Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 1

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

புதிய தொடர்

ரெண்டாம் ஆட்டம்! - 1

புதிய தொடர்

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்
‘‘என்னதான் ஒண்ணுமண்ணா பழகினவய்ங்களா இருந்தாலும், போட்டி பொறாமன்னு வந்துட்டா பகையாத்தாண்டா முடியும். செல்வம்... எல்லா பகைக்கும் பொறாமதான் மொதக்காரணமா இருந்திருக்கு. யார்கூடப் பழகுனாலும் சூதானமா இரு.”
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பா எப்போதோ சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து அவன் கண்விழித்தபோது பேருந்து மானாமதுரையை நெருங்கியிருந்தது. மெல்லிய நீல நிற வெளிச்சத்தில் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, டிரைவர் தனக்கு மட்டுமே கேட்கும்படியான சத்தத்தில் எஃப்.எம் கேட்டவாறு சாலையில் கவனமாயிருந்தார். பேருந்து ஊரிலிருந்து தூரமாக விலகியிருந்தபோதும், ஊரை நோக்கிப் பறக்கவே துடித்துக் கொண்டிருந்தது மனம். இரண்டு கால்களிலுமிருந்த ஊரின் புழுதி இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை. வியர்வையும் குருதியும் சேர்ந்த அதற்கு சாகும்மட்டிலும் காலை அப்பிக்கொண்டிருக்கும் வல்லமை உண்டு. உறக்கம் தொலைந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். இருட்டென்னும் பேய் பேருந்தைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 1

ஆறு மாதங்களாக இந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். கடைசியாக நடந்த ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் ஏலத்தில் கோட்டைச்சாமி அண்ணனுக்கு இவன்மீது மனக்கசப்பு வந்துவிட்டது. அவன் எல்லாவற்றிலும் அளவுக்கதிகமாக உரிமை எடுத்துக் கொள்கிறானோ என நினைத்தார். “இந்த வருஷம் மார்க்கெட் ஏலத்த முனுசுக்கு குடுத்துருங்கடா. மிச்சம் மீதி இருக்குற கேஸையெல்லாம் முடிச்சுவிட்டான்னா அவனுக்குக் காலாகாலத்துல கல்யாணத்தப் பண்ணிவெச்சிரலாம்” என எல்லோரையும் வைத்துத்தான் சொன்னார். அந்த முடிவில் ஒருவருக்கும் உடன்பாடு இல்லாதபோதும் மறுபேச்சுப் பேச முடியாமல் அமைதியாக இருந்தவர்கள், செல்வத்திடம் முறையிட்டார்கள். “என்னா செல்வம்... நாம சின்னதுலருந்து அவர் கூடயே இருக்கோம்... நம்மளுக்கு எதும் செய்ய மாட்றாப்ள. எல்லாத்தையும் சித்தப்பா மக்க... பெரியப்பா மக்களுக்கு சைஸா ஒதுக்கிவிட்டுர்றாப்ள… இவருக்குப் புழுக்க வேல பாக்க மட்டுந்தான் நம்மளா?” என சோணை கடும்போதையில் எகிறினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 1

“இப்ப வந்து வக்கனையாப் பேசுற வெண்ண... அவர் சொன்னப்பயே கேட்டிருக்க வேண்டியதுதான...” என செல்வம் அவனை முறைக்க, “ஏய்... நாங்க என்ன அவருக்காய்யா வேல செய்றோம், உனக்காக வந்தம்யா… நீதானய்யா நல்லது கெட்டது பாக்கணும்.” சோணை சொன்னதிலிருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டான் செல்வம். அன்றாடச் செலவுகளுக்கு ஆனதைத் தவிர கோட்டைச்சாமி இவர்களுக்கென பெரிதாக எதையும் செய்திருக்கவில்லை. இந்த ஏலத்தை இவர்கள் நான்கு பேருக்கு வாங்கிக்கொடுப்பதுதான் நியாயமெனப்பட்டது அவனுக்கு.

ஏலத்துக்கு முன்பாக முனுசிடம் பேசி, சோணைக்கும் அவன் நண்பர்களுக்கும் விட்டுக்கொடுக்கச் சொல்ல, அவனும் சம்மதித்தான். தகவலைக் கேள்விப்பட்ட கோட்டைச்சாமி, “ஏண்டா... நான் ஒரு விஷயத்தப் பேசி முடிச்சு அனுப்பினதுக்கு அப்புறம் நீ மண்டையக் கழுவி ஏலத்த உன் ஆளுகளுக்கு எடுத்துக் குடுத்திருக்க... காரியக்கார மயிரு அன்னிக்கிப் பேசும்போதே சொல்ல வேண்டியதுதானடா...”

“சொன்னா மட்டும் கேக்கவாண்ணே போற… இவய்ங்களுக்கும் புள்ளகுட்டின்னு ஆகிருச்சு. பொழப்புக்கு என்ன செய்வாய்ங்க?”

“ஓ… நீ தாட்டியக்காரனாயிட்ட. இனிமே உன் வழியப் பாத்துக்க. என் லைன்ல உன்னய இனிமே பாக்கக் கூடாது.”

