Published:Updated:

அப்பா சடலத்தின் மீது கட்டடம்; மண்ணுக்குள் புதைந்த பொம்மை!-செங்குன்றம் போலீஸாரை பதறவைத்த 24 மணிநேரம்

எஸ்.மகேஷ்

அப்பாவின் சடலத்தை சொந்த இடத்தில் அடக்கம் செய்தால் அவரின் ஆசீர்வாதம் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் கிடைக்கும் என்று கூறியதை நம்பி, செங்குன்றத்தில் சடலத்தைப் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kaja
kaja

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம், செல்வவிநாயகர் நகர் நேற்று காலை முதல் இன்று காலை வரை பரபரப்பாகவே காணப்பட்டது. தனியாருக்குச் சொந்தமான 2,400 சதுர அடி நிலத்தில் சடலத்தைப் புதைத்துவிட்டதாகத் தகவல் பரவியது. இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலம் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே ஏராளமானவர்கள் குவிந்தனர்.

kaja
kaja

போலீஸாரின் நடவடிக்கை காலதாமதமானதால் செல்வ விநாயகர் நகர் பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரிக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால் கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிராம நிர்வாக அலுவலர் அன்னலட்சுமி, அனுமதி பெறாமல் குடியிருப்புக்குள் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகச் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பொன்னேரி தாசில்தார் வில்சன், நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார்.

இதற்கிடையில் சடலத்தைப் புதைத்துவிட்டுச் சென்ற ராயபுரத்தைச் சேர்ந்த மோகின் அபுபக்கருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் அவரின் உறவினர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் வருவாய்த்துறையினரும் போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சடலத்தைத் தோண்டி எடுத்து அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்ய அபுபக்கரின் உறவினர்கள் சம்மதித்தனர். இரவு என்பதால் இன்று காலை சடலத்தைத் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

kaja
kaja

இதையடுத்து காலை 6 மணியளவில் வருவாய்த்துறையினர், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மோகின் அபுபக்கரின் உறவினர்களும் வந்தனர். புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய செங்குன்றம் போலீஸார், ``ராயபுரம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா நஜூமுதீன் (69). உடல் நலம் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஹாஜா நஜூமுதீனின் மகன் மோகின் அபுபக்கர் ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். தந்தை மீது அதிக பாசம் கொண்டவர். இந்தச் சமயத்தில் அபுபக்கர் தந்தைக்கு வேண்டிய ஒருவர், `உனது அப்பா ஆன்மிகவாதி என்பதால் அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டு அதற்கு மேல் கட்டடம் கட்டினால் அவரின் ஆசீர்வாதம் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் முழுமையாகக் கிடைக்கும்' என்று கூறினார்.

kaja
kaja

அதை நம்பிய மோகின் அபுபக்கர் மற்றும் உறவினர்கள், அழிஞ்சிவாக்கம் செல்வவிநாயகர் நகரில் வாங்கிய இடத்தில் நஜூமுதீனின் சடலத்தை நேற்று காலை 6 மணியளவில் புதைத்தனர். அதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த இடத்தில் சடலத்தைப் புதைக்க மோகின் அபுபக்கர் வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெறவில்லை. மேலும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தைத் தோண்டியெடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்விட்டோம்" என்றனர்.

செல்வவிநாயகர் பகுதி மக்கள் கூறுகையில், ``அதிகாலை நேரத்தில் அந்தக் காலி இடத்தில் சிலர் குழிதோண்டிக் கொண்டிருந்தனர். கட்டட வேலை நடக்கிறது என்றுதான் முதலில் கருதினோம். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதிலிருந்து ஒருவரின் சடலத்தை இறக்கினார்கள். பிறகு அந்தச் சடலத்தைப் புதைத்தனர். பூ மாலைகளை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்த இடத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. குடியிருப்புக்குள் சடலத்தைப் புதைக்க யார் அனுமதி கொடுத்தார்கள் என்றுதான் காவல் நிலையத்திலும் வருவாய்த்துறையினரிடமும் புகார் கொடுத்தோம்" என்றனர்.

wilson
wilson

பொம்மை ஏற்படுத்திய கொதிப்பு:

வடபெரும்பாக்கம் உள்ள கால்வாயில் ஆண் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் செங்குன்றம் காவல் நிலையத்துக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று போலீஸார் பார்த்தனர். அப்போது ஒருவரின் கால் வெளியில் தெரிந்தது. இதனால் அந்த இடத்தை போலீஸார் தோண்டினர். அப்போது சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் பொம்மை என்று தெரிந்தது. அதன் பிறகே, போலீஸார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அந்தப் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது பொம்மை ஒன்றைப் புதைத்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையில் பொம்மையின் கால் வெளியில் தெரிந்ததைப் பார்த்த பொதுமக்கள் அது சடலம் எனக் கருதி தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.