அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 15

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

கோர்ட்டில் ஆஜராவதற்கு முந்தைய ஐந்து நாள்களும் சிவகங்கையில் அத்தை வீட்டில் பதுங்கியிருந்தவர் களுக்கு ராஜஉபசாரம் கிடைத்தது.

மனிதன் ஒருபோதும் மிருக உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதில்லை. அன்பு, காதல், துக்கம், மகிழ்ச்சி இவற்றைப்போலவே வன்முறையும் நமக்குள்ளேயேதான் இருக்கிறது. சொல்லாகவோ, செயலாகவோ எந்த நிமிடம் வேண்டுமானாலும் அது வெளிப்படக்கூடும். முதல் சம்பவம் செய்கிற வரை ஒருவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், முதல் சம்பவத்தில் கண்முன்னால் செத்துவிழும் மனிதனைக் காணும் ஒருவனுக்கு, தன் கத்தியால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்திவிட முடியுமென்கிற அசாத்தியமான துணிச்சல் வந்துவிடுகிறது. எப்போது ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஆயுதத்தைக் கையிலெடுக்கிறானோ அப்போதே எதிரியின் சாவோடு அவனது சாவும் உறுதியாகிவிடுகிறது. சில காலம் தள்ளிப்போகலாம். ஆனால், அவன் வாழ்வின் இறுதி அத்தியாயம் நிழலைப்போல் அவனைத் தொடரத் தொடங்கிவிடுகிறது.

ஆண்டிச்சாமி கொலைசெய்யப்பட்ட ஏழாவது நாள், செல்வமும் கோட்டைச்சாமியும் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். கோர்ட்டில் ஆஜராவதற்கு முந்தைய ஐந்து நாள்களும் சிவகங்கையில் அத்தை வீட்டில் பதுங்கியிருந்தவர் களுக்கு ராஜஉபசாரம் கிடைத்தது. தானும் ஒரு சம்பவக்காரனாகிவிட்டதால் கிடைத்த மரியாதை என  நினைத்த கோட்டைச்சாமி, அவர்களின் கண்களிலும் மனதிலும் ஆழமாகக் குடி கொண்டிருந்த அச்சத்தைக் கவனித்திருக்கவில்லை. கோட்டைச்சாமியின் வீட்டிலிருந்தவர்களால் அவன் இப்படியொரு சம்பவத்தைச் செய்வான் என்பதை நம்ப முடியவில்லை. தன் வாழ்வின் இறுதிக் காலத்திலிருந்த அவனது ஐயா மட்டும் கோட்டைச்சாமிக்குள்ளிருந்த அசலான மனிதனைப் புரிந்துகொண்டிருந்தார். “நம்மளுக் கெல்லாம் இந்தத் தொழில செய்றதுக்கும் இதுல நம்மளக் காப்பாத்திக்கிறதுக்கும் கத்தி தேவையா இருக்கு. சண்டையோ, சாவோ எல்லாமே தொழிலுக்காகத்தான். அவனுக்குத் தொழில் மேல அக்கறையும் இல்ல, ஏதாச்சும் செய்யணுங்கற நோக்கமும் இல்ல. இப்படியான ஆளுக ஒருக்கா ரத்தம் பாத்துட்டாய்ங்கன்னா அவய்ங்கள யாராலயும் கட்டுக்குள்ள வைக்க முடியாது. இனி எல்லாமே தனக்குக் கீழன்னுதான் நெனப்பான்... எதிரிங்க மட்டுமில்லய்யா நம்ம அங்காளி பங்காளிகளுமே சூதானமா இருக்கணும்” என எச்சரித்திருந்தார். அதிகாரத்தின் நிழல் யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் கோட்டைச்சாமியின் மேல் விழத் தொடங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 15

