Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 16

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

சந்தர்ப்பங்கள் மட்டும்தான் நட்பையும் உறவுகளையும் தீர்மானிக்கின்றன.

காலம் எல்லா வலிகளையும் மறக்கச் செய்துவிடுவ தில்லை. தனிமனிதரின் அதிகார வெறியால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்ஸி, ஒருபுறம் இந்திய மக்களின் குரல்வளைகளை நெரித்தபோதும், அது அதிகாரத்துக்கு எதிரான குரல்களின் வலிமையையும் உலகமறியச் செய்தது. ஒடுக்குமுறைகளை மீறின போராட்டங்களின் வழியாக ஒரு புதிய அரசியலை எல்லோரும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். மதுரையைப் பொறுத்தவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்ததோடு, ஏராளமான பொதுக் கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியவர் மூர்த்தி என்பதால், அரசியல் வட்டாரத்தில் அவரது பெயர் பரபரப்பாக அடிப்படத் தொடங்கியது. வெவ்வேறு ஊர்களில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், சிறையில் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு பின்தொடரத் தயாராக இருந்தார்கள். அவரைச் சுற்றிப் பாதுகாப்பு வளையமெனச் சுற்றிவரும் கல்லூரி மாணவர்களைப் பார்க்கும்போது, சிறைத்துறை அதிகாரிகளுக்கே நடுக்கமெடுக்கும். இதனாலேயே காளியிடமும் சோமுவிடமும் காட்டிய கடுமையை மூர்த்தியிடம் காட்டவில்லை.
ரெண்டாம் ஆட்டம்! - 16

எமர்ஜென்ஸி விலக்கிக்கொள்ளப்பட்டு சிறையிலிருந்தவர்கள் விடுதலை செய்யப் பட்டபோது மூர்த்திக்குப் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. கட்சித் தொண்டர்களும், கல்லூரி மாணவர்களும் சிறைச்சாலையி லிருந்து சோலை அழகுரபுரத்திலிருந்த வீட்டுக்கு ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்றார்கள். திறந்த வாகனத்தில் நின்றபடி அவர் வர, வாகனத்தின் முன்னும் பின்னும் ஏராளமான மக்கள் கூட்டம். இப்படியானதொரு பிரமாண்ட வரவேற்பை அவரே எதிர் பார்த்திருக்கவில்லை. மக்கள் திரளின் நடுவே சென்ற அந்த ஊர்வலம், அவருக்கே அவரது முக்கியத்துவத்தை உணர்த்தியது. இந்தத் தருணத்தில் தன் அருகில் சோமு இல்லாமல் போனதற்காக வருத்தப்பட்டார். தெருவில் சில்லறைச் சண்டைகள் செய்துகொண்டிருந்த மணி, போலீஸ்காரர்களைவைத்து தன் ஆட்களைக் கொல்லும் அளவுக்கு வில்லங்கமான ஆளாக மாறியதற்குத் தன் மகளும் ஒரு காரணம் என்கிற கசப்பான உண்மையை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சிங்கப்பூரி லிருந்து அவரின் மகன் திரும்பி வந்திருந்தான். ஊர்வலத்துக்கான பெரும்பகுதி ஏற்பாடுகளை அவனே நேரடியாக முன்னின்று கவனித்ததைப் பார்த்த கட்சிக்காரர்கள், ‘தம்பிக்கு அரசியல் ஆச வந்திருச்சுபோல’ எனக் காதுபடப் பேசிக்கொண்டனர்.

சந்தர்ப்பங்கள் மட்டும்தான் நட்பையும் உறவுகளையும் தீர்மானிக்கின்றன. மூர்த்தி விடுதலையாவதற்கு இரண்டொரு நாள்கள் முன்பாகவே, சோலை அழகுபுரத்திலிருந்து வீட்டை காலிசெய்துகொண்டு செல்லூருக்குச் சென்றுவிட்டான் மணி. மூர்த்தியின் நிழலாக இருந்து, எல்லா அதிகாரங்களையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவனது ஆசைகள் இத்தனை சீக்கிரம் நொறுங்கிப்போகும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவரும் ஒவ்வொருவருமே அடிபட்ட பாம்புகள். அவர்களால் நீண்டநாள்கள் இவனை எதுவும் செய்யாமல் விட முடியாது. முடிந்தவரை தற்காத்துக்கொள்வது மட்டுமே புத்திசாலித்தனம் என வேணி அவனுக்குப் புரியவைத்தாள். ‘‘என் வயித்துல இருக்க புள்ள மட்டும் பொறக்கட்டும். பழசல்லாம் மறந்துட்டு எங்கப்பா அவரே தேடி வர்றாரா இல்லியான்னு பாரு...’’ என அடிக்கடி தன் வயிற்றைத் தொட்டுக்காட்டிச் சொல்வாள்.

