Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 11

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

செல்வம் எவ்வளவுக்கு எவ்வளவு வீட்டையும் வீட்டிலிருந்தவர்களையும் வெறுத்தானோ, அதேயளவுக்கு நண்பர்களை நேசித்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 11

செல்வம் எவ்வளவுக்கு எவ்வளவு வீட்டையும் வீட்டிலிருந்தவர்களையும் வெறுத்தானோ, அதேயளவுக்கு நண்பர்களை நேசித்தான்.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

மதுரை 2005

வ்வொரு வயதிலும் உலகின்மீது ஒவ்வொரு விதமான ஆசையும் விருப்பமும் வரும். செல்வத்துக்குப் பதினேழு வயது. உலகின் அத்தனை சாகசங்களையும் சவாலுக்கு அழைத்து வெற்றிகாணும் குருட்டுத்தனமான துணிச்சல் அவனோடு சுற்றியவர்களுக்கு இருந்தது. முத்தையா கைவாகனமென்றால், தனசேகர் ஊளை. அவர்களைப்போல் ஊளையாக இருக்கக் கூடாதென்பது செல்வத்துக்கு இருந்த லட்சியம். எல்லோருடனும் விளையாட்டாக வம்புக்கு இழுக்கிறவன், அநாவசியமான வம்புகளுக்குப் போவதில்லை. அவன் உலகம் அவனின் நண்பர்களும் கபடியும்தான். கபடி விளையாடுகிற போது அவன் வேறுவிதமான ஆள். யாரும் கற்றுக் கொடுக்காமலேயே கபடி பாடி வரும் ஆளைப் பிடித்து நிறுத்துவதற்கான லாகவத்தைக் கற்றுக்கொண்டிருந்தான். நிலத்தில் ஊன்றியிருக்கும் அவனின் இரண்டு கால்களும் பனைமரங்களைப்போல் அத்தனை வலுவாக இருக்கும். மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அமையும் தனித்துவமான கால்கள் அவனுக்கு. மாடு அணைகிறவர்களுக்கும், கபடி விளையாடுகிறவர்களுக்கும் கால்கள்தான் முக்கியம். வலுவான கால்கள் உள்ளவனால்தான் நல்ல வீரனாக வர முடியும். இயற்கையிலேயே செல்வத்தின் கால்கள் நீளமானதாகவும், உரமேறி வலுவாகவும் இருந்தன. அவனுக்கு மற்றவர்களைப்போல் தாட்டியக்காரனாக வேண்டுமென்கிற எண்ணமெல்லாம் இல்லை. நல்ல விளையாட்டு வீரனாக நாலு பேர் மதிக்கக்கூடிய ஆளாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம்.

ரெண்டாம் ஆட்டம்! - 11

சீனியம்மா, வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவுப் பணி செய்துகொண்டிருந்தது. எல்லோருடனும் கலகலப்பாகப் பேசிப் பழகும் அந்தம்மாவை எல்லோருக்கும் பிடிக்கும். அது பார்க்கும் வேலையைவைத்து இழிவாகப் பேசினாலோ, தன் மகன் செல்வத்தைக் குறையாக ஏதாவது சொல்லிவிட்டாலோ சீனியம்மாவின் இன்னொரு முகம் வெளிப்படும். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத கெட்டவார்த்தைகளையெல்லாம் திரட்டி எடுத்துத் திட்டும். அதனாலேயே அதோடு சண்டைக்குப் போவதற்கு ஒருத்தருக்கும் துணிச்சல் இருக்காது. சேகர், அவனின் அப்பா முத்தையாவைப்போல் ஊளை. செல்வம், சீனியம்மாவைப்போல் விவரமான ஆள். அம்மாவுக்காக மட்டுமே அந்த வீட்டைச் சகித்துக்கொண்டிருந்தான். கொஞ்ச வருஷத்துக்கு முன்பாக ஒரு கேஸில் முத்தையா ஒன்றரை வருடம் ஜெயிலில் இருந்தபோது, சீனியம்மாவுக்கு வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பி.டி வாத்தியார் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டது. சீனியம்மா எதையும் ரகசியமாகச் செய்யவில்லை. வாத்தியார் வீட்டில் போய் சமைத்துக் கொடுப்பது, உடல்நிலை சரியில்லாத வாத்தியாரின் மனைவியைப் பார்த்துக்கொள்வதென அந்த வீட்டில் ஒருத்தியாகவே நடமாடும். செல்வத்துக்கு அப்போது பத்து, பதினோறு வயதிருக்கும். ‘எம்மா... அந்த ஊளப்பயலுக்குப் பொண்டாட்டியா இருக்கறதுக்கு, நீ பேசாம இந்த வாத்தியார் கூடயே போயிரலாம்…’ என ஒருநாள் சொன்னபோது ஏதோ நெருடலாகத் தோன்ற, சில நாள்கள் வாத்தியார் வீட்டுக்குப் போவதை நிறுத்தியது. பிறகு அவருடனான பழக்கத்தை முற்றாகத் துண்டித்துக்கொண்டது. வேறு ஏதோ ஒரு பிரச்னையைப் பேசும்போது, செல்வம் சிரித்தபடியே முத்தையாவை ‘ஊளப்பய’ என்று சொல்ல, சீனியம்மா அவன் பொடணியில் ஓங்கி அடித்தது. “எலேய் ஒருத்தன் அப்பிராணியா இருந்தா ஊளப்பயலா... உங்கப்பன ஏமாத்தி காரியம் சாதிச்சவய்ங்க எத்தன பய இருக்காய்ங்கன்னு தெரியுமா? அந்தாளு ஏமாளி, ஆனா நல்லவென். நான் இன்னொருத்தன்கூடப் போனது என் உடம்பு தேவைக்காகத்தான். உங்கப்பன புடிக்காம இல்ல. ஊர்க்காரய்ங்களாட்டம் இன்னொரு வாட்டி ஊள கீளன்னு சொன்ன சங்குல மிதிச்சுக் கொன்றுவேன்” என மிரட்டியது. அன்றுமுதல் செல்வம், அம்மாவிடம் முத்தையாவைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

