத்து விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. டிக்கெட் பரிசோதனைக்காக மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சூழல் இயல்பாக இருப்பதுபோலத்தான் தோற்றமளித்தது. ஓர் இளைஞனின் முகத்தில் மட்டும் லேசான பதற்றம். பிறர் எவருக்கும் அவனின் பதற்றம் பொருட்டாகத் தெரியவில்லை. வரிசையில் நின்றுகொண்டிருந்தவன், திடீரென தலையைப் பிடித்தபடி கீழே விழுந்தான். அதிர்ச்சியில் வரிசை உடைந்தது.

கொசோவோ நாடு
கொசோவோ நாடு

சற்று தூரத்தில் அலுவல் பார்த்துக்கொண்டிருந்த விமான நிலைய அதிகாரி விரைந்து வந்து இளைஞனைத் தட்டிப் பார்த்தார். அவன் எழுந்திருக்கவில்லை. எங்கிருந்து வந்திருக்கிறான் எனத் தெரியவில்லை. உடனும் யாரும் வரவில்லை. அடையாள அட்டை ஏதும் இருக்கிறதா எனத் தேடிப் பார்க்கப் புரட்டுகையில், இளைஞனின் சட்டையில் சிவப்பு ரத்தம் படர்ந்துகொண்டிருந்தது. அதிகாரி இளைஞனின் சட்டையை மேலுயர்த்திப் பார்த்தார். இடுப்பின் கீழ் பக்கவாட்டிலிருந்து ஏறுக்கு மாறாக தைக்கப்பட்டிருந்த தோல் பிரிந்துகொண்டிருந்தது.

அந்த இளைஞன் அன்று விமானம் ஏறவில்லை. மருத்துவமனையில் கண்விழித்தான். விமான அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பல கேள்விகளைக் கேட்டனர். அந்த இளைஞன் சொன்ன பதில்கள் அங்கு நின்றிருந்த எவரின் பொறுப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரும் குற்றச்சந்தையைத் திறந்துவிட்டது. இளைஞனின் பெயர் யில்மான் அல்துன். துருக்கிய இளைஞன். 23 வயதுதான் ஆகிறது. சிறுநீரகத்தை விற்றுவிட்டு, மீண்டும் தன் ஊருக்குத் திரும்புகையில்தான் மயக்கம் போட்டிருந்தான். சிவப்புச் சந்தை வியாபாரத்துக்கு அந்த இளைஞன் பலியாக்கப்பட்டிருந்தான்.

சிவப்புச் சந்தை:

ஊர்ச் சந்தை தொடங்கி பங்குச் சந்தை வரை பல்வேறு சந்தைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். பிளாக் மார்க்கெட் எனப்படும் கறுப்புச் சந்தை, கள்ளச் சந்தையைக்கூட நாம் அறிந்திருப்போம். ஆனால் சிவப்புச் சந்தை?

சந்தையின் பெயரே அச்சமூட்டுகிறதா?

உங்களின் அச்சத்துக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ரத்தவெறியுடன் செயல்படுவதே சிவப்புச் சந்தை!

மனித உடல் உறுப்புகள் சிவப்புச் சந்தையில் கூவி விற்கப்படும். சிறுநீரகம், இதயம், கணையம் தொடங்கி ரத்தம், கருமுட்டை, மனிதத் தோல் வரை சிவப்புச் சந்தையில் மனித உடலின் எல்லாமும் வியாபாரம் செய்யப்படுகின்றன. இன்ன ஊர், இன்ன நாடு என இல்லாமல் உலகம் முழுமைக்கும் சிவப்புச் சந்தை விரிந்து விரவி இயங்கிக்கொண்டிருக்கிறது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உடச்ல்
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உடச்ல்
Facebook

பிரிஸ்டினா விமான நிலையத்தில் மயக்கம்போட்டு விழுந்த இளைஞன், அவனுடைய சிறுநீரகத்தை இன்னொருவருக்கு 15,000 யூரோவுக்க்கு விற்றிருந்தான். அந்த இன்னொருவரை அவனுக்குத் தெரியாது. அறுவை சிகிச்சையின்போது மட்டுமே சில நொடிகள் சிறுநீரகம் பெறுபவரை அவன் பார்த்தான். அறுவை சிகிச்சை முடிந்ததும் அவசர அவசரமாகத் தையலிடப்பட்டு, டிக்கெட்டும் கொஞ்சம் பணமும் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறான். அரைகுறை மருத்துவத்தோடு அனுப்பப்படும்போதும் அவனுக்கு உறுதியளிக்கப்பட்ட முழுப்பணமும் கொடுக்கப்படவில்லை.

