Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 17

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

இத்தன நாளா இவனப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம இருந்துச்சு. இப்ப எந்த நேரத்துல என்னாகுமோன்னு ஈரக்கொல நடுங்கிட்டு இருக்கு

சிறைச்சாலைகள், ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகின்றன. தனிமையும் வெறுப்பும் மனிதர்களின் மீதிருந்த நம்பிக்கைகளையெல்லாம் அழித்துவிடுகின்றன. செல்வத்திடமிருந்த இளமையின் அறியாமைகளையெல்லாம் சிறைச்சாலை நாள்கள் முற்றாக அழித்துவிட்டு, மனிதர்களைப் புரிந்துகொள்ள பக்குவப்படுத்தியிருந்தன. அந்தச் சிறைச்சாலைக்குள் இருக்கும் எழுபது சதவிகிதமானவர்கள் தங்களை அறியாமல் குற்றவுலகுக்குள் மாட்டிக்கொண்டவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டபோது, செல்வம் அவர்களுக்காக வருத்தப்பட்டான்.

மனைவி மக்களைப் பிரிந்த துயரம் ஒருபுறமும், சிறைக்குள்ளிருக்கும் சக கைதிகளின் அத்துமீறல்கள் இன்னொரு புறமுமாக வதங்கிக்கிடந்தார்கள். வயதானவர்களுக்கு இப்படியான பிரச்னை என்றால், முதன்முறையாகச் சிறைச் சாலைக்குள் வரும் இளங்குற்றவாளிகள் வேறுவிதமான பிரச்னையை எதிர்கொண்டார்கள். நீண்டகாலத் தண்டனைச் சிறைவாசிகள், இரக்கமே இல்லாமல் அந்த இளைஞர்களைப் பாலியல் வல்லுறவு செய்வதை செல்வத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவனால் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது, சிறைச் சாலைக்கென எழுதப்படாத சில விதிகள் உண்டு. ஒரு பிளாக்கில் நடக்கும் பிரச்னைகளுக்குள் இன்னொரு பிளாக் கைதிகள் தலையிடக் கூடாது. அதேபோல ஒருவர் செய்யும் தொழிலில் இன்னொருவர் தலையிடக் கூடாது. இந்த விதிகளை மீறினால் யுத்தத்தில்தான் முடியும்.

ரெண்டாம் ஆட்டம்! - 17

செல்வம் ஜெயிலுக்கு வந்து ஒரு மாதம் கடந்த நிலையில், முத்தையா வேறு ஒருவருக்கான வழக்கில் சரண்டராகி ஜெயிலுக்குள் வந்துவிட்டார். செல்வத்தின் பாதுகாப்பு குறித்து அவருக்கிருந்த அச்சம் அவரை வீட்டில் இருக்கவிட வில்லை. சில்வர் செல்லையா இருந்த ஆறாவது பிளாக்கில் முத்தையாவைப் போட்டிருந்தார்கள். வெளியிலிருந்த உலகத்தைவிடவும் சிறைச்சாலைக்குள் தனக்கு இணக்கமான ஓர் உலகத்தை அவர் வைத்திருந்ததை செல்வம் கண்டுகொண்டான். “செல்வம்... சூதானமாத்தான இருக்க? இங்க இருக்கவைய்ங்கல்லாம் மொத தடவ வார பயகல என்ன பாடு படுத்துவாய்ங்கன்னு இருவத்தஞ்சு வருஷத்துக்கும் மேல பாத்துக்கிட்டு இருக்கேன். அதான் எனக்கு உசுரே இல்லாம இருந்துச்சு...” எனக் கண்கலங்க, ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, எல்லாருக்கும் உன்னையத் தெரியுங்கறதால யாரும் என்னய எதும் செய்யல...’’ எனச் சிரித்தான். முத்தையா, காய்கறித் தோட்டத்தில் தான் வளர்த்த செடிகளையும் மரங்களையும் காட்டி சந்தோஷப்பட்டபோது, அவருக்குள் இத்தனை காலம் பார்க்காத மனிதனை செல்வம் பார்த்தான்.

