அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 12

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஆளரவமின்றி ஆழ்ந்த மெளனத்தில் கிடந்த சாலையை அவர்களின் சிரிப்பொலி நிறைத்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் கடந்து சென்ற ஸ்கார்பியோ, சற்று தூரத்தில் நின்று, பின்னால் வந்தது.

அடித்துத் துவைக்கப்பட்ட செல்வம் லாக்கப்புக்குள் சுருண்டுகிடந்தான். உடம்பெங்கும் அவமானத்தின் சுவடுகள். சக கைதி, ``ஏய் எதுக்குப்பா சொணங்கிப்போயி கெடக்க... எந்திரிச்சி டீயக் குடி...’’ எனச் சமாதானப்படுத்த முயன்றான். செல்வத்தின் உடலில் எந்த அசைவும் இல்லை. ``அய்யய்ய... முத்தையா குடும்பத்துக்கே அசிங்கம்டா தம்பி…’’ என்றபடி தேநீரைக் குடித்தான். கோட்டைச்சாமி செய்தியறிந்து வக்கீலோடு நள்ளிரவு வந்தான்.

முடங்கிக்கிடந்த செல்வத்தைப் பார்த்ததும் கெதக்கென்றாக, ``சார்... சின்னப்பயலப் போட்டு இப்பிடி அடிச்சிருக்கீங்க...” எனச் சத்தம் போட்டான். ஹெட் கான்ஸ்டபிள் அவனை அமைதிப்படுத்தும்விதமாக ``யேய் சும்மா கத்தாதய்யா... சைக்கிள களவாண்டதுமில்லாம ஏட்டய்யா மேலயே கைய வெச்சிருக்கான். அடிக்காம தடவியா குடுப்பாய்ங்க’’ என்றார். ``இவென் களவாண்டதப் பாத்த சாட்சி இருக்கா... என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீகளா? களவாண்டது அவங்க அண்ணெ… அவனப் புடிச்சு மிதிங்க, மொதல்ல இந்தப் பயல விடுங்க…’’ என ஆத்திரமாகக் கத்தினான். வக்கீலைவைத்து எழுதி வாங்கிக்கொண்டு, செல்வத்தை வெளியேவிட்டார்கள்.

யாருக்கும் வீட்டுக்குச் செல்லப் பிடிக்க வில்லை. ``அண்ணே... தண்ணியடிப்பமா?’’ என செல்வம் கேட்க, கோட்டையோடு நின்றிருந்த மற்றவர்களும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள். ``எல்லாம் அப்பயே வாங்கிவெச்சிட்டம்டா... வா போவோம்…’’ என அவனை பைக்கில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. வழக்கமாக டாப் அடிக்கும் மரக்கடைக்கு வெளியே இருந்த அரை வெளிச்சமான இடத்தில், வெட்டி வைக்கப்பட்ட மரங்களுக்கு நடுவே அமர்ந்து அவர்கள் குடிக்கத் தொடங்கியபோது, வானம் முழுமையான இருட்டில் ஆழ்ந்துகிடந்தது. செல்வத்தின் மனதிலிருந்த நோவு எளிதில் ஆறாது. எதுவும் பேசாமல் இரண்டு பியர்களை அடுத்தடுத்து குடித்தான். “எலேய் செல்வம் விட்றா… அந்த பிசி எப்பயாச்சும் நம்மகிட்ட சிக்காமயா போவான்...” என கோட்டைச்சாமி ஆறுதல்படுத்த முயல, சோணை அவசரமாக அவனைத் தடுத்து “எண்ணே... உனக்கு மேட்ரே தெரியாதா... இவென் டைவாவக் குடுத்திட்டு இருக்கானே ரெண்டு குந்தாணிங்க… அவளுங்களோட அப்பந்தேன் அவென்” எனச் சொல்ல, கோட்டையோடு சேர்ந்து எல்லோரும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள். செல்வம் சோணையை முறைத்தான். “அவென் கெத்த காட்டணும்னே மகளுக முன்னவெச்சு அடிச்சுப்புட்டாண்ணே… ஒரு நா இல்ல ஒரு நா அவன சங்குல மிதிக்கணும்…” என செல்வம் சொன்னான். கோட்டை சிரித்தபடி, “அத விட்றா... ரெண்டு பிள்ளைகளையும் வெரட்டினியே... ரெண்டு பேத்துல யார கரெக்ட் பண்ணப் பாத்த?” என்று கேட்க, எல்லோரும் அவனது பதிலைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகப் பார்த்தனர். செல்வம் அமைதியாக எல்லோரையும் பார்த்துவிட்டு, “ரெண்டு பேரையும்தாண்ணே. அக்கா தங்கச்சிய பிரிச்ச பாவியா ஆயிரக் கூடாதுல்ல... அதனால ரெண்டு பிள்ளைகளையும் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணணும்னு நெனச்சம்ணே…” என்றதும் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ரெண்டாம் ஆட்டம்! - 12