சிறுநீரகம் பெற்றவர் பெசலெல் ஷஃப்ரன். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். சிறுநீரகத்தின் விலையாக 76,000 யூரோ கொடுத்திருந்தார். கொடுத்தவரும் பெற்றவரும் ஒருவரையொருவர் அறிந்திராதவர்கள். துருக்கிய நாட்டு இளைஞனின் சிறுநீரகம் இஸ்ரேல் நாட்டுக்காரருக்கு பொருத்தப்படுவதற்கு இடையே ஒரு பிரமாண்ட வலைப்பின்னல் உலகளாவிய வகையில் இணைந்திருந்தது. பல நாடுகளில் இயங்கிக்கொண்டிருந்த உடலுறுப்பு தரகர்களே சிவப்புச் சந்தையை இணைப்பவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடலுறுப்புகள் தானமாக மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். உலக நாடுகள் பலவற்றிலுள்ள சட்ட நடைமுறை அதுதான். எந்தக் காரணமும் கொண்டு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படக் கூடாது. தானமளிப்பவர் மனமுவந்து கொடுக்க வேண்டும். கட்டாயப்படுத்தவும் கூடாது. உடலுறுப்பை விற்பது பெரும்பாலான உலக நாடுகளில் தண்டனைக்குரிய குற்றம்.

ஆனாலும் சிவப்புச் சந்தை இயங்குகிறது!

சிகிச்சை முடிந்தவர்கள்
சிகிச்சை முடிந்தவர்கள்
Facebook

எல்லாம் விற்பனைக்கு...

மருத்துவமனைகளின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டால், ரத்தத்துக்கு நேரடியாக நாம் விலை கொடுப்பதில்லை. நமக்குக் கொடுக்கப்படும் ரத்தத்துக்கு இணையான அளவு ரத்தத்தைத் திரும்ப ரத்த வங்கிக்கு நாம் கொடுக்க வேண்டும். நாமும், நமக்கு தெரிந்த உறவினரையோ நண்பரையோ நாடுவோம். நமக்குக் கொடுக்கப்பட்ட ரத்தத்துக்கு பதிலாக அவரின் ரத்தத்தை எடுத்து ரத்த வங்கி சேமிப்பில் வைத்துக்கொள்வார்கள். இதெல்லாம்கூட சரிதான். சிகிச்சை முடிந்து நமக்குத் தரப்படும் கட்டண ரசீதில்தான் இருக்கிறது சூட்சுமம்.

நமக்கு வழங்கப்பட்ட ரத்தத்துக்குக் கட்டணம் இருக்காது. ஆனால் அந்த ரத்தத்தை ஏற்றிய செலவு என ஒரு கட்டணம் இருக்கும். அந்தக் கட்டண சூட்சுமத்தில்தான் பிரிஸ்டினா விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இளைஞனின் சிறுநீரகமும் கொள்ளையடிக்கப்படும்.

ரத்தம்
ரத்தம்

இதேபோல், சிறுநீரகம் நமக்குச் செயலிழந்து, நம் உறவினரே நமக்கு தானம் செய்தாலும், சிறுநீரகம் பொருத்தும் செலவென ஒரு தொகையை மருத்துவமனை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை, சிறுநீரகம் தேவைப்படுபவருக்கு சிறுநீரகம் தானமளிக்கும் அளவுக்கான உறவினரோ நண்பரோ இல்லையென்றால் என்ன நடக்கும்? உடல் உறுப்பு தரகர்கள் காட்சி தருவார்கள். மருத்துவமனையைச் சார்ந்தவர்களே நேரடியாக இல்லாமல் தரகர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள். பிறகு தரகர், சிறுநீரகம் தேவைப்படுபவரைத் தொடர்புகொள்வார்.