மதுரை மத்தியச் சிறைச்சாலையில், அவர்கள் இருவரைப் பற்றியும்தான் எல்லோர் மத்தியிலும் பேச்சாக இருந்தது. ‘ஆண்டிச்சாமி எத்தந்தண்டி ஆளு, இம்புட்டுக்கானு சின்னப்பயக வெதைய நசுக்கிக் கொன்ன மாதிரி கொண்டுவுட்டாய்ங் களேய்யா...’ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி ஆச்சர்யப்பட்டார்கள். கோர்ட்டிலிருந்து சிறைக்குக் கொண்டுவரப் பட்டபோது, காவலர்களால் இவர்கள்தான் கொலை செய்தார்கள் என்பதை நம்பவே முடியவில்லை. லேசாக மீசை அரும்பத் தொடங்கியிருக்கும் செல்வத்தையும், ஒடக்கான் போலிருக்கும் கோட்டைச்சாமியையும் பார்க்கும் எவர் ஒருவருக்கும் அவர்களால் கொலை செய்ய முடியுமென நினைக்கத் தோன்றாது. பதிவேட்டில் அவர்களின் அடிப்படைத் தகவல்களைக் குறித்துக்கொள்ள போலீஸ்காரர் பேரைக் கேட்டபோதுகூட இருவரும் சிரித்தபடியேதான் நின்றனர். இருவரையும் ஜெயிலர் ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள். பெரிய சம்பவம் செய்துவிட்டு வரும் குற்றவாளிகள், அதிகாரிகளுக்கு எப்போதும் தலைவலி. கூலிக்காகக் கொலை செய்கிறவனைவிடவும் கோவத்தால் கொலை செய்கிறவன் நிறைய எதிரிகளைச் சம்பாதித்துவிடுகிறான். ஜெயிலர் இருவரையும் வேண்டாவெறுப்பாகப் பார்த்துவிட்டு “வெளிய நீங்க யாரு என்னங்கறதெல்லாம் வேற, செயிலுக்குள்ள வந்துட்டா சத்தம் காட்டாம இருக்கணும். யாருகூடயும் சண்ட சத்தம் போடக் கூடாது...” எனப் பொதுவாக எச்சரிப்பதுபோல் எச்சரித்தார். “ரெண்டு பேரையும் குவாரன்டின்லயே போடுங்கய்யா” எனக் காவலர்களுக்கு உத்தரவிட, அவர்கள் அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையி லிருக்கும் மற்ற பத்து பிளாக்குகளைப்போல் இல்லை, இந்த குவாரன்டின். வெவகாரமான ஆட்களுக்கானது, அதனால் பாதுகாப்பும் அதிகம்.

