Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 10

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அது. மேலூரில் ஒரு கபடி டோர்னமென்ட் நடந்தது. செல்லூர் அணிக்கு முத்து கேப்டன் என்றாலும், மணியும் காளியும்தான் நட்சத்திர வீரர்கள்.

ஒவ்வொரு செயலுக்குமான விளைவையும் மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். தன்னை அண்டி வருபவர்களிடம் எதிர்பார்க்கும் விசுவாசத்தைப்போல், தாங்களும் அவர்களிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். உலகின் மீதான அச்சங்களேதும் இல்லாத இளைஞர்களாகக் கபடி விளையாடின காலத்திலிருந்து மணி, காளியோடு தோளுக்குத் தோளாக நின்றவன். பழைய காளி, காசைவிடவும் நட்பை மதித்ததால்தான் அந்த நண்பர்கள் அவனுக்கு நிழலாக நின்று காவல் காத்துவந்தனர். பணமும் அதிகாரமும் எல்லையில்லா ஆசையை காளியின் மனதில் விதைத்ததால், தன் நண்பர்களை மிக வேகமாக இழந்தான். எதிர்பாராதவிதமாக இந்த உலகுக்குள் நுழைந்துவிட்ட காளிக்கு அங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றியது. அவனது நண்பர்களுக்குச் செய்த துரோகங்களுக்கான விளைச்சலை அறுவடை செய்யும் நாளை காலம் வெகுவேகமாக அவனை நோக்கி நகர்த்திக்கொண்டிருந்தது.

மணி, நான்கு நாள்களில் மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டான். கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் விரைவில் ஆறிவிட்டபோதும், வடுக்கள் மட்டும் ஆழமாகப் பதிந்துபோயிருந்தன. அவன் காளியைப் போன்றோ, சோமுவைப் போன்றோ கோபத்திலும் பதற்றத்திலும் பழிவாங்குகிறவன் அல்ல. கழுகைப்போல் நிதானமும் துல்லியமும்கொண்டு தாக்குதல் தொடுக்கக் கூடியவன். மல்யுத்தப் போட்டிகளில் தாராசிங், எதிரியின் பலத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டு அவன் அசரும் நேரமாகப் பார்த்து ஓர் அடியில் வீழ்த்துவார். அடுத்த அடிக்கு எதிரி எழுந்து வர முடியாத அளவுக்கு பலமாக இருக்கும் அந்த அடி. முதன்முறையாக காளிக்கு உயிரின் மீதான பயம் வந்தது. மணியின் விஷயத்தில் அவசரம் காட்டாமல் இருந்திருக்க வேண்டுமென நினைத்தான். மதம் பிடிக்கும் வரை யானைகளின் இயல்பை மனிதன் தெரிந்துகொள்வதில்லை. இனி மணிக்கு எப்போது வேண்டுமானாலும் மதம் பிடிக்கலாம். அதிலும் அவன் முரட்டுத் தனமான காட்டு யானை. அவனோடு ராசியாகப் போவதே புத்திசாலித்தனம் எனப்பட்டது.