உடலுறுப்பு கடத்தல் பற்றிய சேதிகள் அவ்வப்போது பேசப்பட்டுவந்தாலும், அதன் முழுத் தன்மை வெளிவந்தது 2008-ம் ஆண்டில் பிரிஸ்டினாவில்தான். சிவப்புச் சந்தையின் மொத்த மதிப்பு 4,000 கோடி ரூபாயாம். சிறுநீரகம்தான் பெரிய அளவில் கடத்தப்படும் உறுப்பு என்றாலும், நாம் நினைத்தே பார்க்காத விஷயங்களுக்குக்கூட சிவப்புச் சந்தையில் மதிப்பு இருக்கிறது. திருப்பதியில் கடவுளுக்கென நாம் கொடுக்கும் தலைமுடிகூட, சேகரிக்கப்பட்டு சர்வதேச சிவப்புச் சந்தையில் விற்கப்படுகிறதெனச் சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆண்களின் தலைமுடி கொண்டிருக்கும் அமினோ அமிலத்துக்காக ரசாயன நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. பெண்களின் தலைமுடி ‘விக்’ தயாரிப்புக்காக விற்கப்படுகிறது. எல்லா உடலுறுப்புகளும் சரியாக இயங்கும் ஒரு மனிதன் சிவப்புச் சந்தையில் சராசரியாக 9 கோடி ரூபாய்க்கு விலை போவான். அதுவும் அமெரிக்கனாக இருந்தால் மட்டும்தான். சீனா போன்ற பிற நாடுகள் என்றால் விலை குறையும். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் என்றால் இன்னுமே விலை குறையும்.

சென்னையும் சிவப்புச் சந்தைக்குத் தப்பவில்லை. மணலிக்கு அருகே இருக்கும் ஒரு குப்பத்துக்குப் பேர் என்ன தெரியுமா? கிட்னிவாக்கம்! சுனாமி தாக்கிய பிறகு, தங்களின் வாழ்க்கைப் பாடுக்காக குப்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சிறுநீரகங்களை விற்றிருக்கின்றனர். விலை ரூ.40,000! அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட உடல் கோளாறுகளைச் சரி பண்ணுவதற்கென பணமெல்லாம் கிடையாது. எல்லா நாடுகளிலும் பிரிஸ்டினா இளைஞன் இருக்கிறான்.

(Represent Image)
(Represent Image)

பிரிஸ்டினா விமான நிலையத்தில் மயக்கம் போட்டு விழுந்த இளைஞனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது மெடிக்கஸ் என்னும் கிளினிக்கில். கிளினிக்கின் முன்னாள் உரிமையாளர் லஃப்டி டெர்விஷி என்பவர். அவரும் மருத்துவர்தான். விசாரணையின்போது, ‘அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உண்மை’ என ஒப்புக்கொண்டார். ‘உதவிக்கு மட்டுமே அழைக்கப்பட்டதாக’ அவர் குறிப்பிட்டார். சிறுநீரக மாற்றைப் பற்றி ஏதும் தெரிவிக்கப்படாமல், நோயாளி ஒருவரின் காயத்தைத் தைக்க உதவி வேண்டுமென அழைக்கப்பட்டதாக விசாரணையில் சொன்னார் லஃப்டி.

மெடிக்கஸ் மருத்துவமனையை காவல்துறை ரெய்டு செய்தது. துருக்கி, ரஷ்யா, கஜகஸ்தான், கனடா, போலந்து போன்ற நாடுகளிலிருந்து சிறுநீரகம் கொடுப்பவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுநீரகத்தின் விலையாக 15,000 யூரோ வியாபாரம் பேசப்பட்டிருந்தது. காவல்துறை லஃப்டியைக் கைதுசெய்தது. மெடிக்கஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் பல நடந்திருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே ஒருவர்தான் செய்திருக்கிறார். அவர் பெயர் யூசுஃப் சொன்மெஸ். யூசுஃபின் பூர்வீகம் துருக்கி. அங்கும் மருத்துவராகத்தான் இருந்திருக்கிறார். பெயர் பெற்ற மருத்துவராக இருந்திருக்கிறார். யூசுஃப் பெற்றிருந்த பெயர் என்ன தெரியுமா? ‘கழுகு மருத்துவர்’ என்ற பொருள்படும் டாக்டர் வல்ச்சர்!