ஆளரவமின்றி ஆழ்ந்த மெளனத்தில் கிடந்த சாலையை அவர்களின் சிரிப்பொலி நிறைத்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் கடந்து சென்ற ஸ்கார்பியோ, சற்று தூரத்தில் நின்று, பின்னால் வந்தது. வண்டியிலிருந்து ஆண்டிச்சாமியும் அவன் ஆட்கள் இரண்டு பேரும் இறங்கி வந்தார்கள். செல்வம்தான் முதலில் கவனித்து கோட்டையிடம், “எண்ணே மேப்படியான் வர்றான்…” என்றதும், எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆண்டிச்சாமி ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருப்பவன், இந்த மரக்கடையும் அவனுடையதுதான். ஓங்குதாங்கான ஆள். பனைமரக் கறுப்பு, “எலேய் உங்களுக்குத் தண்ணியப்போட வேற இடமே கெடைக்கலையா?” வேஷ்டியை ஒரு கையால் மடித்தபடி கேட்க, போதையிலிருந்த கோட்டைச்சாமி அவனைக் கேலி செய்யும் குரலில், “சும்மா உக்காந்து சரக்கத்தான போட்டோம். ஏதோ சொத்த அழிச்ச மாதிரி சவுண்ட குடுக்கற... கூத்தியா வீட்டுக்குப் போறப்போ அந்தச் சோலியப் பாரு. ஓங் கடை அப்பிடியேதான் இருக்கும், நாங்க கற்பழிச்சிற மாட்டோம்” என்றபடி கோட்டை சிரிக்க, ஆண்டிச்சாமி அவன் பொடணியில் ஓங்கி அடித்தான். ஆண்டிச்சாமியோடு இருந்தவர்கள், கோட்டையையும் அவனோடு இருந்தவர்களையும் அடிக்க, போதையிலிருந்தவர்கள் திருப்பி அடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தால் போதுமென குடித்துக்கொண்டிருந்த சரக்குகளைப் பாதியிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

மோகன் ஆஸ்பத்திரியில் கோட்டைச்சாமியின் தலையில் பதினான்கு தையல்கள் போட்ட பிறகு, செல்வமும் கூட்டாளிகளும் அதிகாலை அவனை வீட்டுக்கு அழைத்துவந்தார்கள். திண்ணையில் படுத்துக்கிடந்த கோட்டையின் அப்பத்தா இவர்களைப் பார்த்த ஆத்திரத்தில், “எலேய் இந்த வெளங்காத பயககூட சேராதன்னு எம்புட்டுச் சொன்னாலும் கேக்க மாட்டியா? சோத்தத்தான திங்கிற... த்தூ…’’ எனக் கத்தத் தொடங்கியது. சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் உறக்கம் களைந்து எழுந்து வந்தனர். ஒவ்வொருவரின் மூஞ்சியிலும் வெளிப்பட்ட வெறுப்பை எதிர்கொள்ள முடியாமல் கோட்டைச்சாமி தலையைக் குனிந்துகொள்ள, கோட்டையின் ஆத்தா இவன் தலையிலிருந்த கட்டைப் பார்த்து சிரித்தபடி, “எவெங்கிட்ட போயி மிதி வாங்கின… நீ அசிங்கப்படுறதும் இல்லாம எங்களையும் சேத்துல்லடா அசிங்கப்படுத்துற… எங்க போனாலும் அடிவாங்கிட்டு வர்றதே பொழப்பா போச்சு. எங்கியாச்சும் போயிரு. உள்ள வராத...” என ஆத்திரமாகக் கத்திவிட்டுச் சென்றது. கோட்டை எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, அவனுடன் வந்தவர்களும் பின்னால் சென்றார்கள். முனுசு வீட்டில் ஒருவரும் இல்லாததால் அன்றைய பகலை களைப்போடும், அவமானத்தின் சுமைகளோடும் அங்கு உறங்கிக் கழித்தனர்.

உறங்கி எழுந்தபோது அவ்வீட்டில் சூனியம் நிரம்பியிருந்தது. கோட்டைக்குப் பின்னந்தலையில் `விண்... விண்...’ என வலித்ததால், உடனடியாகக் குடிக்க வேண்டுமெனப் பரபரத்தான். “பொறுமையா இருண்ணே... பொழுதுசாயக் குடிப்போம்” என செல்வம் சமாதானப் படுத்தினான். கோட்டைச்சாமி யாருடனும் பேச்சுக் கொடுக்காமல் அமைதியாக இருந்தான். எல்லோரும் சொல்வதுபோல், தான் எதற்கும் ஆகாதவனோ என்கிற கேள்வி மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. பகல் வெளிச்சத்தில் ஊர்க்காரர்களை எதிர்கொள்ளக் கூச்சமாக இருந்ததால், வெளியேறாமல் கிடந்தவர்கள் ஊர் அடங்கிய பிறகு வெளியே வந்தார்கள். முந்தைய நாள் மது அருந்திய மரக்கடைக்கே செல்வம் அழைத்துப் போனான். அதிகம் பேசிக்கொள்ளாமல் மது அருந்திய அவர்களுக்குள் கோவம் கனன்றுகொண்டிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 12

