Published:Updated:

`சேற்றில் சிக்கிய காரில் செம்மரம்!’- கிராம மக்களைக் கண்டதும் தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

ஆந்திராவிலிருந்து, செம்மரம் கடத்திவந்த கார் சேற்றில் சிக்கிக் கொண்டதால், கடத்தல் கும்பல் காரை விட்டுவிட்டுத் தப்பி ஓடியது. 

செம்மரக் கட்டை
செம்மரக் கட்டை

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த பொன்னை எஸ்.என்.பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் இன்று காலை சந்தேகப்படும் வகையில், கார் ஒன்று சேற்றில் சிக்கியிருந்தது. அதன் பக்கத்தில் யாரும் இல்லை. காரின் பின்பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. 

கார்
கார்

காருக்குள் வீச்சரிவாள், வெட்டுக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களும், செம்மரக்கட்டையும் கிடந்தன. இதுபற்றி, கிராம மக்கள் பொன்னை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவப் பகுதிக்கு விரைந்துவந்த போலீஸார், சேற்றில் சிக்கிய காரை மீட்டனர்.

அதிலிருந்த செம்மரக் கட்டை மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து காரை காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ``ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டி இந்தக் கிராமத்தின் வழியாகத் தமிழகத்துக்குள் கடத்திவருவதற்கு முயற்சி செய்துள்ளனர். 

காவல்துறையினர்
காவல்துறையினர்

சேற்றில் சிக்கிய காரை மீட்க முடியாமல், கிராம மக்களின் நடமாட்டத்தை அறிந்து, வேறொரு வாகனத்தில் அவசர அவசரமாக செம்மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு கடத்தல் கும்பல் தப்பியிருக்கிறது. ஒரு செம்மரக் கட்டையை மட்டும் விட்டுச்சென்றுள்ளனர். 

பின்பக்கக் கண்ணாடி உடைந்திருப்பதைப் பார்க்கும்போது, கடத்தல் கும்பலுக்குள் `பங்கு’ பிரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. காவல்துறையினரின் விசாரணையைத் திசை திருப்பவும் கண்ணாடியை வேண்டுமென்றே உடைத்திருக்கலாம். 

கிராம மக்கள்
கிராம மக்கள்

கார் யாருடையது என்றும் தப்பி ஓடிய கும்பல் குறித்தும் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்துவருகிறோம்’’ என்று காவல்துறை தரப்பில் கூறினர். ஆயுதங்களுடன் சுற்றும் செம்மரக் கடத்தல் கும்பலால், தமிழக எல்லைக் கிராம மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.