ரெண்டாம் ஆட்டம்! - 10

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அது. மேலூரில் ஒரு கபடி டோர்னமென்ட் நடந்தது. செல்லூர் அணிக்கு முத்து கேப்டன் என்றாலும், மணியும் காளியும்தான் நட்சத்திர வீரர்கள். காளி கபடி பாடிப்போகும்போது புயல் வேகத்தில் எதிரி அணியினருக்குள் நுழைந்து, தொட்டுவிட்டுத் திரும்புவான். அவ்வளவு எளிதில் ஒருவருக்கும் பிடி கிடைக்காது. அதனாலேயே அவன் பாடிச்செல்லும்போது எதிரணி வீரர்கள் ரெவ்வெண்டு பேராகப் பிரிந்து நிற்பார்கள். மணி அப்படியில்லை. அவன் நின்று நிதானமாக எதிராளியின் களத்துக்குள் சுழல்வான். ‘முடிஞ்சா என்னயப் புடிச்சுப் பாருங்கடா...’ என்கிற தெனாவெட்டு அவன் உடலிலும் கண்களிலும் இருக்கும். அவனைப் பற்றித் தெரிந்தவர்களுக்குத் தொடுவதற்குத் துணிவிருக்காது. புது ஆள் யாரேனும் அவனைப் பிடிக்க முன்னேறி வந்தால், அடுத்த விநாடி அவன் களத்துக்கு வெளியே பறந்துபோய் விழுவான். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகவே அவன் விளையாடுகிற போட்டிக்குப் பெருங்கூட்டம் வருவதுண்டு. மேலூரில் நடந்த போட்டியில், செல்லூர் அணிக்கு எதிராக வெள்ளாளபட்டி டீம் விளையாடிக்கொண்டிருந்தது. போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை... மணியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு ஒரே நோக்கமாக இருந்தது. சரியாக அவன் பாடிச் சென்றபோது அரைவட்டத்தில் சூழத் தொடங்கினர். மணி, அவர்கள் பிடிக்க வசதியாக இன்னும் முன்னேறி ‘கபடி கபடி கபடி...’ எனப் பாடினான். சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் எல்லோருமாகச் சேர்ந்து அவனைப் பிடித்து இறுக்க, மணி உடலை முன்னும் பின்னுமாக அசைத்துப் பார்த்தான். அவர்கள் பிடியை விடவில்லை. வலது காலை உருவி எதிரிலிருந்தவனின் வயிற்றில் உதைக்க, அவன் உருண்டுபோய் விழுந்தான். அந்த அதிர்ச்சியில் ஒரு நொடி மற்றவர்களின் பிடி விலக, நின்ற இடத்திலிருந்தே வால்ட் அடித்து, தங்கள் பக்க எல்லைக்குள் குதித்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களால் அந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. மணி சாதாரணமானவன் இல்லை என்பதை மற்றவர்களோடு சேர்த்து காளியும் அன்றுதான் தெளிவாகப் புரிந்துகொண்டான்.

மூர்த்தி அண்ணனையும் பகைத்துக் கொள்ளாமல், மணியோடும் ராசியாகப் போகும்படியான ஒரு வழியைக் கண்டுபிடிப்பது காளிக்கு எளிதாகத் தோன்றவில்லை. “எண்ணே... நீ எதுக்கு சும்மா மண்டையக் கொடஞ்சிட்டு இருக்க... அத்தாச்சிய வெச்சு மணிகிட்ட பேசச் சொல்லு. அது சொல்லுச்சுன்னா அடங்கிருவான்” என மருதுதான் அவனுக்கு யோசனை சொன்னான். மணி அன்புக்கும் விசுவாசத்துக்கும் கட்டுப்பட்டவன். அவனுக்கு காளியின் மனைவி சுப்புத்தாயின் மீது அலாதியான மரியாதை உண்டு என்பது காளிக்கும் தெரியும். ஆனால், இதற்கு சுப்புத்தாயி சம்மதிப்பாளா என்பதுதான் அவனுக்கு ஐயம். பொதுவான வீட்டு சமாசாரங்களைப் பேசுவதுபோல் அவளிடம் பேசத் தொடங்கியவன், “சுப்பு... மணிக்கும் எனக்கும் லேசா முட்டிக்கிச்சு… அவென் இப்ப எம்மேல கொலவெறியோட இருக்கான். வம்மவெச்சு என்னயக் கொல்றதுக்கு முன்ன நீதான் அவன்கிட்டப் பேசி அவன சரி பண்ணணும்” என்று சொல்ல, “அது ஏன் உன்னயக் கொல்லணும்னு நெனைக்கிது. யாருகிட்டயும் தேவையில்லாம சண்ட சத்தம்னு போகாதே... நீ என்ன செஞ்ச?” சந்தேகத்தோடு கேட்டாள். காளி நடந்ததைச் சொல்ல, தனது வளர்ச்சிக்காக காளி இப்படியான காரியத்தையெல்லாம் செய்வான் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத அவள், காறித் துப்பினாள். “நீயெல்லாம் ஒரு மனுசனா..? தாயா பிள்ளையா பழகினவன பதம் பாத்ததுமில்லாம உசுரக் காப்பாத்திக்கணும்னு இப்ப என்னய சமாதானம் பண்ணப் போகச் சொல்ற... அந்த மானங்கெட்ட உசுரக் காப்பாத்தி இனி என்ன சாதிக்கப் போற?” காளிக்கு அவள் பேசியது அவமானமாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. “தெரிஞ்சோ தெரியாமயோ இந்தத் தொழிலுக்குள்ள வந்துட்டேன். நீ நல்லாருக்கணும், நம்ம புள்ளகுட்டி நல்லாருக்கணும்னா எனக்கு வேற வழி தெரியல. மூர்த்தி அண்ணன பகைச்சுக்க முடியுமா?” காளி கெஞ்சும் குரலில் சொன்னதால் அரை மனசாக சுப்பு ஒத்துக்கொண்டாள்.