மணிக்கு சாவை நினைத்தெல்லாம் அச்சமில்லை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பம் என்கிற இந்தப் புதிய பந்தங்கள் தன்னை விட்டுப் போய்விடக் கூடாதெனக் கவலைப் பட்டான். பெரிய தலைகளெல்லாம் சிறையிலிருந்த காலத்தில் மணியோடு இருந்தவர்கள், சூழல் மாறத் தொடங்கியதும் கழன்றுகொள்ளத் தொடங்கி னார்கள். மருதுவும் முத்தையாவும் மட்டும்தான் எப்போதும்போல் விசுவாசமாக இருந்தார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 16

விடுதலையான அடுத்தநாளே சோமுவின் வீட்டுக்குச் சென்று அவனது குடும்பத்தைச் சந்தித்தார் மூர்த்தி. சோமுவின் இழப்பால் அவனது குடும்பம் சோர்ந்துபோகவில்லை என்பதை மணியின் மீது அவர்கள் வெளிப் படுத்திய வஞ்சத்தைக்கொண்டு அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘‘நீங்க என்ன கேட்டாலும் செஞ்சு குடுக்க கடமப்பட்டிருக்கன்யா... எதுண்டாலும் கூசாம கேளுங்க’’ என சோமுவின் தம்பியிடம் சொல்ல, ‘‘எங்களுக்கு இருக்க தொழில் போதும்ணே. இதவெச்சு இந்தக் குடும்பம் தழச்சிரும். எங்களுக்குத் தேவ ஒண்ணே ஒண்ணுதான். மணியோட தல. அத எடுக்கறதுக்கு குறுக்க நீங்க நிக்கக் கூடாது’’ என அவர் முகத்தைப் பார்க்காமல் வேறுபக்கமாகத் திரும்பிச் சொன்னான். ‘‘அவன் தலைய எடுத்துட்டு வந்து என் கால்ல போடுய்யா... அந்த நாளுக்குத்தான் நானும் காத்திருக்கேன்’’ என்ற மூர்த்தி எழுந்து அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தார். ‘‘ஆளுங்க, ஆயுதம், காசு... என்ன சப்போர்ட்டு வேணும்டாலும் எங்கிட்ட கேளு. நான் தர்றேன். அவன முடிச்சுவுட்ருங்க’’ என்று சொல்லிவிட்டு இரண்டு மஞ்சள் பை நிறைய ரூவாய்க் கட்டுகளை அவனிடம் நீட்டினார். ‘‘எதுக்குண்ணே இதெல்லாம்?’’ என சோமுவின் தம்பி சங்கடமாகப் பார்க்க, ‘‘இதெல்லாம் உங்கண்ணனுக்குச் சேர வேண்டியதுதான். வாங்கிக்க’’ என வலுக்கட்டாயமாக அவனது கைகளில் திணித்தார்.

காளி ஆளே உருமாறிப் போயிருந்தான். மூர்த்தி அண்ணன் ஆதரவு இருந்ததால் எப்படியும் பழைய மாதிரி ஆகிவிடலாம் என்கிற நம்பிக்கை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்தது. ஆளும் பேருமாய் நிறைந்து கிடந்த வீட்டில் மனைவியோடு தனியாகக் கிடந்தபோது, ‘மார்க்கெட்டிலிருந்த சாதாரண மனிதனாகவே இருந்திருக்கலாமோ’ என மனம் சில வேளைகளில் யோசிக்கும். அவன் சோர்ந்துபோய்விடாதபடி சுப்புத்தாயி அவனைப் பராமரித்துக்கொண்டாள். மகள்கள் கண்ணுக்கு முன்னால் வளர்ந்து நிற்க, எல்லா பொறுப்புகளையும் சுப்பு தன்வசம் எடுத்துக்கொண்டிருந்தாள். சுப்புத்தாயி மீதிருந்த மரியாதையின் காரணமாக அவள் கேட்காமலேயே கரிமேடு மார்க்கெட்டை அவளுக்கு மணியும் மற்றவர்களும் விட்டுக் கொடுத்திருந்தார்கள். எல்லோரையும் அனுசரித்துப் போகக்கூடிய அவள் போக்கு நல்ல செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்திருந்தது. மார்க்கெட்டிலும், கரிமேட்டைச் சுற்றிய கடைகளிலும் அவளுக்கு நல்ல மதிப்பிருந்தது. தன்னிடமிருந்த தாட்டியமும் தெறமும் அவளிடம் வெளிப்படுவதைக் கண்டு காளி மகிழ்ச்சியடைந்தான். தனக்குப் பின்னால் தன் குடும்பத்துக்குப் பாதுகாப்பு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்ட காளி, மூர்த்தி அண்ணனிடம் எப்போதுமில்லாமல் ஒரு கோரிக்கையை வைத்தான். ‘எண்ணே என் சம்சாரத்துக்கு எங்க ஏரியால நல்ல செல்வாக்கு இருக்கு. நீ மனசுவெச்சா கவுன்சிலருக்கு நிக்கவெக்கலாம்’ எனக் கேட்டபோது மறுக்காமல் அவர் ஒப்புக்கொண்டார். அவர் உறுதியளித்த பிறகுதான் சுப்புவிடம் விஷயத்தைச் சொன்னான் காளி. ‘‘ஏய் உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சிக்கிருச்சா... நான் கவுன்சிலரா நின்னு என்ன ஆகப்போகுது இப்ப?’’ என அவள் பதறினாள். ‘‘இல்ல சுப்பு. நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். நான் இல்லயிண்டாலும் உங்களுக்குப் பாதுகாப்பு முக்கியம். அதுக்கு இதான் சரியான வழி’’ என்று காளி அவளை சமாதானப்படுத்த, அரைமனதோடு அவளும் சம்மதித்தாள்.

