அலசல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 14

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஏராளமாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். வயது வித்தியாசமின்றி எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர்

எமர்ஜென்ஸி

‘ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பும் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’ - கேயாஸ் தியரி.

‘இந்திரா காந்தி தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக’ அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, ஒவ்வொரு நாளும் அவருக்கு எதிரான பாதையில் திரும்பிக்கொண்டிருந்தது. டெல்லிக்கும் மதுரைக்கும் பல நூறு மைல்கள் தூரமிருந்தபோதும் அரசியல் ஒரு புள்ளியில் இணைத்தது. வழக்கின் தீர்ப்பு பிரதமருக்கு எதிராக வர, எதிர்க்கட்சிகள் அவரைப் பதவி விலகச் சொல்லி மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள இந்திரா, அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார். ஒரு ஜனநாயக தேசம் எதிர்கொள்ளக்கூடாத எல்லா நெருக்கடிகளையும் இந்த தேசம் எதிர்கொள்ளத் தொடங்கியது. தலைவர்களும் பொதுமக்களும் கேள்விகளின்றி கைதுசெய்யப்பட்டதால் சிறைச்சாலைகள் நிரம்பிவழிந்தன. பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன, பேச்சுரிமை மறுக்கப்பட்டது. இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி, ஏராளமான முஸ்லிம் மக்களுக்குக் கட்டாயமாகக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்தார். ஜனநாயகத்தைத் தங்கள் கைகளில் சிக்கிய பொம்மையைப்போல் வைத்து இந்திரா காந்தியின் குடும்பம் விளையாடிக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் எமெர்ஜென்ஸிக்கு எதிரான போராட்டங்களும் குரல்களும் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு எதிரொலிக்கத் தொடங்கியதோடு, மெரினாவில் மாபெரும் பொதுக் கூட்டத்தை அப்போதைய முதல்வர் ஒருங்கிணைத்தார். மாநில உரிமைகளுக்காக ஒரு கட்சி இத்தனை தீவிரமாகப் போராடக் கூடுமாவென மொத்த இந்தியாவும் உற்று நோக்கிக்கொண்டிருந்தது. பிரதமர், தமிழ்நாட்டில் ஆட்சியைக் கலைத்து, ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்தார். தமிழக அரசியலில் உருவான நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியிருந்த மதுரை நகரத்தை அப்படியே உறையவைத்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 14

பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஏராளமாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். வயது வித்தியாசமின்றி எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர். மூர்த்தி, மதுரையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியதால் தனது ஆட்களோடு மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். நான்கு தெருக்களையும் அவற்றைச் சார்ந்த ஆட்களையும் மட்டுமே பார்த்துப் பழகிய அவரது இந்த அரசியல் விளையாட்டுகள், புரிந்துகொள்ள முடியாதவையாக இருந்தன. சாராயக் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டதால், அதைத் தொழிலாக நம்பியிருந்த காளியும் சோமுவும் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினார்கள். பழைய தொழில்களும் இல்லாமல், புதிய தொழில்களையும் கையில் எடுக்க முடியாமல் அவர்கள் திண்டாடியபோது, காவல்துறையினர் அவர்களின் மீதிருந்த பழைய பகைக்கணக்கைத் தீர்த்துக் கொள்ள நினைத்தனர். மதுரையின் வெவ்வேறு பகுதிகளில் வளரத் தொடங்கியிருந்த புதிய சண்டியர்களை போலீஸ்காரர்களே வளர்த்து விட்டார்கள். தன்னை ஆபத்து சூழ்ந்திருப்பதைத் தெரிந்துகொண்ட காளி, குடும்பத்தோடு சொந்த ஊரில் சென்று பதுங்கிக்கொண்டான்.