ஆஸ்பத்திரியிலிருந்து வந்துவிட்டிருந்த முத்தையாவை மணி தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டான். தனக்கு ஒருவன் இத்தனை விசுவாசமாக இருப்பான் என்பதை மணி ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. நாட்டுக்கோழியும் ஆட்டுக்கால் சூப்புமாக மணியின் அம்மா முத்தையாவை கவனித்துக்கொண்டது. ‘எத்தா இம்புட்டுக் கறி திண்டா எனக்கு செமிக்காது…’ என முத்தையா களைப்பாகச் சொன்னாலும், “ஏய் கல்லக் குடுத்தாலும் தின்னு செமிக்கிற வயசுல கறி செமிக்காதுங்கற… நல்லா தின்றா...” என உரிமையாகச் சொல்லும்.

ரெண்டாம் ஆட்டம்! - 10

காளியிடமிருந்து விலகின நண்பர்கள் எல்லோரும் இந்தப் பிரச்னைக்குப் பிறகு மணியோடு சேர்ந்துவிட்டிருந்தனர். காளியும் சோமுவும் சாராய வியாபாரத்தில் கவனமாக யிருந்ததால், சென்ட்ரல் மார்க்கெட்டையும் செல்லூரைச் சுற்றிய பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவர்களின் திட்டமாக இருந்தது.

சுப்புத்தாய் மணியின் வீட்டுக்குச் சென்றாள். காளியின் மீதிருந்த எந்த வெறுப்பையும் அவளிடம் காட்டாத மணி எப்போதுமிருக்கும் அன்போடு “என்ன அத்தாச்சி, நீ எதுக்கு இம்புட்டுத் தொல வந்த?” என்று கேட்டான். அவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. புருஷன் குத்தின காயம்கூட இன்னும் முழுமையாக ஆறாத நிலையில் அவனிடம் என்ன பேசுவது? “மணி, என் புருஷன் செஞ்சது சரின்னெல்லாம் நான் சொல்ல வரல, அவனக் குத்தி குடல உருவிப்போட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா இன்னும் கொஞ்ச காலத்துக்கு என் பிள்ளைகளுக்குத் தகப்பன் வேணும். அதுக்காகவாச்சும் அந்தாள கொஞ்ச காலத்துக்கு விட்ரு...” தயக்கத்தோடு சொன்னாள். மணி எதுவும் பேசவில்லை. அவள் இத்தனை காலத்தில் தன்னிடம் எதையும் கேட்டதில்லை. “அத்தாச்சி, எத்தனையோ நா உன் கையால சோறு வாங்கித் திண்ட்ருக்கேன். உன்னய முண்டச்சியா ஆக்கிட மாட்டேன். நீ தைரியமா போ. என்னால அவனுக்கு எதுவும் ஆகாது…” அவள் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடிச் சொன்னான். கண்ணீர் மல்க அவன் கைகளைப் பற்றிக்கொண்டு நன்றி சொன்னாள். மணி இப்படியொரு சத்தியத்தைச் செய்து கொடுப்பான் என அவனோடு இருந்த ஒருவராலும் நம்ப முடியவில்லை.

தன்னைச் சூழ்ந்திருந்த கண்டத்திலிருந்து தப்பித்துவிட்ட நிம்மதியில் உறங்கிய காளியை நள்ளிரவில் மருது வந்து எழுப்பினான். அசதியோடு எழுந்து வந்தவன் “என்னடா இந்த நேரத்துல? எனக் கேட்க, “காளி... கோரிப்பாளையத்துல நம்ம சாராயக் கடைய எரிச்சிட்டாய்ங்கய்யா…” மருது பதற்றத்தோடு சொன்னான். கொஞ்ச நேரம் மனதிலிருந்த நிம்மதியெல்லாம் காணாமல்போய், வாரிச் சுருட்டிக்கொண்டு அவசரமாக மருதுவோடு கிளம்பிப்போனான். மூர்த்தி அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது... கடையிலிருந்த முதலுக்கு என்ன வழி? என எத்தனையோ கேள்விகள், குழப்பங்கள். ஆளரவமற்ற நள்ளிரவில் அவர்கள் கடை இருந்த வீதிக்குச் சென்றபோது, முக்கால்வாசிக்கும் மேல் எரிந்துபோயிருந்தது. தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்று தோற்ற களைப்பில், சிலர் செய்வதறியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். நெருப்பின் தணல் சூழ்ந்திருந்தவர்களுக்குள் ஊடுருவிச் செல்ல, காளி உறைந்துபோய் நின்றிருந்தான்.

(ஆட்டம் தொடரும்)