மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 13

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்!

மதுரை நகருக்குள் தொழில்களுக்காக நடந்துகொண்டிருந்த சண்டைகளெல்லாம் மறைந்து, முதன்முறையாகக் கட்சிகளுக்காக அடித்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

மூர்த்தி அண்ணன் தோல்விகளை விரும்பாதவர். அதனாலேயே எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார். மணி மாதிரியான ஒருவன், தனக்கு எதிரியாக வரக்கூடுமென அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. மணியிடம் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதாலேயே, அவன் எதற்கும் அச்சப்பட்டவனாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்தவர்கள் கிருஷ்ணவேணியை அடித்து உதைத்து, கண்டித்துப் பார்த்தார்கள். அவள் எதற்கும் அசரவில்லை. மணியைப் போன்றே அவளும் பிடிவாதக்காரியாக இருந்தாள். வேணியை வீட்டைவிட்டு வெளியில் அனுப்ப மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட மணி, தினமும் காலையில் மூர்த்தியின் வீடு இருக்கும் வீதிக்கே வரத் தொடங்கினான். துணைக்கு ஒருவரையும் அவன் அழைத்து வருவதில்லை. தனியாக சைக்கிளில் வருவான். அந்த வீட்டுக்கு எதிரிலிருக்கும் காளியம்மன் கோயிலில் உட்கார்ந்துகொள்வான். ஜன்னல் வழியாகவோ, வீட்டின் பால்கனி வழியாகவோ வேணி வந்து அவனைப் பார்த்து ஒரு முறை சிரிக்கும் வரை அந்த இடத்தைவிட்டு நகர்வதில்லை. அவளைப் பார்த்த பிறகு, முன்புபோல் அதே நிதானத்தோடு கிளம்பிச் செல்வான். மூர்த்தியின் வீட்டிலிருந்த ஒருவராலும் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ரெண்டாம் ஆட்டம்! - 13

சாராயக்கடை எரிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து காளியால் எளிதில் வெளியே வர முடியவில்லை. தனது வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் துணை நின்ற ஒருவர்கூட தன்னோடு இல்லை என்கிற நிஜம் அவனை அச்சுறுத்தியது. அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் சுவைத்துவிட்டவன், எல்லாம் கைவிட்டுப் போய்விடுமோ எனும் கலக்கத்திலிருந்தான். இரண்டு நாள்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தவனை மூர்த்தி அண்ணனே நேரில் வந்து ஆறுதல்படுத்தினார். “யேய் என்னய்யா இப்பிடி கெடக்க? மொதல் என் மொதல்தான... போனா போகட்டும். நாலு நாள்ல கடைய மறுபடியும் தெறந்திருவோம். எப்பயும்போல இருய்யா...” அவர் வார்த்தைகள் அவனைத் தெம்பூட்டுவதற்கு பதிலாகச் சங்கடப்படுத்தின. “அதுக்கில்லண்ணே... அவென் முழுக் கிறுக்கென். லேசில விட மாட்டான். நம்மளுக்குக் கொடச்சலக் குடுத்துட்டேதான் இருப்பான். எதாச்சும் செஞ்சு அவன முடிச்சுவிடணும். இல்லன்னா போலீஸ் கீலிஸ்ல சொல்லி ஒரு ஆறு மாசத்துக்கு உள்ள தூக்கிவெக்கணும்...” எனப் பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னான். அவருக்கும் அவன் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தது. உயிருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் தன் வீட்டுக்கு எதிரில் வந்து உட்காரும் மணி, பல செய்திகளைச் சொல்லாமல் அவர்களுக்கு உணர்த்தியிருந்தான். ‘‘நீ சொல்றதும் சரிதான் காளி. சீக்கிரமே நான் ஒரு வழி பண்றேன்...” என்றபடியே மூர்த்தி அண்ணன் கிளம்பிச் சென்றார்.