சிதறிக்கிடந்த மதுரைக்குள் தனியொரு ஆளாக மணி ராஜ்ஜியம் பண்ணத் தொடங்கினான். சோலை அழகுபுரத்தில் மூர்த்தியின் வீடிருந்த அதே தெருவில், ஒரு வீட்டை வாங்கிக் குடியேறியபோது “ஏய் நீ எல்லமீறிப் போறய்யா, என்னைக்கா இருந்தாலும் அவய்ங்க பழியெடுப்பாய்ங்க. நீ கொஞ்சங்கூட பயமே இல்லாம அவய்ங்க தலவாசல்லயே போயி குத்தவெக்கிற…” என மருது பதற்றமாகச் சொன்னான். “தெரியும்டா மருது… எதிரிய தூரமா வெச்சுக்கறத விட பக்கத்துல வெச்சுக்கிறதுதான் பாதுகாப்பு… ஜெயிலுக்குப் போனவய்ங்க மொதல்ல திரும்ப வரட்டும், மிச்சத்த அப்பறம் பாப்போம்...” எனச் சாதாரணமாகச் சிரித்தான். மூர்த்தியின் வீடு ஆள்வரத்தின்றி வெறிச்சோடிப் போனது. உறவுக்காரர்கள், கட்சிக்காரர்கள் தற்காலிகமாகப் போக்குவரத்தை நிறுத்தியிருந்ததால், தனியாக இருந்த அவர் மனைவிக்கு நான்கு வீடு தள்ளியிருந்த மகள் மட்டுமே ஆதரவானாள். மகளும் மருமகனும் அந்நியோன்யமாக இருப்பதில் உள்ளூர மகிழ்ச்சியிருந்தாலும், அந்தம்மா அதை வெளிப்படுத்துவதில்லை. நேரங்காலம் இல்லாமல் மணியும் வேணியும் பிணைந்துகிடப்பார்கள். நாளைக்கே உலகம் அழிந்துவிடுவதைப்போல வேணியோடு மூர்க்கமாகக் கூடுவான். அவர்கள் இருவரும் கூடும் சமயங்களில், வீடு முழுக்க முனகல் ஒலிகள் எதிரொலிக்கும். ``யேய், உங்க ரெண்டு பேருக்கும் வெவஸ்தையே இருக்காதாடி... நேரங்காலமில்லாம எந்த நேரமும் உருண்டுட்டு இருக்கீங்க?” என வேணியின் அம்மா அவளிடம் சங்கடமாய்ச் சொன்னது. “ஏம்மா இந்த வயசுல செய்யாம அப்பறம் எப்ப செய்றது?’ என வேணி சிரித்தாள். “சரிடி, என்னவோ செஞ்சு தொலைங்க. கொஞ்சம் சத்தம் வராம செய்ய வேண்டிதான…” எனத் தலையில் அடித்துக்கொண்டது. “சத்தம் வராம செய்ய நாங்க என்ன புள்ளையாருக்குப் பூசையா பண்றோம்... போம்மா நீ வேற...” என வேணி சிரித்தாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 14