செல்வம் எவ்வளவுக்கு எவ்வளவு வீட்டையும் வீட்டிலிருந்தவர்களையும் வெறுத்தானோ, அதேயளவுக்கு நண்பர்களை நேசித்தான். கோட்டைச்சாமிதான் உடன் பிறந்த அண்ணனைப்போல் பார்த்துக்கொண்டார். சுந்தர் அண்ணன் சலூன், தாய் மெஸ், ஏரியாவிலுள்ள டீக்கடைகள் எனப் பகல் பொழுதுகள் கழிந்தாலும், மாலை நேரங்கள் ரைஸ் மில் சாலையின் தொடக்கத்திலிருக்கும் மரக்கடை வாசலில்தான் கழியும். கடைக்கு அருகில் தெருவிளக்கு இல்லாததால், அதிக வெளிச்சமோ இருளோ இல்லாமல் அந்த இடம் மட்டும் அரை வெளிச்சத்தில் கிடக்கும். உடை மரங்களில் உட்கார்ந்து கதை பேசத் தொடங்கினால் பொழுது விடியும் வரை நேரம் போவது தெரியாது. ‘இவய்ங்க விடிய விடிய இங்கனக்குள்ள உக்காந்து அப்பிடி என்னதான் பேசுவாய்ங்க?’ என எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளோ, கவலைகளோ இல்லாததால் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாகக் கழியும்.

அந்த ஏரியாவில் நிறைய குட்டிச்சுவர்கள் உண்டு. மரக்கடை, அவர்கள் வழக்கமாக அமரும் இடமென்றாலும் சோணை உள்ளிட்ட தெருக்கார நண்பர்களோடு தெருமுனையிலிருக்கும் குட்டிச்சுவர்களில்தான் காலை நேரங்களில் உட்காருவான் செல்வம். பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகளையும், அவதி அவதியாக வேலைக்குப்போகிற பெண்களையும் தூங்கி எழுந்து, பல்கூட விளக்காமல் உட்கார்ந்து டாவடிப்பதில் அவர்களுக்கு அலாதியானதோர் இன்பம். சோணையின் அம்மா, வீட்டு வாசலில் பணியாரம் சுட்டு விக்கும். அவன் வரும்போதே பெரிய கிண்ணத்தில் பணியாரங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு வருவான். பணியாரம் தின்றபடியே அன்றைய நாளைத் தொடங்குவார்கள். செல்வத்தோடு சுற்றிய எல்லோருக்குமே உலகம் வீட்டுக்கு வெளியில்தான் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெண்டாம் ஆட்டம்! - 11