மதுரை நகருக்குள் கஞ்சா வியாபாரத்தைக் கோட்டைச்சாமியின் குடும்பத்தினர் கட்டுப் பாட்டில் வைத்திருந்தாலும், இந்தச் சிறைச் சாலைக்குள் வியாபாரம் செல்லூர் கேங்கிடம்தான் இருந்தது. `எந்தக் காலத்துலயும் செயிலுக்குள்ள எந்தத் தொழிலும் செய்யக் கூடாது’ என்பது அவன் குடும்பத்தினரின் உறுதியான முடிவு. செல்வத்துக்கும் கோட்டைச்சாமிக்கும்தான் சிறைச்சாலை புதிது, அவர்களின் குடும்பத்தினருக்கு அப்படியல்ல. முதல் இரண்டு நாள்கள் தங்களைத் தொடரும் கண்களை அவர்கள் இரண்டு பேரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மெதுவாகப் பொருட்படுத்தத் தொடங்கியபோது அந்தக் கண்களில், கோபம், வெறுப்பு, பகை அத்தோடு பயம், பரிதாபமென ஏராளமான உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. கோட்டைச்சாமியின் குடும்பத்தைப் பொறுத்தவரை, இந்தச் சிறைச்சாலையில் நிகழ்ந்த சோமுவின் கொலை ஒருபோதும் சரிசெய்ய முடியாத வடுவாகவே மாறிப்போனது. செல்வத்தின் அப்பா முத்தையா, தன் வாழ்நாளின் பாதியை அந்தச் சிறைச்சாலைக்குள் கழித்தவர் என்பதால், அவருக்குப் பழக்கமான நீண்டகால தண்டனைச் சிறைவாசிகள் எல்லோரும் செல்வத்தைக் கவலையோடு பார்த்தார்கள். முத்தையாவுக்கு ஜெயிலிலிருக்கும் செல்வாக்கைக் கண்டு செல்வத்துக்கு ஆச்சர்யம். “ஏண்ணே எங்கப்பன் சரியான ஊளன்னு நெனச்சுட்டு இருந்தேன், இங்க பாத்தா ஆளாளுக்கு முத்தையா மகனாப்பான்னு தேடிவந்து பாக்கறாய்ங்க...” என செல்வம் சிரித்தான். அவனை முறைத்த கோட்டைச்சாமி, “உங்க ஐயா இத்தன வருஷமா ஜெயிலுக்கு வந்துபோறாரே யாரையாச்சும் பகைச்சுருக்காரா? எல்லாரையும் அனுசரிச்சுப் போற மனுஷன்டா. எங்க அப்பா சொல்லியிருக்காரு, மணி காலத்துல உங்கப்பாவுக்கு எம்புட்டு செல்வாக்கு இருந்துச்சுன்னு... அவர் நேரம் நல்லாருந்திருந்தா மனுஷன் மதுரையவே கட்டியாண்டு இருப்பாப்ள. உனக்குத்தாண்டா அவரோட அரும தெரியல” என நிதானமாகக் கூறினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 15

சிறைச்சாலைக்குள் ஒரு புதிய உலகம் செல்வத்தின் கண்களுக்குள் புலப்படத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மனிதர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்கிற கசப்பான நிஜம், குற்றவுலகின் குரூரங்களை மெல்ல அவனுக்குப் புரியவைத்தது. தன் அண்ணனைப்போல் சில்லறைத் திருடர்கள், அப்பாவைப்போல் சாமியார் கேஸ்கள், நிஜமான கொலை, கொள்ளை செய்துவந்தவர்கள் என எத்தனை விதமான மனிதர்கள்... முத்தையாவின் நெருங்கிய நண்பரான சில்வர் செல்லைய்யாவுக்குத் தான் இவனை நினைத்துப் பெரும் கவலை. “நீ கபடி வெளயாண்டு பெரிய ஆளா வருவன்னு உங்கப்பா சொல்லிட்டே இருப்பாரு... இப்பிடி அவசரப்பட்டுட்டியே செல்வம்...” என அடிக்கடி அவனிடம் சொல்லி வருத்தப்படுவார். என்ன சொல்லிச் சமாதானம் செய்வதெனத் தெரியாமல் செல்வம் அமைதியாக இருப்பான். முப்பது வருடங்களாகத் திருட்டுத் தொழில் செய்யும் அவர், வெள்ளிப் பொருள்களைத் தவிர வேறெதையும் திருடுவதில்லை. ஒருகட்டத்தில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில், வெள்ளிச் சாமான்கள் காணாமல்போனால் போலீஸ்காரர்கள் யோசிக்காமல் செல்லையாவைக் கைதுசெய்யுமளவுக்கு அவர் பிரபலம். “அது ஏங்கய்யா வெள்ளிச்சாமான மட்டும் திருடுறீங்க...” என செல்வம் ஆச்சர்யத்தோடு அவரிடம் ஒருமுறை கேட்டதற்கு, “என்னவோ தெரியலய்யா... வேற எதையும் திருட மனசு வரமாட்டிங்கிது...” எனச் சிரித்தார்.