“தாயோலி... எதுக்கு அடிச்சான் நம்மள?” என செல்வம் கேட்டபோதே ஆண்டிச்சாமியின் வண்டி அவர்களைக் கடந்து சென்றது. கோட்டையைத் தவிர அவனோடு இருந்தவர்கள் எழுந்து நிற்க, கடந்து சென்ற கார் நின்றது. ஆண்டிச்சாமி காரைவிட்டு இறங்கி அவர்களை நோக்கி வந்தார். தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருக்கும் கோட்டையைப் பார்க்க சங்கடமாய்ப்போக, “ஏய் கோட்ட... ஏதோ கோவத்துல அடிச்சிட்டண்டா… மனசுல வெச்சுக்காத...” எனத் தன்மையாகச் சொன்னார். கோட்டைச்சாமி தலையைத் தூக்கிப் பார்த்து “பரவால்லண்ணே” என்றான். அவருக்கு மனம் சமாதானமாகவில்லை. “இல்லய்யா... எனக்குச் சங்கடமா இருக்கு. வண்டில சரக்கு இருக்கு. எடுத்துட்டு வர்றேன். சேந்து சாப்டுவமா?” எனக் கேட்க, இவர்கள் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் தயங்கினார்கள். ஆண்டிச்சாமி திரும்பி, தன்னோடு வந்தவனிடம், “எலேய் நீ சரக்க எடுத்துக் குடுத்துட்டுக் கெளம்பு. நான் போய்க்கிறேன்’’ என உத்தரவிட்டார். அவன் அவசரமாகக் காருக்குள்ளிருந்த வாட் 69 போத்தலை எடுத்துவந்து கொடுத்துவிட்டுக் கிளம்பினான். அவரே உட்கார்ந்து போத்தலைத் திறந்தார். எல்லோரும் அவரையே பார்க்க, “அட உக்காருங்கய்யா. ரெண்டு பெக்க சாத்தினா கோவம்லாம் போயிரும்...” எனச் சிரித்தார். அவர்கள் சுற்றி அமர, அவர் பிளாஸ்டிக் தம்ளரில் சரக்கை ஊற்றிக் கொடுத்தார். முதல் சுற்றைக் குடித்து முடித்தபோது, அவர்களுக்கு மனம் கொஞ்சம் இலகுவாகியிருந்தது. “நேத்து ஐட்டம் கிய்ட்டம்னு சொல்லிட்டியா... அதான் கொஞ்சம் கோவமாகிட்டேன்… மனசுல வெச்சுக்காதய்யா கோட்ட” இரண்டாவது சுற்றையும் ஒரே மடக்கில் குடித்தபடி ஆண்டிச்சாமி சொல்ல, கோட்டை வெறுமனே தலையை மட்டும் அசைத்தான். “அண்ணே... பாண்டியன் ஹோட்டல்ல சிக்கன் நல்லாருக்கும். வாங்கியாரவா?” என்று எழுந்த முனுசின் கைகளில் ஆண்டிச்சாமி சிரித்தபடி ரூபாயைக் கொடுத்தார். முனுசும் சோணையும் கிளம்பிச் சென்றனர்.

செல்வம், கோட்டை, ஆண்டிச்சாமி இவர்கள் மூவர் மட்டுமே அடுத்த சுற்றைக் குடிக்கத் தொடங்கியபோது, முந்தைய நாளைப்போலவே தூறல் போடத் தொடங்கியது. கோட்டைச்சாமிக்கு, வீட்டிலிருந்தவர்கள் உதிர்த்த அவமானப்படுத்தும் விதமான சொற்களெல்லாம் தலைக்குள் சுழன்றன. முதல் இரண்டு பெக்குகளைக் குடித்தபோது இருந்த பொறுமை இல்லாமல், இப்போது மூன்றாவது பெக்கைக் குடிக்க, ஆண்டிச்சாமியின் பேச்சு சத்தம் அவன் காதுகளிலிருந்து மங்கிப்போனது. ஆத்திரம் உச்சத்திலேறிய ஒரு நொடியில், செல்வம் குடித்துவிட்டு வைத்திருந்த பியர் பாட்டிலை எடுத்து ஆண்டிச்சாமியின் தலையில் அடித்தான். ஆண்டிச்சாமி உறைந்துபோய்ப் பார்க்க, சூழலைப் புரிந்துகொண்ட செல்வமும் அடுத்தடுத்து பாட்டில்களை எடுத்து தலையில் அடிக்கத் தொடங்கினான். ஆண்டிச்சாமி அசராமல் எழுந்து, அவர்கள் இருவரையும் பிடித்துத் தள்ள, சுதாரித்துக்கொண்டவர்கள் உடைந்த பாட்டில்களை எடுத்து அவரைக் குத்தினார்கள். செல்வம் அவரின் கழுத்திலும் கோட்டை வயிற்றிலும் மாறி மாறிக் குத்த, ஆண்டிச்சாமி நிற்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் அப்படியே சரிந்தார். சூடான குருதி அவ்விடத்தில் வழிந்தோடியபோது, இருவரும் அங்கிருந்து அவசரமாகத் தப்பிவிட்டனர்.

(ஆட்டம் தொடரும்)