செல்லூரில் ஒவ்வொரு நாளும் மணிக்கு செல்வாக்கு அதிகரித்தபடியே இருந்தது. கண்மாயை ஒட்டிய சாலையில் முளைத்த புதிய கடைகளை மணிக்கு வேண்டியவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். பாரம்பர்யமான தேசியக்கட்சிக்கும், தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்த கட்சிக்குமான உறவில் விரிசல்கள் உருவாகத் தொடங்கியிருந்ததால், ஆங்காங்கே இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் நடக்கத் தொடங்கின. மூர்த்தியோடு மணிக்கு இருந்த பகையைத் தெரிந்துகொண்ட தேசியக் கட்சிக்காரர்கள், அவனைத் தங்கள் ஆதரவில் வைத்துக்கொள்ள முயன்றனர். மணி, அரசியல் விளையாட்டுகள் எதிலும் அக்கறை காட்டாமல் மார்க்கெட்டையும், ரிக்‌ஷா ஸ்டாண்டுகளையும் மட்டுமே கவனித்தான். “யேய் மணி... ஊர்ல இருக்க எல்லாப் பெரிய தலையும் உனக்குப் பகையா இருக்காய்ங்க... இந்த நேரத்துல ஒரு கட்சி சப்போர்ட்டு இருக்கறதுதான்யா பாதுகாப்பு...” என மருது அவனுக்கு எடுத்துச் சொன்னான். மணி பிடிகொடுக்கவில்லை.

மதுரை நகருக்குள் தொழில்களுக்காக நடந்துகொண்டிருந்த சண்டைகளெல்லாம் மறைந்து, முதன்முறையாகக் கட்சிகளுக்காக அடித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். அரசியல், ஒவ்வொருவரின் வாழ்வுக்குள்ளும் புகுந்து சென்றபோது, வன்முறையிலிருந்து தப்பிக்க முடியாத சூழல் உருவானது. இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இடையில், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான போர் தொடங்கியது. மூர்த்தியோடு இருந்த நிறைய பேர் சிதறி வேறு திசையில் செல்வதும், சிலர் புதிதாக அவரிடம் வந்து சேர்வதுமாக இருந்தார்கள். அவரது அதிகாரம் குறைந்ததாலேயே அவருக்குக் கீழிருந்தவர்களின் அதிகாரமும் குறையத் தொடங்கியது. குழப்பமான இந்த அரசியல் சூழலில், மதுரையின் ஒவ்வொரு ஏரியாவிலிருந்தும் புதிய ஆட்கள் உருவாகத் தொடங்கினார்கள். காளியோ, மூர்த்தியோ முன்னைப்போல் எல்லா ஏரியாவிலும் அதிகாரம் செலுத்த முடியாத சூழல் உருவானதால், அவர்கள் சாராயக் கடைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவானது.

ரெண்டாம் ஆட்டம்! - 13

மூர்த்தி சொன்னதுபோலவே, கோரிப்பாளையத்தில் அதே இடத்தில் திரும்பவும் கடையைக் கொண்டுவந்துவிட்டார். வியாபாரமும் முன்னைப்போலவே பரபரப்பாகிவிட்டாலும், கடை எரிக்கப்பட்ட செய்தி மக்களிடம் ஒரு பேச்சாக இருந்துகொண்டுதான் இருந்தது. கடையில் கூடுதலான ஆட்களைப் பாதுகாப்புக்கு வைத்தான். ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என்கிற பதற்றத்தில் அவன் உறங்கும் நேரம் குறைந்தது. சரியான உணவுமில்லாமல் உடல் மெலியத் தொடங்கியது. காளியைச் சுற்றி நடந்துகொண்டிருந்த அவ்வளவையும் சோமு கவனித்தான். அவனோடு தீராத பகையிருந்தபோதும், இன்னொருவன் புதிதாக வளர்வதை சோமுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு மணிக்கு மூர்த்தி அண்ணனோடும் பகை இருந்ததால், அவனைப் பொது எதிரியாக நினைத்தான். இப்போதைக்கு காளியோடு ராசியாகி, மணியை ஒழிப்பதுதான் சரியெனத் தோன்றியது. கடந்தகாலக் கசப்புகளை அத்தனை எளிதில் கடக்க முடியாது என்பதால், மத்தியஸ்தம் செய்ய தன் தம்பியை அனுப்ப முடிவு செய்தான். தினமும் மாலையில் புதுமண்டபத்துக்கு அருகிலுள்ள காபி கடைக்கு வருவது காளியின் வழக்கம். அங்கு வைத்து சோமுவின் தம்பி தற்செயலாகச் சந்திப்பதுபோல் சந்திக்க, அவனோடு என்ன பேசுவதென காளிக்குத் தயக்கமாக இருந்தது. மூட்டை தூக்கும் கொண்டியால் அவன் முகத்தில் போட்ட காயத்தின் தழும்பு பேச விடாமல் செய்தது. சோமுவின் தம்பி, அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் “அண்ணனே உங்கிட்ட பேசணும்னு நெனச்சுச்சு காளி, ஆனா சங்கடப்படுது. அதான் நான் வந்தேன். பழசயெல்லாம் மறந்துருவோம். நாம தனித்தனியா நின்னம்டா இழப்பு ரெண்டு பக்கத்துலயும் வரும், சேந்து நிக்கிறதுதான் பாதுகாப்பு. பிரச்சன உனக்கு மட்டுமில்ல, நம்ம எல்லாருக்கும்தான்” அவன் நிதானமாக எடுத்துச் சொல்ல, காளியும் ஆமோதித்தான். அன்று இரவு, மூர்த்தியின் வீட்டில் காளியும் சோமுவும் ஒன்றாக உணவருந்தி பழைய பகையையெல்லாம் முடித்துக்கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.

