Published:Updated:

`பாக்கு மட்டை குடோனில் பதுக்கப்பட்ட 5 டன் செம்மரக் கட்டைகள்!’- காஞ்சிபுரத்தில் வனத்துறை அதிரடி

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மறைமலைநகர் பகுதியில் பலமுறை செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செம்மரக் கட்டைகள்
செம்மரக் கட்டைகள்

மறைமலைநகர் பகுதியில் பாக்கு மட்டைகளுக்கிடையே பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் செம்மரக் கட்டைகளைச் செங்கல்பட்டு வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்துவருகிறார்கள். கைப்பற்றப்பட்ட செம்மரங்களின் மதிப்பு சுமார் 25 லட்சம் என வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

குடோன்
குடோன்

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் மறைமலைநகரில் குடோன் வைத்திருக்கிறார். மணலி பகுதியைச் செர்ந்த ஷேக் அலி என்பவர் பாக்கு மட்டையைக் கொண்டு பொருள்கள் தயாரிப்பதற்காக அந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில், மறைமலைநகரில் உள்ள தனியார் குடோனில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்த குடோனை ஆய்வு செய்தனர். குடோன் முழுவதும் பாக்கு மட்டைகள் நிறைந்திருந்தன. பாக்கு மட்டைகளை அப்புறப்படுத்தியபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். கைப்பற்ற செம்மரக் கட்டைகள் செங்கல்பட்டு வனச்சரக அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த நிலையில் கட்டட உரிமையாளர் பழனி மற்றும் வாடகை எடுத்த ஷேக் அலி ஆகியோர் தலைமறைவாக இருக்கிறார்கள்.

இது குறித்து செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கனிடம் பேசினோம். ``குடோன் உரிமையாளர் சென்னையில் இருக்கிறார். வேறொரு நபருக்கு குடோனை குத்தகைக்கு விட்டுள்ளார். அந்த விவரங்களை ஆய்வுசெய்து வருகிறோம். குத்தகை எடுக்கப்பட்ட நபருக்கும், குடோனின் உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம். விசாரணையின் அடிப்படையில் இதில் தொடர்புடையவர்களின் மீது நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

செம்மரக் கட்டை
செம்மரக் கட்டை

மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர்களோ, ``கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மறைமலைநகர் பகுதியில் பலமுறை செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2018-ல் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வளர்க்கப்பட்ட செம்மரங்கள் திருடுபோயின. சிங்கபெருமாள்கோயில் அருகே உள்ள செங்குன்றத்தில் குடோனில் பதுக்கிய செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன. அதே பகுதியில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு கூட வாகனத்தில் கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினர் செம்மரக்கட்டைகளைக் கைப்பற்றுவது மட்டுமே வெளியில் தெரிகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே செம்மர கடத்தல் தடுக்கப்படும்“ என்கிறார்கள்.