மூர்த்தியின் ஆதரவோடு சோமுவின் குடும்பம் மணிக்கு லைன் போட்டது. செல்லூருக்குள் நுழைந்து அவனைத் தூக்கும் துணிச்சல் ஒருவருக்கும் இல்லை. அந்த எல்லையைத் தாண்டி வருவதற்காகக் காத்திருந்தார்கள். தன்னைச் சூழ்ந்திருக்கும் கழுகுகளின் வெறியை நன்கறிந்த மணி, தன் எல்லையைத் தாண்டாமலிருந்தான். வேணி, பிரசவத்துக்காக பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அவளோடு இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்... குழந்தை பிறந்ததும் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்கிற ஆசை அவனை வதைத்தது. ஆனால், செல்லூர் எல்லையைத் தாண்டும் துணிச்சல் வரவில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் விடிகாலையில் குழந்தை பிறந்த தகவலை முத்தையா வந்து சொன்னபோது, அதற்கும் மேல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியாதென மணி கிளம்ப முடிவுசெய்தான். ‘‘முத்தையா... போய் நம்ம வேலுவக் கூட்டியாடா...’’ என்றதும் ஏன் எதற்கெனப் புரியாமல் முத்தையா கிளம்பிச் சென்றான்.

பொழுது விடிய இன்னும் நேரமிருந்தது. மணி, பாதுகாப்புக்கு சில ஆயுதங்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போதே தூக்கக் கலக்கத்தில் வேலு அங்கு வந்து சேர்ந்தான். ‘‘என்னண்ணே இந்நியாரத்துல?’’ என்றவனிடம், ‘‘வேலு, எனக்கு மொட்டையடிச்சு விட்றா...’’ என மணி ஒரு நாற்காலியில் அமர, முத்தையா என்ன நடக்கிறதெனப் புரியாமல் அவனைப் பார்த்தான். வேலு கண்ணைக் கசக்கிக்கொண்டு, ‘‘என்னண்ணே சொல்ற?’’ எனக் கேட்க, மணி திரும்பி அவனை முறைத்தான். ‘’சொன்னத செய்டா வெண்ண...’’ என்றதும், மணியின் வீட்டில் எப்போதும் சவரம் செய்யப் பயன்படுத்தும் சவரக்கத்தியை எடுத்து வேக வேகமாகச் சுத்தம் செய்தான் வேலு. அந்த அறையில் பெரும் மெளனம் சூழ, வேலு அவனுக்கு மொட்டையடித்துவிடத் தொடங்கினான். தலையையும் முகத்தையும் மழித்த பிறகு, மணியை அவர்கள் இருவராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. முத்தையாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, வேலுவோடு மணி ஆஸ்பத்திரிக்குச் சென்றான்.

அதிகாலையின் மெல்லிய வெளிச்சம் மெல்ல பரவத் தொடங்கியிருந்தது. பிரசவ வார்டில் பாதி உறக்கத்திலிருந்த தன் மனைவியையும் அவளுக்கு அருகில் பிஞ்சுக் கண்களை மூடி உறங்கும் பிள்ளையையும் பார்த்த பிறகு, ‘‘இதுக ரெண்டுக்காகவாச்சும் உசுரக் காப்பாத் திக்கணும் மணி’’ என தழுதழுத்தக் குரலில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். முதன்முறையாக உயிரின் மீதான பயம் வந்தபோது, தற்காலிகமாக இந்த ஊரைவிட்டுச் செல்வதுதான் பாதுகாப்பு என்று உரைத்தது. வேணியை எழுப்பாம லேயே அவசரமாக வெளியேறியவன், யார் கண்ணிலும் படாமல் மதுரையைவிட்டு வெளியேறும் முடிவோடு நடந்தான்.

(ஆட்டம் தொடரும்)