கடும் மழை பெய்துகொண்டிருக்க, கைதிகள் பிளாக்குக்குள்ளேயே தாயம் விளையாடுவதும், கதைபேசுவதுமாக நேரத்தைக் கழித்தனர். முத்தையா, சில்வருடன் குவாரன்டினிலிருக்கும் செல்வத்தைப் பார்க்கச் சென்றார். சுவர்கள் மழையில் நனைந்து ஈரமாகியிருந்தன. ஈரவாடை பிளாக் முழுக்க நிறைந்திருக்க, ரயில் பூச்சிகள், வண்டுகள் பிளாக்குக்குள் சுற்றிக்கொண்டிருந்தன. பழைய ஜமுக்காளத்தைச் சுருட்டித் தலைக்கு வைத்துப் படுத்திருந்த செல்வம், மீண்டும் கபடி மைதானத்துக்குள் கால்வைக்க முடியுமாவென கவலையோடு யோசித்துக்கொண்டிருந்தான். பெரியவர்கள் சிலர் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில்வரிடம் ஒரு பெரியவர், “சில்வரு... வீட்ல எதுமே சரியா இல்ல, ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு வந்துட்டு இருக்கு. என்ன ஏதுன்னு ஜாதகத்தப் பாத்துச் சொல்லேன்” என்று கேட்க, சில்வர் கரிக்கட்டையால் ஜாதகக் கட்டத்தைத் தரையில் வரையத் தொடங்கினார். “பேரு... ராசி, நட்சத்திரம் சொல்லுப்பா...” எனக் கேட்டபடியே கிரக நிலைகளைக் கட்டங்களுக்குள் எழுதத் தொடங்கினார். கண்மூடி “மூகாம்பிக தாயே...” என வேண்டிக்கொண்டவர், நிதானமாக ஜாதகக் கட்டத்தைக் கவனித்தார். கட்டங்களில் சில கிரகங்களை மாற்றி எழுதினார். வெளியே மழை திடீரென வலுக்க, ஆட்களின் பேச்சு சத்தம் குறைந்து மழைச் சத்தம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. தொண்டையைச் செருமிக்கொண்டபடி எதிரிலிருந்தவரைப் பார்த்த சில்வர், “ம்ம்ம்… கஷ்டகாலம்தான்… எப்பவோ யாரோ விட்ட சாபம். இப்ப திருப்பி அடிக்கிது. ஒரு மூணு மாசத்துக்குக் கொஞ்சம் கடுசாத்தான் இருக்கும். வீட்ல இருக்கவககிட்ட வெளியூர் எங்கியும் போக வேணாம்னு சொல்லு. வியாழ வியாழக் கிழம, புள்ளையாருக்குப் போய் வெளக்குப்போடச் சொல்லு… எல்லாம் சரியாப்போகும்…” கண்ணை மூடிக் கும்பிட்டு முடித்துக்கொண்டார். எதிரில் கவலையோடு ஜாதகம் கேட்டவர், முப்பது ரூபாயை எடுத்து பவ்யமாக சில்வரிடம் கொடுத்தார்.

ரெண்டாம் ஆட்டம்! - 17

முத்தையாவுக்கு செல்வத்தின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் எனத் தோன்ற, “ஏண்ணே, இந்தப் பயலுக்கும் ஒரு தடவ பாத்துச் சொல்லுண்ணே. இத்தன நாளா இவனப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம இருந்துச்சு. இப்ப எந்த நேரத்துல என்னாகுமோன்னு ஈரக்கொல நடுங்கிட்டு இருக்கு” என்றார். சில்வர், முத்தையாவுக்கு பதில் சொல்லாமல், ஒரு மூலையில் படுத்துக்கிடந்த செல்வத்தைக் கையசைத்து வரச் சொன்னார். அவன் எழுந்து வர, வேறொரு கும்பலுடன் பேசிக்கொண்டிருந்த கோட்டைச் சாமியும் ஆர்வமாக ஜாதகம் பார்க்கும் இடத்துக்கு வந்தான். “இப்பிடி கெழக்க பாத்து உக்காரு செல்வம்” சில்வரின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் அப்படியே உட்கார்ந்தான். ஜாதகக் கட்டத்தை அழித்துவிட்டு, புதிதாக வரைய, முத்தையா அவன் ராசி நட்சத்திரத்தைச் சொன்னார். கண்ணை மூடி வேண்டிக்கொண்ட சில்வர், கட்டங்களில் நிதானமாக கிரகங்களை எழுதினார். அவரைச் சுற்றியிருந்த எல்லோரும் என்ன சொல்லப்போகிறார் எனத் தெரிந்துகொள்ள ஆர்வமாகக் காத்திருந்தனர். பத்துப் பதினைந்து நிமிடங்கள் எதுவுமே பேசாமல் கட்டங்களை அழிப்பதும் எழுதுவதுமாக இருந்தவர், இறுதியாக முத்தையாவையும் செல்வத்தையும் பார்த்துப் பேசத் தொடங்கினார். “முத்தையா உன் கருமாயமெல்லாம் தீரப்போகுது. இவனுக்காக நீ பயப்படாத. ஒருநா இல்ல ஒருநா மதுரையவே கட்டி ஆளப்போறான்... அஞ்சு வருஷம் ஆகலாம் இல்ல பத்து வருஷம் ஆகலாம். ஆனா, இவென் ராசிக்கு இவனுக்கு எல்லாமே கூடிவரும்… இப்போதைக்கு இதுக்கு மேல எதையும் நான் சொல்ல முடியாது” என்றவர் கண்ணை மூடி அம்மனை வணங்கிவிட்டு எழுந்துகொள்ள, முத்தையா நம்ப முடியாமல் அவரையே பார்த்தார். ‘மதுரையவே கட்டி ஆளப்போறான்’ என்று அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வெளிப்பார்வைக்கு செல்வம் கேலியாகச் சிரித்தாலும், உள்ளே அவனுக்குள் அதிகாரத்துக்கான வேட்கை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. “எலேய் செல்வம்... நீ பெரியாளா ஆனதும் என்னைய வேலக்கி சேத்துக்கடா...” என கோட்டைச்சாமி கேலியாகச் சொன்னாலும், அதில் ஆழமான ஏளனமிருந்தது. “எண்ணே அவருதான் ஏதோ சொல்றாருன்னா நீ வேற...” என்றபடி செல்வம் சமாளித்தான். பிளாக்கிலிருந்து வெளியேறப்போன சில்வர், நின்று திரும்பிப் பார்த்தார். “செல்வம்... நான் சொன்னது அம்மனோட வாக்கு. களவாணிப்பய வாக்கு பலிக்காதுன்னு நெனைச்சிடாத... பலிக்கும். உன் கைல ரத்தக் கற படணுங்கறது விதி. இனிமே நிறைய படும். அந்தக் கறதான் உன்னய யாருமே ஜெயிக்க முடியாத ஆளாவும் மாத்தும். இதெல்லாம் நடக்கறப்போ என்னய நெனச்சுக்குவ...” என்று சொல்லிவிட்டு வெளியேறிச் சென்றார்.