கோட்டைச்சாமி அப்படிச் சொல்வாரென ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அருகிலிருந்த முனுசே பதறிப்போய் “எண்ணே, அவசரப்பட்டு வார்த்தைய விடாதண்ணே. அவென் சின்னதுலருந்தே நம்மகூட இருக்கான். நம்ம பயண்ணே” என்று சொல்ல, கோட்டைச்சாமி திரும்பி முறைத்தார். “நம்மகூட இருக்கான்னு சொல்லு, நம்ம பயன்னு சொல்லாத” என்றதும், செல்வத்துக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும் சுருக்கென்றது. செல்வமும் அவனோடு இருந்தவர்களும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். அவனுக்குத் தெரியும், இந்த வெறுப்புக்கு மார்க்கெட் ஏலத்தோடு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் ஜெகதி. அவள் மதுரைக்குக் குடிவந்த பிறகுதான் அவருக்கும் செல்வத்துக்குமான இடைவெளி அதிகமாகத் தொடங்கியது.

‘பரமக்குடி வாங்க...’ கண்டக்டரின் குரலோடு பேருந்து விளக்குகள் எரிய, செல்வம் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டான். காலுக்கடியிலிருந்த பையை எடுத்துக்கொண்டவன் பேருந்திலிருந்து இறங்கியபோது விடிய நிறைய நேரம் இருந்தது. தன்னை யாருக்கும் தெரியாத ஊரிலிருக்கிறோம் என்ற நிம்மதியில்தான் வயிற்றுப்பசியின் தீவிரம் உறைத்தது. பேருந்து நிலையத்தின் ஓர் ஓரத்தில், சாக்குத் திரைகளால் பாதி மூடப்பட்ட ஹோட்டலில் மின்விளக்கு வெளிச்சம் பாதியாகத் தெரிய, கடையை நோக்கி நடந்தான். அந்த அகால வேளையிலும் ஹோட்டல் டீ பாய்லரின் முன்னால், மாஸ்டர் நெற்றி நிறைய பட்டையோடு நின்றிருந்தார். செல்வம் திரையை விலக்க, ‘வாங்கண்ணே... டீயா காப்பியா?’ எனக் கேட்க, ‘சாப்பிட ஏதாச்சும் இருக்காண்ணே?” என செல்வம் கேட்டான். “புரோட்டா இருக்குண்ணே. உள்ள வந்து உக்காருங்க. ஏய் முருகா... அண்ணனுக்கு புரோட்டா எடுத்துட்டு வா” என்றபடி கடைக்குள்ளிருந்த ஆளை அழைத்தார். கனத்து உருண்ட முருகன், ஒதுக்கிவைத்த மேசை நாற்காலிகளை இவனுக்காக எடுத்துவைக்கப் போக, “இல்லண்ணே... பார்சல் கட்டிக் குடுத்துருங்க” எனச் சொல்லிவிட்டு செல்வம் வாசலிலேயே நின்றுவிட்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 1

புரோட்டாவை பார்சல் வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்தின் வெளியே வந்தவன், ஆட்டோ ஒன்றில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த டிரைவரை எழுப்பினான். முன்னிரவு குடித்த மதுவின் காட்டம் குறையாமல் அவர் பக்கத்து ஆட்டோவைக் கைகாட்ட, செல்வம் அடுத்த ஆட்டோவுக்குச் சென்றான். அலைபேசியில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டு லயித்துப் போயிருந்த ஓட்டுநரிடம் “ரவி தியேட்டர் போகணும்ணே” எனக் கேட்டான். அவர் பாடலை நிறுத்திவிட்டு “ம்ம்ம் போவம்ணே” என்றபடி வண்டியைக் கிளப்பினார். ஆளற்ற சாலையின் காற்று அவனைத் தழுவிக் கொள்ள பதற்றம், அச்சம் எல்லாம் விலகி மனதில் இனம் புரியாத ஓர் அமைதி நிலவியது. “எந்தூர்ணே மதுரையா... சிவகங்கையா?” என ஆட்டோக்காரர் கேட்க, “மதுரதாண்ணே” எனச் செல்வம் சிரித்தான்.

ரவி தியேட்டரிலிருந்து சற்றுத் தள்ளி, தெருவிளக்கின் வெளிச்சத்தில் அகப்படாமல் இருளுக்குள் ஒரு வேன் ஒதுங்கி நின்றது. சற்று தூரத்திலேயே ஆட்டோவை நிறுத்தி இறங்கிக் கொண்ட செல்வம், வேனை நோக்கி நடந்தான். அவ்வளவு நேரமும் பதற்றத்தோடு காத்திருந்த சோணைக்கு இவனைப் பார்த்ததும்தான் உயிர் வந்தது. செல்வம் வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டிக்கு உயிர் கொடுத்தபடியே சோணை “எம்புட்டு நேரம்யா... எப்ப போலீஸ்காரன் வரப்போறானோன்னு பயந்துட்டு இருந்தேன். எங்க போறது?” என்று கேட்டான். “பாண்டியூருக்குப் போயிரலாம் சோண” செல்வம் தனது பையைக் காலுக்கடியில் வைத்துவிட்டு வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்தான். அடுத்த சில நிமிடங்களில் பரமக் குடியின் எல்லையைத் தாண்டிச் சென்ற அந்த வண்டியின் முன் பக்கமிருந்த ‘பால் அவசரம்’ எனும் போர்டைப் பார்த்த காவல்துறையினர் வண்டியை நிறுத்தாமல் விட்டிருந்தனர்.