காளியும் சோமுவும் இணைந்ததை தனக்குக் கிடைத்த பெரும் பலமாக நினைத்த மூர்த்தி, “மணி வெவகாரத்த நான் பாத்துக்கறேன். நீங்க ரெண்டு பேரும் கட்சி வெவகாரத்தப் பாருங்க. இது வாழ்வா சாவாங்கறப் போராட்டம்” என அவர்களிடம் சொல்லியிருந்தார். காளிக்கும் சோமுவுக்குமான புதிய நட்பை மதுரையே ஆச்சர்யமாகப் பார்க்க, மணி மட்டும் அதற்குப் பின்னாலிருந்த சூதைப் புரிந்து கொள்ள முயன்றான். போலீஸ்காரர்கள் மூலமாக மூர்த்தி அவனுக்கு மை வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. மதுரையில் இருப்பது பாதுகாப்பில்லை எனப் புரிந்துகொண்ட மணி, சிவகங்கையில் பதுங்கிக்கொண்டான். போலீஸ்காரர்கள் மதுரை முழுக்க மணியைத் தீவிரமாகத் தேடியும் அவன் இருக்கும் இடம் குறித்த துப்பு கிடைக்கவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக, மேலமாசி வீதியில் ஊர்வலம் ஒன்று நடப்பதாக இருந்தது. முந்தைய தினத்திலிருந்தே மூர்த்தி ஓடி ஓடி எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தார். வெவ்வேறு ஊர்களிலிருந்து கட்சித் தொண்டர்கள் ஏராளமாக வந்து குவியத் தொடங்கியிருந் தார்கள். மேலமாசி வீதியில் தொடங்கும் ஊர்வலம், தமுக்கத்தில் முடிந்ததும் அங்கு பொதுக்கூட்டமும் இருந்ததால், வழி நெடுக கட்சித் தொண்டர்கள் ஆக்கிரமித்திருந் தார்கள். முக்கியப் பிரமுகர்களுக்கான வாகனங்களை ஏற்பாடு செய்வதை காளியும், பொதுக்கூட்ட மேடை மற்றும் பிற ஏற்பாடுகளை சோமுவும் முன்னின்று செய்திருந்தார்கள். தலைவர் அதிகாலையி லேயே மதுரைக்கு வந்துவிட்டிருந்தார். ஊர்வலம் தொடங்குவதற்கான பதற்றம் மேலமாசி வீதியில் அதிகரிக்க, போலீஸ் காரர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். மூர்த்தி தலைவரை உடனிருந்து அழைத்து வருவதற்காக, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட, அவரது ஆட்கள் ஊர்வலம் தொடங்கும் இடத்தில் காத்திருந்தனர். அதேநேரத்தில், சோலை அழகுபுரத்திலிருந்த மூர்த்தியின் வீட்டுக்கு வந்த மணி, எந்த எதிர்ப்புமில்லாமல் கிருஷ்ணவேணியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்றான்.

(ஆட்டம் தொடரும்)