செல்வத்தைத் தவிர மற்றவர்கள் சில்வர் செல்லையாவின் வார்த்தைகளை எப்போதோ மறந்துபோய்விட்டார்கள். மழைக்குப் பிறகான ராப்பூச்சிகளின் சத்தத்தைக் கேட்டபடியே செல்வம் புரண்டு படுத்தான். அவனையும் அறியாமல் அவன் கைகளில் சிவப்பு நிறம் படர்வதைப் போலிருந்தது. ரத்தத்தின் வாசனையை மிக அருகில் உணர்ந்தபோது திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அது ரத்தத்தின் வாசனையா... அதிகாரத்தின் வாசனையா? குழப்பமும் சந்தேகமுமாக இருந்தது. எழுந்து நின்றபோது அவனைச் சுற்றி பேராசையின் நிழல் மெல்ல மெல்ல விரியத் தொடங்கியது. அந்த நிழல் தன்னை ஆக்கிரமிக்க அனுமதித்தவன் கண்ணை மூடிக்கொண்டபோது, தலையில் மகுடமும் கையில் வாளும் இருப்பதாக நினைத்துக்கொண்டான். எத்தனை உயிர்களைக் குடித்தாலும் தனக்கான மகுடத்தை இந்த வாள் பெற்றுத் தருமென அவன் மனம் நினைத்துக்கொண்டது. எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க, செல்வத்தின் மனம் மட்டும் பெரும் போராட்டத்தில் தவித்துக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு, ஆள் எண்ணிக்கைக்காக எல்லோரையும் பிளாக்கிலிருந்து வெளியேற்றியபோது உறக்கமில்லாத செல்வத்தின் கண்கள் வீங்கிப்போயிருந்தன. “என்னாச்சுடா... மூஞ்சில்லாம் ஒரு மாதிரியா இருக்கு?” எனக் கோட்டைச்சாமி கேட்க, “ஒண்ணு மில்லண்ணே…” என செல்வம் சிரித்தான். இன்றைக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என வக்கீல் சொல்லியிருந்ததால் கோட்டைச்சாமியும் செல்வமும் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு காத்திருக்கத் தொடங்கினார்கள். காலை உணவாகக் கொடுத்த வெண்பொங்கலைக்கூட இருவருக்கும் தொடப் பிடிக்கவில்லை. “வீட்ல போயி கறிக்கஞ்சி குடிப்பம்டா...” என கோட்டைச்சாமி உற்சாகமாகச் சொன்னான். செல்வத்துக்குப் பசியே இல்லை. இன்னும் பல நாள்களுக்குப் பசியே தோணாது என்பதுபோல் சில்வரின் வார்த்தைகள் நிஜமாகும் நாள்களை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினான். இருவரையும் வாய்தாவுக்காக நீதிமன்றம் அழைத்துச் சென்றார்கள். வக்கீல் வாக்களித்தபடியே அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இதுவரையில்லாத புது மனிதர்களாக இருவரும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வர, கோட்டைச்சாமியின் ஐயா “கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேரும் சிவகங்கைலயே இருங்கய்யா, அவய்ங்க சீரில்லாம இருக்காய்ங்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப்போகும்...” என்றார். எதற்கும் பயப்படும் இடத்தையெல்லாம் கடந்துவிட்ட கோட்டைச்சாமி “வரட்டும்ப்பா யாரு தாட்டியக்காரன்னு பாத்திரலாம்” என சிரித்தபடியே காரில் ஏறிக்கொண்டான்.

(ஆட்டம் தொடரும்)