சங்கையா அந்த ஏரியாவுக்குக் குடிவந்த சில நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலை அவரின் இரண்டு மகள்களும் பள்ளிக்கூடம்விட்டு வரும்போது செல்வம் முதல் தடவையாகப் பார்த்தான். அச்சடித்தாற்போல் ஒரே மாதிரி இருந்த அவர்களில் யார் மூத்தவள், யார் இளையவள் என அடையாளம் காண்பது சிரமம். எண்ணெய் வழிந்த முகம்கொண்ட பெண்களின் மூக்கில் எப்போதும் ஒரு மினுமினுப்பிருக்குமே, அவர்கள் இருவரிடமுமே அந்த மினுமினுப்பு உண்டு. பள்ளி முடிந்து வரும் நேரத்தை கணித்து, செல்வம் தினமும் அதே நேரத்துக்குக் குட்டிச்சுவருக்கு வரத் தொடங்கினான். அவர்கள் இரண்டு பேரையுமே அவனுக்குப் பிடித்திருந்தது. முதல் நாள் பார்த்த ஆசை குறையாமல் ஒவ்வொரு நாளும் பார்த்தான். அந்தச் சில நொடிகள் மட்டும் அவர்களைப் பார்க்கும் சந்தோஷம் போதுமானதாயில்லை என்றாகி, அவர்களைப் பள்ளிக்கூடம் வரை பின்தொடர்ந்து சென்றான். காலை மாலை இரண்டு வேளையும், சரியாக அவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் வரை சென்று விட்டுவருவதை யாரும் சொல்லாமலேயே தனக்கு இடப்பட்ட கட்டளையாக நினைத்துக்கொண்டவன், அதற்காகவே புது சைக்கிளை வாங்க நினைத்தான். தம்பியின் விருப்பமறிந்த சேகர் அவனுக்காக ஒரு புது சைக்கிளைத் திருடிக் கொடுத்தான். சேகர் தன் வாழ்க்கையில் செய்த வெற்றிகரமான திருட்டு அது. செல்வம் தன் மகள்களுக்குப் பின்னால் பேயாய் அலைவதை டூட்டியிலிருந்த சங்கையா ஒருநாள் கவனித்துவிட, சரியான நேரம் வரட்டுமெனக் காத்திருந்தார்.

ரைஸ் மில்லை ஒட்டிய சின்ன கிரவுண்டில், பக்கத்து ஏரியா டீமோடு கபடி மேட்ச் நடந்தது. செல்வத்தின் டீம்தான் ஜெயித்தது. போட்டி முடிந்து செல்வம் சந்தோஷமாக நண்பர்களோடு ஆடிக்கொண்டிருந்தபோது, சொத்தென பொடணியில் ஓர் அறை விழுந்தது. ஆவேசமாகத் திரும்பிய வேகத்தில் பின்னால் நின்றவனைத் திருப்பி அடித்தான். தான் அடித்தது போலீஸ்காரனை என்கிற பிரக்ஞை வர, செல்வத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சடாரென பணிந்து “சார் தெரியாமப் பட்ருச்சு சார்...” என்று சொல்ல, சங்கையா ஆத்திரத்தோடு அவனை அடித்தார். அவரோடு இருந்த மற்ற போலீஸ்காரர்களும் சேர்ந்து அடித்தனர். செல்வத்தோடு இருந்தவர்கள், “சார்... எதுக்கு சார் அவனை அடிக்கிறீங்க?” எனக் குறுக்கே புகுந்து விலக்கிவிட, “ஒக்காலி... ஊரான் வீட்டு சைக்கிளைத் திருடினா, அடிக்காம நொட்டவா செய்வாய்ங்க...” என சங்கையா கத்தினார். “சார்... சார்... சைக்கிள் என்னுது இல்ல சார். எங்கண்ணே சேகருது. நான் சும்மா வாங்கி ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என செல்வம் கெஞ்சினான். “ஏய்... உங்க குடும்பமே ஏழரதானடா, ஏதோ நீ மட்டும் யோக்கியனாட்டம் நாடகத்த போட்ற… உன்னையெல்லாம் இப்பயே உள்ளவெச்சு பிதுக்கி எடுத்தாத்தான் உங்கப்பன மாதிரி வராம இருப்ப...” வலுக்கட்டாயமாக அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர். “சார்… சார்... நான் திருடல சார். என்னைய விட்ருங்க சார்...” என செல்வம் சத்தமாகக் கத்தியதைச் சாலையில் சென்ற எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். அடிவாங்கின வலியைவிடவும், செய்யாத குற்றத்துக்குப் படும் அவமானம் அவனைக் கலங்கடித்தது. மேல்சட்டையில்லாமல் வெறும் ஷார்ட்ஸோடு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவனை, பள்ளி முடிந்து திரும்பிய வனிதாவும் அனிதாவும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்களோடு நின்றிருந்த இன்னொருத்தி “வாட்ச்மேன் மாதிரி பின்னாடியே சுத்திட்டு இருந்தான்ல... நல்லா வேணும்டி இவனுக்கு…” எனச் சிரித்தாள். செல்வத்துக்கு ஒரு நிமிடம் போதும் சங்கையாவையும் அவனோடு இருக்கும் கான்ஸ்டபிளையும் கீழே தள்ளி குறுக்கில் மிதிக்க. அவர்கள் போட்டிருந்த காக்கிச் சீருடை அதைச் செய்யவிடாமல் தடுத்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த போலீஸ்காரர்களின் கொட்டையை நசுக்காமல் விடக் கூடாதென அவனுக்கு வெறி கனன்றது.

(ஆட்டம் தொடரும்)