ஆண்டிச்சாமியின் தரப்பினர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பழியெடுக்கக் கிளம்பக்கூடும் என்பதை கோட்டைச்சாமியின் அப்பா தெரிந்துவைத்திருந்தார். இது போன்ற பகையை வளர்ப்பதைவிடவும் பேசித் தீர்ப்பதுதான் காரியக்காரத்தனம் என அனுபவம் உணர்த்தியது. கத்தி எடுத்து செய்து முடிக்கும் காரியமல்ல என்பதால், பொதுவான ஆளாக இருந்து பிரச்னையைப் பேசித் தீர்க்க மாரியக்காவைச் சென்று பார்த்தார். பெரிய தலை விழும் சந்தர்ப்பங்களில் மேலும் சாவு விழாமல் முடிவுக்குக் கொண்டுவர, அக்காவால் மட்டுமே முடியும். இது போன்ற பஞ்சாயத்துகளுக்காக அக்கா காசு பணம் வாங்குவதில்லை. அதனாலேயே எல்லோருக்கும் அந்தக்கா மீது அலாதியான மரியாதை. ஆண்டிச்சாமியின் குடும்பத்தினரிடம் பேசி, பஞ்சாயத்துக்குச் சம்மதிக்க வைத்தது. வில்லாபுரத்தில் அக்காவின் வீட்டிலேயே பஞ்சாயத்து கூட, அக்காவின் மகள் பெரிய பித்தளைச் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். அந்தச் சொம்புத் தண்ணீரைப் பஞ்சாயத்துக்கு வந்திருந்த இரண்டு குடும்பத்திலிருந்தும் ஒருவர் வாங்கிக் குடித்தார்கள். பகையோடு வரும் யாரும் இங்கிருந்து பகையோடு செல்லக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு பஞ்சாயத்து தொடங்கும்போதும் இப்படி தண்ணீர் கொடுப்பது வழக்கம். ஆண்டிச்சாமியின் மச்சினன்கள், இரண்டு மகன்கள், பங்காளிகள் எல்லோருமே ஆத்திரத்தைக் காட்டிக்கொள்ள முடியாமல் வெறுப்போடு கோட்டைச்சாமியின் குடும்பத்தினரைப் பார்த்துக் கொண்டிருக்க, மாரியக்கா பொதுவாகப் பேசத் தொடங்கியது. “எப்பா திடுதிப்புனு இந்த மாதிரி ஒரு சம்பவம் ஆகிப்போச்சு. பகையாலயோ, தொழில் போட்டியாலயோ நடந்த கொல இல்ல இது. ரெண்டு சின்னப் பயகளோட போதவெறில நடந்த விபத்து. லேசான இழப்பில்லன்னு எனக்கும் தெரியும். ஆனா மேலும் மேலும் ஏதாச்சும் செய்யணும்னு போனா... அது பகையாத்தான் வளரும். அப்படி வர்ற பகைக்கு முடிவும் இல்ல. ரெண்டு பேருமே மரியாதையான குடும்பம், அதனால கொஞ்சம் யோசிங்க. கோர்ட்டுல தண்டனையாகுது, ஆகல... அது வேற விஷயம். ஆனா, உங்க பக்கத்துலருந்து நீங்க யாரும் எதுவும் செய்யக் கூடாது” என மாரியக்கா உறுதியாகச் சொல்ல, ஆண்டிச்சாமியின் ஆட்கள் அமைதியாக இருந்தனர். அவரது மூத்த மச்சினன் மட்டும் “எக்கா உன் பேச்ச மீறக் கூடாதுன்னு பஞ்சாயத் துக்கு வந்தோம். வீட்டுக்குச் சாமியா இருந்த மனுஷன கொன்னுருக்காய்ங்க. பதிலுக்கு பதில் செஞ்சாத்தான் எங்களுக்கு மரியாத. குறுக்க யாரு வந்தாலும் நாங்க விடப்போறதில்ல. அவன் தலைய எடுத்ததுக்கு அப்றம் வேணா நீ சொன்ன மாதிரி பகைய முடிச்சுக்கலாம். அதுவரைக்கும் இந்த மாதிரி வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டு இருக்காத” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு நடக்க, அவனோடு வந்தவர்களும் எழுந்து சென்றனர்.

(ஆட்டம் தொடரும்)