விடிவதற்குச் சற்று முன்பாக வண்டி பாண்டியூர் எல்லையை அடைந்திருந்தது. “வண்டிய ஆத்துப் பக்கமா விடு சோண…” செல்வத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு ஆற்றுப் பக்கமாகத் திரும்பினான். சாலையில் அதிகாலையின் இளம் வெளிச்சம் மட்டும் திட்டுத்திட்டாகப் படர்ந்திருந்தது. “மதுர முழுக்க இப்ப நம்மள வலவீசித் தேடுவாய்ங் களாய்யா…” சோணை கேட்க, ‘ம்ம்ம்’ என வெறுமெனே தலையசைத்தான். “வண்டில இருக்குற சரக்க எப்பிடிய்யா இப்ப நாம காசாக்குறது?” சந்தேகத்தோடு கேட்ட சோணையிடம் “பொருள இப்போதைக்கு நாம வெளிய எடுக்க முடியாது. பொறுமையாத்தான் இருக்கணும்” என்றான். “அதுவரைக்கும் மேப்படியான் சும்மாவா இருப்பான்?” ஆற்றை நெருங்கியதும் வண்டியை நிறுத்தினான். செல்வம் பையோடு வண்டியிலிருந்து இறங்க, “கோட்டச்சாமி கிட்ட நாம சிக்கினா செதச்சிருவாப்ள செல்வம். நெனச்சாளே ஒதறுது” என்றபடியே சோணையும் பின்னால் இறங்கினான். “அதெல்லாம் ஒரு மயிரையும் புடுங்க முடியாது...” செல்வம் ஆற்றை நோக்கி வேகமாக நடந்தான். “ஏய் என்னாய்யா அசால்ட்டா சொல்ற... அவய்ங்க என்ன லேசுப்பட்ட ஆளா?” என சோணையும் அவனை நெருங்கி வேகமாக நடந்தான். “சோண நாந்தான் சொல்றேன்ல அந்தாளால ஒரு மயிரையும் புடுங்க முடியாது...” என ஆத்திரத்தோடு சொன்ன செல்வம் கையிலிருந்த பையை விரித்துக் கீழே வீச, நிறைய பாலிதீன் பைகள் சுற்றப்பட்ட ஒரு மனிதத் தலை பறந்துபோய் ஆற்று மணலில் விழுந்தது. அச்சத்தில் உறைந்துபோன சோணை, தனது டிரவுசர் பையிலிருந்த செல்போன் டார்ச்சை ஆன் செய்து தலைக்கு அருகில் சென்று வெளிச்சம் பாய்ச்சினான். ரத்தம் உறைந்த நிலையில் கோட்டைச்சாமியின் தலை பாலிதீன் பைக்குள் கிடந்தது.

- ஆட்டம் தொடரும்...

ரெண்டாம் ஆட்டம்! - 1

லஷ்மி சரவணகுமார் (35). ஏழு சிறுகதை நூல்கள், ஐந்து நாவல்கள், கவிதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதிகள் என இதுவரை பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். ‘சாகித்ய அகாடமி’யின் யுவபுரஸ்கார் விருது, ‘ஆனந்த விகடன் விருது’ உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக் கிறார். சில தமிழ்த் திரைப்படங்களில் உரையாடல் எழுதுபவர் என்கிற வகையில், இவர் ஒரு தொழில்முறை சினிமாக்காரரும்கூட.

``எத்தனை கதைகளைச் சொன்னாலும், மதுரையும், அந்த மண்ணின் மனிதர்களின் கதையும் ஒருபோதும் தீராதவையாகத் தோன்றுகின்றன. இது மதுரையைப் பின்புலமாகக்கொண்ட இன்னொரு கதையல்ல. இதுவரையிலும் மற்றவர் பார்க்காத இருள் வீதிகளுக்குள் பயணிக்கப்போகும் கதை. தேவைகளுக்கும் ஆசை களுக்குமான போராட்டத்தில் மனிதன் எப்போதும் ஆசைகளிடம் தோற்றேபோகிறான். நட்பு, காதல், சகோதரத்துவம் என மனிதனின் சந்தோஷமான எல்லா உணர்ச்சி களின் நிழலாகவும் தொடர்வது துரோகம். தேவைகளுக்காக மனிதர்கள் அணிந்து கொள்ளும் முகமூடிகளையும், துரோகங் களையும், அந்த துரோகத்தால் நிகழும் கொலைகளையும் பேசும் கதையிது. தூங்கா நகரத்தின் துரோகக் கதைகளுக்குள் இணைந்தே தொடர்வோம்...’’