துருக்கியில் இருக்கும்போதே சிவப்புச் சந்தையில் செல்வாக்கு மிகுந்திருந்தார் யூசுஃப். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பல செய்திருக்கிறார். ஆனால் அவை யாவும் சட்டத்துக்கு உட்பட்டு தானமாகப் பெற்ற உறுப்புகள் இல்லையெனப் புகார்கள் எழுந்தன. துருக்கியில் யூசுஃப் மருத்துவம் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டது. வழக்குகள் விரட்டத் தொடங்கியதும் தலைமறைவானார் யூசுஃப். பிறகுதான் சிவப்புச் சந்தைக்கான சேவையை யூசுஃப் தீவிரமாகத் தொடங்கினார்.

அவரின் உலகளாவிய சிவப்புச் சந்தை விரிவாக்கத்துக்கு தலைமையிடமாக இருந்தது கொசோவோ நாடு. துருக்கியிலிருந்து வெளியேறிய பிறகு சட்டபூர்வமான மருத்துவர் உரிமம் யூசுஃபுக்கு வழங்கப்பட்டது கொசோவோவில்தான். 2008-ம் வருடத்தில் மட்டுமே மெடிக்கஸ் மருத்துவமனையிலிருந்து 23 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார் யூசுஃப்.

துருக்கியில் அனுமதி மறுக்கப்பட்ட யூசுஃபுக்கு கொசோவோவில் எப்படி அனுமதி கிடைத்தது?

கொசோவா
கொசோவா

துருக்கி டு கொசோவா

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழு யூசுஃபுக்கும் மேலே ஒருவர் சிவப்புச் சந்தை விவகாரத்தில் இருப்பதாகத் தன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மொத்த சிவப்புச் சந்தையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது யார் தெரியுமா? கொசோவோ நாட்டின் பிரதமரான ஹஷிம் தாச்சி. பிரதமர் ஹஷிம் தாச்சிக்கும் யூசுஃபுக்கும் சிவப்புச் சந்தை தொடர்பு ஹஷிம் பிரதமராவதற்கு முன்பிருந்தே இருந்தது. கொசோவோ விடுதலைப்படையில் ஹஷிம் இருந்தபோது போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட அல்பேனியர்களைக் கொன்று அவர்களின் உறுப்புகளைக் கடத்தியிருக்கிறார். கடத்தலுக்கான அறுவை சிகிச்சைகளைச் செய்து கொடுத்தவர் யூசுஃப். கொசோவோ நாட்டின் அரசுக்கு யூசுஃபின் மருத்துவத்தின் மேல் அபிமானம் இருந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. உரிமம் கிடைத்ததிலும் வியப்பேதும் இல்லை.

யூசுஃபைத் தேடப்படும் குற்றவாளியாக இன்டர்போல் அறிவித்துள்ளது. ஆனால் யூசுஃபுக்கோ எந்தக் கலக்கமும் இல்லை. நாடு நாடாகச் சுற்றுகிறார். அவ்வப்போது ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார். `இப்போது வரை நான் யாரையும் கொல்லவில்லை. யாரையும் துன்புறுத்தவில்லை. என் விரல்கள் முறியாதவரை இவ்வுலகின் மிகச்சிறந்த மருத்துவன் நான்தான்’ என்கிறார் யூசுஃப். 'ஓர் உடல் உறுப்பை, இன்னொரு உடலில் பொருத்துகையில் அது கொடுக்கும் அழகை தான் ரசிப்பதாக சொல்கிறார்.

இலுமினாட்டி இருப்பது உண்மையா? - மர்மங்களின் கதை | பகுதி - 1

`சிறுநீரகம் விற்கும் நிலைக்கு ஏழை மக்களைத் தரகர்கள் தள்ளுவது சரியா?’ என யூசுஃபிடம் கேள்வி கேட்கப்படுகிறது. `மக்களுக்கு அவர்களின் உடல்கள் மீது உரிமை இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் திருடவில்லை. ஏமாற்றவில்லை. அவர்களால் முடிவதைத்தான் செய்கிறார்கள். இந்த அமைப்புதான் தவறாக இருக்கிறது. மக்களைக் குற்றம் சொல்ல முடியாது” என்கிறார் யூசுஃப். இவ்வுலகின் ஏதோவொரு மூலையில், ஏதோவோர் அரசின் ஒத்துழைப்பில், ஏதோவொரு ஏழையின் சிறுநீரகத்தை, ஏதோவொரு பணக்காரருக்கு இந்த நிமிடம்கூட பொருத்திக்கொண்டிருக்கலாம் யூசுஃப்.

யாருக்குத் தெரியும்?

(தொடரும்)

அடுத்த கட்டுரைக்கு