மூர்த்தி அவ்வளவு நெருக்கடியிலும், ஜெயிலுக்குப் போவதற்கு முன்னால் தன் இளைய மகனைப் பத்திரமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்துவிட்டார். “இந்தம்மா நாட்டச் சுடுகாடா ஆக்காம விடாது. நீயாச்சும் கண்ணுக்கெட்டாத தூரத்துல நிம்மதியா இரு...” கடைசியாக அவர் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் இவைதான். இந்தச் சூழலைக் கணித்துதான் மணி வீட்டை மாற்றி வந்திருந்தான். கிருஷ்ணவேணிக்கும் அவள் அம்மாவுக்குமான நெருக்கம், தன் மீதான பகையைக் குறைக்கும் எனும் அவன் கணக்கு சரியாக வேலைசெய்தது. யாரும் கேட்காமலேயே மூர்த்தியின் இடத்திலிருந்து மணி அவரது எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்ளத் தொடங்கியபோது, அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது சோமுவின் குடும்பம் மட்டும்தான். ‘யேய் ஒவ்வொருத்தங்கிட்டயா மல்லுக்கு நின்னுட்டு இருப்பியா? வளர வளர உனக்காக மத்தவன வேல செய்ய வெக்கணும். நீ வேல செய்யக் கூடாது. சோமுப்பய குடும்பத்து மேல போலீஸ்காரய்ங்க கொலக்கடுப்புல இருக்காய்ங்க. அவய்ங்ககிட்ட கோத்துவிட்டுட்டு நீ ஒதுங்கிரு...” எங்கெல்லாம் உடல் பலத்தைப் பயன்படுத்த நினைத்தானோ அங்கெல்லாம் கிருஷ்ணவேணி அவனை திசை திருப்பினாள். “உங்கப்பன் புத்தி அப்பிடியே இருக்குடி...” என அவளை அணைத்து மூர்க்கமாக முத்தமிடுவான். சோமுவை ஒடுக்க அவன் போலீஸ்காரர்களின் உதவியை நாடியபோது, அவர்கள் பதிலாக காளியைக் கேட்டனர். எதிரியாகவே இருந்தாலும் காட்டிக்கொடுப்பதா என மணி தயங்க “அவனக் கொல்ல மாட்டேன்னுதான சத்தியம் பண்ணுன. காட்டிக் குடுக்கலாம். தப்பில்ல” என வேணி உசுப்பேத்தினாள்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, தன் சொந்த கிராமத்தில் பதுங்கியிருந்த காளியை போலீஸ்காரர்கள் கைதுசெய்தபோது, அவன் பாதியாக ஒடுங்கியிருந்தான். எங்கோ தொடங்கிய தன் வாழ்க்கை எங்கெங்கோ அலைந்து ஆதரவின்றி சிறைச்சாலையில் முடிந்துபோகுமோ என்கிற அச்சம் அவனுக்குள் நிறைந்திருந்தது. “தைரியமா போ, ஒண்ணும் ஆகாது” என மனைவி சொன்னதற்குப் பதில் சொல்லக்கூடத் திராணியில்லாமல் சென்றான். மதுரை சிறைச்சாலைக்குள் சித்திரைத் திருவிழாக் கூட்டம். ஒவ்வொரு பிளாக்கிலும் கைதிகள் நிரம்பிவழிந்தனர். போதிய இடவசதியும், உணவுமில்லாமல் போராடியவர்களை சிறைத்துறை அதிகாரிகள் இரக்கமின்றி அடித்துத் துவைத்தனர். சோமுவும் மூர்த்தியும் இருந்த குவாரன்டினிலேயே காளியையும் அடைத்தார்கள். அந்தக் குவாரன்டினுக்கு வெளியே ஓர் உலகமும், குவாரன்டினுக்குள் இன்னோர் உலகமும் இருந்தன. கைதிகள் தங்களுக்குள்ளிருந்த பகைகளைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த அதேநேரத்தில், போலீஸ்காரர்களும் தங்களுக்கு வேண்டாதவர்களை முடித்துவிட நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பத்திரிகைச் செய்திகளில் நாட்டு நிலவரம் எதுவும் சொல்லப்படவில்லை என்பதால் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள சினிமா தியேட்டர்களும், கோயில்களும், சின்னச் சின்ன விசேஷங்களுமே வழிகளாக இருந்தன. மதுரை நகருக்குள் ஏராளமான காதுகுத்துகளும், கவுரடப்புகளும் நடக்கத் தொடங்கின. சிறையிலிருந்து விடுதலையானவர்கள் சிறைச்சாலை நிலவரத்தை இந்த விசேஷ வீடுகளில் வைத்துதான் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். யார் யார் எந்தச் சிறைச்சாலையில் இருக்கிறார்கள், எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன என்கிற விவரத்தையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இப்படித்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. போராட்டங்களில் பங்குபெற்று கைதுசெய்யப்பட்ட ஏராளமான மாணவர்கள், கல்லூரியைவிட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டதோடு அவர்களின் கல்விக் காலமும் முடிவுக்கு வந்தது. அனுப்பானடியில் ஒரு காதுகுத்தில் கலந்துகொள்ளச் சொல்லி சோமுவின் தம்பிக்கு அழைப்பு வந்தபோது, அவன் தன் அத்தாச்சியையும் அழைத்துக்கொண்டு பரபரப்போடு சென்றான். விசேஷ வீட்டில் பெரிய கூட்டமில்லை. தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தீவிரத்தில் சின்னச் சின்னக் கூட்டமாக ஆட்கள் தனித்து ஒதுங்கியிருந்தார்கள். மூர்த்தியின் ஆள் ஒருவன் சோமுவின் குடும்பத்தினரைத் தனியாக அழைத்துச் சென்றான். “எங்கண்ணன் எதும் தாக்கல் சொல்லி வுட்ருக்கா..?” எனப் பரபரப்போடு பேச்சிமுத்து கேட்க, செய்தி கொண்டுவந்தவன் “பேச்சி... என்னண்டு சொல்றதுன்னு தெரியலைய்யா... சங்கட்டமா இருக்கு” தயக்கத்தோடு சொன்னான். “ஏய் எதுண்டாலும் சொல்லுப்பா...’ என பேச்சி பரபரக்க, “குவாரன்டின்ல ஒரு கலவரமாகிப் போச்சு. சண்டைய ஒதுக்குற சாக்குல போலீஸ்காரய்ங்க உங்கண்ணன கொண்டுவுட்டாய்ங்கய்யா…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பாகவே சோமுவின் மனைவி ஓவெனக் கதறி அழுத் தொடங்கினாள். விசேஷத்துக்கு வந்திருந்த எல்லோரும் பதற்றத்தோடு திரும்பிப் பார்க்க, சூழலை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் பேச்சிமுத்து உறைந்துபோயிருந்தான்.

(ஆட்டம் தொடரும்)